Sunday, February 10, 2019

கார்கடல் – மைந்தர் மெய் தீண்டல்



"நீங்கள் என்னை தொட்டிருந்தால் நான் பிறிதொருவனாக ஆகியிருப்பேனாஇவ்விருளும் அலைக்கழிப்பும் அற்றவனாக சிறப்புற்றிருப்பேனா?"

வெண்முரசின் வரிகளில் ஜயத்ரதனின் இந்த கூற்றைப் போல் சமீபத்தில் மனதைக் கலங்கடித்த வரி இல்லை என்பேன். இதனுடன் இணைத்து வாசிக்க வேண்டிய வேறு இரு இடங்கள் கார்கடலில் வருகின்றன. 

1) தன் பாடி வீட்டில் இருந்து கிளம்பும் கிருதவர்மனிடம் ஜயத்ரதன் அர்ஜுனனைஅவன் இரந்து கேட்டும் ஒரு நாழிகை நேரம் தடுத்து நிறுத்திய கீழ்மைக்குக் கூறும், "அக்கீழ்மையை நான் ஏன் இயற்றினேன் என்று தெரியுமாஎல்லா பெருங்கீழ்மைகளும் உளம்தாளா பேருணர்வு ஒன்றால்தான் இயற்றப்படுகின்றன!என்ற இடம். எந்த பேருணர்வு அது?

2) அபிமன்யு களம் பட்ட இரவில் தன் எஞ்சியிருக்கும் ஒரே மைந்தனான சுருத கீர்த்தியை தன்னுடன் இருக்கச் சொல்லும் அர்ஜுனன்மைந்தனின் தீண்டலில் கண்ணயர்கையில்சுருதகீர்த்தி விழி நீர் உகுக்கும் இடம். அதைக் காணும் ஜயத்ரதனின் ஒற்றன்அவன் அபிமன்யுவிற்காக அழுதான் என்கிறான். ஜயத்ரதன் “அபிமன்யுவுக்காக என எப்படி தெரியும்?” என்கிறான்.

ஆம், சுருதகீர்த்தி அழுதது அபிமன்யுவிற்காக அன்று. தந்தை தன் மீதும், உடன்பிறந்தான் மீதும் வைத்திருக்கும் பேரன்பை, தாங்கள் அவருக்கு எவ்விதம் பொருள்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்ததால் வந்த கண்ணீர். இதை உணர இயலாததால் தான் அபிமன்யு நிலையற்றவனாக, கொந்தளிப்புடனேயே எப்போதும் இருந்து களம்பட்டிருக்கிறான். ஒருவேளை ஜயத்ரதன் அர்ஜுனனை புக விட்டு அபிமன்யுவை காக்க வைத்திருந்தால் கூட அவன் இதை உணர்ந்திருக்க இயலாது. அர்ஜுனன் கூட தனது பிள்ளைத் துயர் எத்தகையது என்பதை அறிந்திருக்கவியலாது. உபபாண்டவர்களில் தந்தையின் நேரடி உணர்வு என்னவென்றே தெரியாமல் வளர்ந்தவர்கள் அர்ஜுனனின் மைந்தர்களே. சுருதகீர்த்தியாவது பிரதிவிந்தியனை அவ்வாறு கண்டுகொண்டிருந்தான். அபிமன்யு தான் பாவம். எனவே தான் அலைகழிந்து கொண்டே இருந்தான். ஒரு வகையில் அது அர்ஜுனனின் அலைகழிப்பும் கூடத் தான். பாண்டுவின் மரணத்தில் மிகவும் பாதிக்கப்பட்டவன் அர்ஜுனனே. அன்று துவங்கி அவன் தந்தை உருவாக ஒருவரைத் தேடிக் கொண்டே இருக்கிறான். முதலின் குருவான துரோணரை அவ்விடத்தில் வைத்து பார்க்கையில் அவருக்குத் தான் மைந்தனின் இடத்தில் இல்லை என்பதை அறிந்து நொந்து போகிறான். அஸ்வத்தாமனுக்கும்அவனுக்குமான பிளவின் வேர் இதுவே. துருபதின் அவமான நிகழ்வில் துரோணர் அவனிடம் தன்னிடத்தை முற்றிலுமாக இழந்த பின் அவன் தருமனை அவ்விடத்தில் வைத்து பார்க்கிறான். பலராமனுக்காக படை வேண்டி இரந்த துரியனை கைவிட்ட அத்தருணத்தில் தருமனும் அவ்விடத்தை இழக்கிறான். இறுதியாக தோழனாக இளைய யாதவனைக் கண்டடைகிறான். இருப்பினும் பாண்டுவின் இடத்தை இப்போது வரையும் யாராலும் நிரப்ப இயலவில்லை. கிராதத்தில் பாண்டுவை இகழ்வதன் மூலமே அர்ஜுனனின் மீது வெறுப்பைத் திரட்டிக் கொள்கிறார் இளைய யாதவர் என்பதில் இருந்து இதை நாம் அறியலாம். பாண்டு தனக்களித்து மறைந்ததைப் போல ஒன்றை தன் மைந்தர்களுக்குத் தந்துவிடலாகாது என்றே அவன் இத்தனை காலமும் மைந்தருடன் தொலைவிலே இருக்கிறான். ஒரு வகையில் அவனும் ஒரு பிருஹத்காயன் தான். அதன் பொருளின்மையே அவனை வதைக்கிறது. தான் தந்தையே என்பதை அறிகிறான். எனவே தான் சுருத கீர்த்தியை தன்னுடன் தங்கச் சொல்கிறான். அவன் கை பட்டதும் உடல் ஒய்ந்து துயில் கொள்கிறான். ஜாத தேவனின் மைந்தனிடம் தன் தாய்மையை உணர்ந்த அவன் தன்னுள் இருக்கும் தந்தையை உணர்ந்த இரவு அது. அர்ஜுனனில் இருந்த பிருத்ஹாயனுக்கு ஜயத்ரதன் அளித்த மெய்மையே அவன் இயற்றிய அக்கீழ்மை. அதையே பேருணர்வு என்கிறான் அவன்.

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்