Thursday, February 21, 2019

பிரயாகை



அன்புள்ள ஜெயமோகன் சார்,

இன்று வெண்முரசின் பிரயாகையை வாசிக்கும்போது பிரயாகை என்றால் என்ன?   என்று கேள்வி எழுந்தது. ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் சங்கமம் ஆவதன் குறியீடா? ஏன் என்றால்  அதில் பாண்டவர்கள் திரௌபதியை மணந்தவுடன் அது முடிந்துவிட்டது . நதிகள் சங்கமம் ஆகின்றதை பிரயாகை என கொண்டாலும் நமது இந்த வாழ்வில் அது எங்கேயோ கனக்ட் ஆகவில்லை என்றால் இவ்வளவுகாலம் நீடிக்கமுடியாது. இல்லை சங்கமங்கள் அனைத்தும் பிரயாகை தானா? 

வெண்முகில் நகரம் இருபதாம் அத்தியாயத்தில்   பாஞ்சாலியின் மணத்தன்னேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அடிவாங்கி மலைப்பாதைகளின் வழியாய் பால்ஹிக நாட்டிற்கு திரும்பிகொண்டிருக்கும் சல்யரோடு  பூரிசிரவஸ் தனது தந்தையோடும் சகோதரர்களோடும் அறிமுகமாகிறான். பால்ஹிகர் ஏன் மலைநாட்டுக்கு ஓடி வந்தார் என சல்லியர் பூரிசிரவசிடம் கேட்டு "“சந்தனுவின் மைந்தர்களை அவர் பார்த்ததே இல்லை, அவர் புண்பட்டு மலைக்கு ஓடிவந்த விலங்கு” என கூறிவிட்டு  “சைப்யபுரியின் நிலவறையில் இன்றும் அவர் வாழ்கிறார். முதுமையில் தசைகளெல்லாம் தளர்ந்தபின்னரும் பேராற்றல் கொண்டவராகவே இருக்கிறார். அவரை சென்று பார். அவரிடம் கேட்டு அறியமுடியாது. ஆனால் அவர் அருகே நின்று அறியலாம். அவருள் எரியும் அழல் வெம்மையை அவ்வறையிலேயே உணரலாம்” என்கிறார். மீண்டும் இதை படித்தபோது பால்ஹிகர் இந்த குருஷேத்ரத்தில் இருக்கிறார் என எண்ணியபோது  மனம் பெரிதாக ஆரம்பித்தது. பூரிசிரவசின் மரணமும் சேர்ந்து எதோ தயங்கியது. ஏனென்றால் பால்ஹியரின் மகன்  சுகேது. அவரது மைந்தர் அக்னிதத்தர். அவரது மைந்தர் தேவதத்தர். தேவதத்தரின் மைந்தர் சோமதத்தரின் மகன் பூரிசிரவஸ்.

கார்கடல்  56ம் அத்தியாத்தில் வெண்முரசு பூரிசிரவசை பற்றி கூறும்போது "பூரிசிரவஸ் தன் எல்லைகளைக்கண்டு அதை கடந்து சென்றதில்லை என்று தெரிந்தது. அவன் தன் முதிரா இளமையின் கற்பனைகளில் எழுந்து வெளிக்கடந்ததில்லை என ஒவ்வொரு அம்புக்கும் அவன் உடல் எழுந்தெழுந்து அமைந்தமை காட்டியது" என்கிறது. இதை வாசிக்கும்போது நானே என்னை கண்முன் கண்டேன். பூரிசிரவசின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் இதைவிட நறுக்காய் கூறிவிடமுடியாது.

பால்ஹிகரை கூட்டி வர சிபி நாடு செல்லும் பூரிசிரவஸ் அதன்  இளவரசி தேவிகையையும்  மத்ர நாட்டு இளவரசி விஜயையும் அஸ்தினபுரியின் இளவரசி துச்சளையையும் எல்லைகளை கடக்காததால் இழந்தவன்.  ஆனால் அவன் கொஞ்சம் எல்லை கடந்து அடைந்தவள் பிரேமை. அவளிடம் அவளின் மலைப்பாம்பு போன்ற கைகளை குறித்தே பேச  அவள் " கைகளை குறித்தே பேசுகிறீர்கள் " என்கிறாள். இன்று அர்ஜுனனால் கை அறுக்கபடுகிறான். வாழ்நாள் முழுக்க எல்லைகளை கடக்காதவன் போர்க்களத்தில் எல்லைகளை கடந்து தலை அறுபட்டு சாகிறான். அப்போ அப்போ தங்களின் எல்லைகளை கடக்காதவர்களுக்கு தலை இருக்காது போல.  சாத்யகி செய்வதை பார்க்கும்போது பீமனும் அவனுக்கு ஆசிரியராய் இருந்திருப்பான் என்று நினைக்கிறேன்.  


ஸ்டீபன் ராஜ் குலசேகரன்