Tuesday, February 5, 2019

குந்தியை அறிதல்



இனிய ஜெயம் 

வெண்முரசு விவாதங்கள் தளத்தில் , கர்ணனை கைவிட்டாளா குந்தி எனும் தலைப்பின் கீழ் வாசகர் எழுப்பியிருந்த வினாவைக் கண்டேன் .இந்த வினாவில் காணும் அடிப்படை சிக்கல் எதிலிருந்து எழுகிறது என்றால் , குறிப்பிட்ட புனைவுத் தருணத்தை அடியொற்றி  கற்பனையைக் கொண்டு உள்ளுணர்வு நோக்கிய ஆழத்துக்கு செல்லாமல், புனைவுத் தருணத்தை அது நிற்கக்கூடிய நிலத்துடன் தளைத்து 'புரிந்து கொள்ள ' முயல்வாதால் எழுவது . 

இன்றைய புனைவுத் தருணத்தை ' தர்க்க ரீதியாக புரிந்து கொள்ள ' முன் பின்னாக சென்று  நிகழ்வுகளை  வாசிப்பதை விடுத்து ,இன்றைய புனைவுத் தருணத்தை கனி எனக் கண்டு ,அதன் விதை எங்கே ,எது என என்று இந்த வெண் முரசு புனைவு வனத்துக்குள் உலவிக் கண்டடைவதே, வாசிப்பின்பம் பெறும் வழிவகை .

குந்தி கர்ணனை கைவிட்டாள்.எதன் பொருட்டு என குந்தியே கர்ணன் வசம் நேரடியாக சொல்லும் தருணத்தை ,கீழ் கண்ட அத்யாயம் விரிவாக நிகழ்த்திக் காட்டுகிறது .


இந்த அத்யாயத்தை  சரியாக உள்வாங்கிக்கொண்டால் ,இந்த அத்யாயத்தின் தொடர்ச்சியே கர்ணன் குந்தி சந்திப்பு என்றும் விளங்கும் . குந்தி தனது அடி மன ஆழத்து இருளில் திரண்டு நிற்கும் உண்மை எதுவோ அதை பேசுகிறாள் . கர்ணனோ தான் அடி மனதில் தன்னை என்னவாக நம்பிக்கொண்டிருக்கிரானோ அதிலிருந்து பேசுகிறான் .  ஆகவேதான் நட்பின் பொருட்டு குருதிவார தனது கவச குண்டலங்களை கிழித்துத் தருவேன் என்கிறான் .  

ஆகவேதான் குந்தி ,கர்ணன் தன்னை என்னவாக நம்பிக் கொண்டிருக்கிறானோ அதை தூண்டிலாக மாற்றுகிறாள் . உதாரணமாக கர்ணன் கொடுத்து செல்ல மட்டுமே வந்தவன் . அது போக அப்படி தன்னை நம்பிக் கொண்டிருப்பவன் . ஆகவேதான் நீலன் கர்ணன் வசம் அர்ஜுனனின் உயிரை கொடையாக கேட்க சொன்னான் என தூண்டில் போடுகிறாள் . குந்தி இதை எங்கிருந்து பெற்றிருப்பாள் ? அர்ஜுனன் விழுந்த பின் ,கர்ணன் நீலனை எளிதாக கொன்றிருக்கலாம் . விஜயம் ஏன் தாழ்ந்தது ? ஆகவே கர்ணனை நீலனை முன் வைத்து மடக்க முடியும் என அவள் எளிதில் கணித்திருப்பாள்.

நீலன் குந்தியை அனுப்பினானா எனில் நிச்சயம் இல்லை . காரணம் மறுநாள் காலை குந்தி கர்ணனை சென்று சந்தித்து விட்டு திரும்பியதாக ஒற்றர்கள் வந்து நீலன் வசம் சொல்கிறார்கள் . இதை நீலன் நேரடியாக குந்தி வசம் சொல்லி இருந்தால் , குந்தி கிளம்பி சென்றாளா என ஒரு போதும் ஒற்றர்களை வைத்து வேவு பார்க்க மாட்டான் .காரணம் அவன் உணர்சிகளை படைகலமாக கொண்டு யுத்த விளையாட்டு நிகழ்த்துபவன் . அவன் குந்தி முன் நின்று இந்த உணர்ச்சியை நேரடியாக ஏவி இருந்தான் எனில், தனது செயலென்ன விளைவை கொண்டு வரும் என அவன் ஐயமே கொள்ள மாட்டான் .  எனில் ஏன் ஒற்றர்களை அனுப்பினான் ? குந்தி கிளம்பினால் மறுநாள் காலை போரின் நிலை என்னவாக இருக்கும் என முன் ஊகம் நிகழ்த்துவான் .குந்தி கிளம்பா விட்டால் .நாளை காலை பார்த்தன் அற்ற போரை எப்படி வழி நடத்துவது என வியுகம் வகுப்பான் .

ஆக குந்தி கர்ணன் வசம் இது நீலன் கேட்ட கொடை என்று சொன்னது பொய் . மேலும் ஒரு நாகர் குல மூதன்னை, நாகர் குல மானசா தேவிக்கு சொல்லும் நாகர் குல கதையில்,நாகர்களின் குல எதிரியான நீலன் ,நாகர்களின் பெரு வில்லவனான கர்ணன் வசம், நாகர் குல எதிரி அர்ஜுனனின் அம்மா  குந்தி வாயிலாக உயிர் பிச்சை கேட்டு   கெஞ்சுவதில், நாகர் குல கதைகளுக்குரிய தர்க்க அழகியல் உண்டு .  

மேற் சொன்னவை யாவும்,கதைக்குள் இதுதான் ,இப்படிதான் ,என்ற நோக்கில் அல்ல , கதையின் உள் விரிவுகள் அளிக்கும் கற்பனை சாத்தியங்கள் என்றே கொள்ளவேண்டும் .  இந்த கற்பனை சாத்தியங்கள் இருக்கிறதே அதைக் கொண்டும் வெண்முரசில் முன் பின்னாக உலவி ,உள்ளுணர்வின் தடத்தை சென்றடையலாம் .உதாரணமாக இதில் அமுது அளிக்கவரும் தந்தையை உதறிச் சென்று ,கர்ணன் தாய் அளிக்கும் நஞ்சை ,அதை அளிப்பவள் தாய் என்பதாலேயே ஏற்றுக் கொள்கிறான் .கொஞ்சம் பின்னால் சென்று ,கௌரவ சகோதரர்களால் நஞ்சூட்டப்பட்டு , கங்கையில் வீசப்பட்டு ,அங்கிருந்து நாகர் உலகுக்கு செல்லும் பீமன் ,நாகர் உலகில் நஞ்சை அருந்துகிறான் . யார் சொல்லி ? தாய் என்பதற்காக, குந்தி சொன்னதர்க்காக . அந்த நஞ்சை அருந்தலாமா வேண்டாமா என்று என்னையல்லவா நீ கேட்டிருக்க வேண்டும் என பீமனின் கனவில் எழும் பாண்டுவின் சித்திரம் அளிக்கும் துயரை , இந்த கர்ணன் குந்தி சந்திப்பு  அத்யாயம் வழியே  ஒரு வாசகர் சென்றடைய முடியும் . மேலும் குந்தி ஐவரை அழைத்துக் கொண்டு ,கர்ணனை கைவிட்டு ,அவள் வனத்தை கடந்து அச்தினாபுரி நுழையும் முன் ,இறுதியாக அவள் வனத்தை திரும்பிப் பார்க்கிறாள் ,அந்த சித்திரம் 

//அங்கிருந்து கிளம்பும்போது காட்டின் இலைநுனிகளிலெல்லாம் கூர்வாளின் ஒளிவந்திருந்தது. சேவகர்கள் முன்னால் செல்ல ஐந்து மைந்தர்களுடன் அவள் தொடர்ந்தாள். இளங்காலையின் ஒளியில் அவள் அப்பாதையை முழுமையாகக் கண்டாள். பூக்குலைகளில் தேனுண்ணப் பூசலிட்டன பூச்சிகள். அவற்றை துரத்தி வேட்டையாடின பறவைகள். ஒவ்வொரு உயிரும் ஒன்றை ஒன்று வேட்டையாடிக்கொண்டிருந்தது. கொல்வனவற்றின் உறுமலும் இறப்பவற்றின் ஓலங்களும் இணைந்தெழும் ஓங்காரத்தில் அனைத்தும் பிணைக்கப்பட்டிருந்தன.//

ஆக குந்தி எதை கண்டாளோ,எதை காண விரும்பினாளோ, அது நிகழ என்ன என்ன செய்ய வேண்டுமோ ,சொந்த மைந்தர்களுக்கு நஞ்சூட்டுவது உட்பட அனைத்தும் செய்கிறாள் . இந்தப் போரின் மூத்த தேவி .


கடலூர் சீனு