அன்புள்ள ஜெ,
வெண்முரசு நிறைந்துவிட்டது. ஒவ்வொரு நாளும், இரவுப் பணியிலும் வெண்முரசு வந்துவிட்டது வாசித்து முடிக்கவேண்டும் என்று பணியிடை நேரத்தின் துடிப்புகளும் பதட்டங்களும் இனி கிடையாது.
இதில் என்ன அடைந்தேன் எதை இழந்தேன் என்று சொல்லத்தெரியவில்லை.
வெண்முரசு என்றாலே "முதற்கனல்" முடிவில் பீஷ்மர் தன்னை அழிக்க பிறவியெடுத்திருக்கும் சிகண்டியை ஆசீர்வதிக்கும் காட்சி என் கண்முன் நின்றுகொண்டிருக்கிறது.
கண்ணன் அர்ஜுனனுக்கு போரில் கீதை அருளும் படங்களை எங்கு பார்த்தாலும் அதே காட்சிதான், அங்கும் அந்த பீஷ்மரும் சிகண்டியும் இருப்பது போலவே இருக்கிறது. காரணம் ஏனென்று தெரியவில்லை. இது எதனால் என்று தர்க்கத்தின்பால் புரிந்துகொள்ள முடியவில்லை. மனதை எதோ செய்யும் நிகழ்வு அது.
பின்பு திருதராஷ்டிரரின் அன்பு. அப்புறம் ஏதேதோ.......
எனக்கு கடினமான பகுதிகள் என்றால் நீலமும், சொல்வளர்காடும். அதிலும் நீலத்தை பற்றிய கடிதங்கள் பார்க்கும் போது, அடுத்தமுறை இது புரியும் என்று நினைத்துக் கொள்வேன்.
சுருக்கமாக சொன்னால் "பிடி" கதையில் அனந்தன் புரியாமல் திண்ணையில் உறங்கும் போது எதோ நடக்குமே அப்படித்தான். எதோ நடந்தது. ஏதோ புரிந்தது. பின்பொருமுறை வாசிக்க குருவருள் கிடைக்க வேண்டும்.
மொத்தத்தில் இங்கு நடந்தது வரலாற்று நிகழ்வு. இங்கு நின்றிருக்கும் எல்லோரும் சென்றுவிடலாம். ஆனால் இந்த நிகழ்வு நின்றிருக்கும்.
உலகின் எங்கெங்கோ நித்தமும் போர்கள் நடந்துகொண்டுதான் இருக்கிறது. பல்லாயிரக்கணக்காணோர் இறந்துகொண்டிருக்கிறார்கள் ஆனால் மகாபாரதப் போரில் இறந்தவர்கள் இன்றும் நினைக்கப் படுகிறார்கள். எங்கோ ஒரு மூலையில் அந்த போரில் இறந்த ஒரு சாதாரணனை மனத்தால் நினைக்கிறார்.
அதேபோலத்தான் இந்த நிகழ்வு அதன் தொடர்ந்த வாசிப்பாளனாக நான். அவ்வளவுதான்.
அன்புடன்,
சி. பழனிவேல் ராஜா.