Monday, July 27, 2020

வெண்முரசும் வாழ்வும்


அன்பிற்கினிய ஜெ,

வெண்முரசு நிறைவிற்கு வாழ்த்துக்களும், உங்களுக்கு வணக்கங்களும்.

என் தந்தையின் மரணத்திற்குப் பின்பான வெறுமை, பாதுகாப்பின்மை, குற்ற உணர்ச்சி ஆகியவற்றோடு, வீட்டில் முடங்கி இருந்த நாட்களில் வெண்முரசு பற்றி அறிந்து உங்கள் வலைத்தளத்திற்கு வந்தேன். அப்போது முதற்கனல் முடிந்திருந்தது என்று நினைவு,அல்லது சரியாக நினைவில்லை. ஆனால் 2014 முதலேயே நானும் வெண்முரசு வாசிக்க ஆரம்பித்துவிட்டேன்.

இன்று நினைக்கையில் வெறுமையும், குற்ற உணர்ச்சியும் நிறைந்த அந்த நாட்களில் ஒட்டுமொத்தமாக முன்சென்றிருந்த எழுபது அல்லது அதற்கு மேற்பட்ட அத்தியாயங்களை படிக்க அமர்ந்தது மட்டும் தான் என்னை மீட்டது என்பதை தெளிவாக உணர்கிறேன். காரணம் எல்லாவித நம்பிக்கையும் இழந்து உறவினர்களால் கைவிடப்பட்டு, பெரும் பொருளாதார நெருக்கடியில், வேலையற்று இருந்த நாட்கள் அவை.

கொஞ்சம் கொஞ்சமாக வெண்முரசு என்னை மீட்டது. முதல் காரணம் அதன் மொழி. இன்றும் நினைவிருக்கிறது முதல் நாள் முதல் அத்தியாயம் ஒன்றுமே புரியவில்லை. வேலையற்று இருந்ததால் தொடர்ந்து படிக்கவேண்டியது மட்டுமே வேலையாக இருந்தது. ஓரிருநாட்களில் மொழி பழகிவிட்டது. பிறகென்ன ஒவ்வொருநாளும் புதிய அத்தியாயம் தொடங்கியது உங்கள் வலைத்தளத்தில் மட்டுமல்ல, என் வாழ்விலும்தான். அதே வருடம் வேலைகிடைத்து, அங்கு உடன் வேலை செய்தவருக்கு ஒட்டுமொத்த முதற்கனலையும் கதையாகச் சொன்னபோது உங்கள் மொழிநடை அணுக்கமாக மாறியிருப்பதையும் அது சரளமாக என்னிடமிருந்து வெளிப்படுவதையும் எண்ணி வியந்துகொண்டேன்.

வெண்முரசின் மொழி என்னை என்னென்னவோ செய்தது அப்போது என்றுதான் சொல்லவேண்டும். காரணமே இல்லாமல் அல்லது அதன் ஆழம் ஒட்டும் அறியாமல் என்னைக் கவர்ந்த ஒரு சொல்லாட்சி "வேங்கையின் தனிமை". ஏனென்றே சொல்ல இயலவில்லை அன்று. ‘கோடானுகோடி விதைகள் உறங்கிக்கிடக்கும் பாலையில், உறங்காது கிடக்கும் அந்த வேங்கையின் தனிமை, அதைநோக்கி வரும் வராகி அன்னை’ - இன்றைக்கு இங்கு வந்து சேர்ந்திருக்கிறேன். இன்னும் கொஞ்சம் போனால் இதையே வேறுவகையில் சொல்வேன் அல்லது முற்றிலும் வேறு ஒரு பொருளை தொடுவேன் என்று நினைக்கிறேன்.

இன்று வெண்முரசின் மொழி அழகையும், அதில் வெளிப்படும் உணர்வு வெளிப்பாடுகளையும் பற்றி மட்டுமே என்னால் பல பக்கங்கள் எழுதமுடியும் . அம்பை, அம்பை அன்னையாக, முதற்கனலாக மாற்றம் கொள்கிற இடத்தில் அதுவரை நான் படித்திராத மொழி, ஒருபெரும் உள எழுச்சியை வழங்கிய சன்னதம் கொண்டெழும் வெண்முரசின் மொழி, வெவ்வேறு சுழிப்புக்களுடன், உணர்வெழுச்சிகளுடன் இருபத்தியாறு நாவல்களிலும் கூர்மை குன்றாது பயின்றுவருவதை பிரம்மிப்புடன் நினத்துக்கொள்கிறேன்.

இன்னமும் வெண்முரசிலிருந்து கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன் ஜெ. ஒவ்வொரு நாளும் உடன்வருகிற ஒரு சொற்றொடர். ஒவ்வொரு நாளும் உடன்வருகிற "கருத்து" என்று என் அனுபவத்தில் என்னால் சொல்ல இயலவில்லை. ஏனென்றால் ‘வேங்கையின் தனிமை’ சொல்லாக என்னுள் நுழைந்து, காலம் கழித்தே காட்சியாக, படிமமாக உருமாறியது. மெல்ல மெல்ல என் பார்வைகளும், வாழ்வு மற்றும் மனிதர்கள் சார்ந்த புரிதல்களும் வெண்முரசால் வளர்த்தெடுக்கப்பட்டது. கிறிஸ்துவப் பின்னணியில் பிறந்ததாலும், வளர்ந்ததாலும், படித்ததாலும் இந்திய மரபு, கடவுளர்கள் மற்றும் இம்மண்ணில் இருந்துவரும் வரலாற்று, பண்பாட்டு அடையாளங்கள், சடங்குகள் குறித்து எந்தவிதமான புரிதலும் எனக்கு இருந்ததில்லை. ஒருவகையான ஏளனம் மட்டுமே இருந்தது. கல்லூரியில் ஓஷோ கிறிஸ்தவத்தை அடித்து துவைத்து காயப்போட்டார். கிறிஸ்துவத்தை மட்டுமா? எல்லாவற்றையும்தான்!! எதிர்த்துப்பேசுவதுதான் அறிவு, அதுதான் புரட்சி, அதுவே ஞானம் என்றெல்லாம் அலைந்து, அராஜகம்செய்த நாட்கள் அவை. நல்லூழாக ஓஷோவின் சில அபத்தமான கருத்துக்களும், நடைமுறைக்கு ஒவ்வாத வழிகாட்டுதல்களும் கொடுத்த எச்சரிக்கை உணர்வு என்னை தூக்கிவெளியே ஏறிந்தது. அதன்பின் பற்றிக்கொள்ளவும், நம்பவும் எதுவுமே இல்லாமல் அபத்தமான ஒரு வாழ்வு, நிலைகுலைவு, தவறான முடிவுகள், தோல்விகள் இறுதியாக தந்தையின் மரணம்.

வெண்முரசு எனக்களித்த பெரும்கொடைகளில் ஒன்றாக நான் நினைப்பது, நான் இழந்துபோயிருந்த இந்தப் பண்பாட்டை, இந்திய மண்ணை இன்றைய என் அறிவுப்படிநிலைகொண்டு சற்றேனும் புரிந்துகொள்ள ஒரு கருவியாக உடனிருப்பதைத்தான். நீங்கள் சொல்கிற இந்த மாபெரும் படிமவெளி சிறிது சிறிதாக என்னால் புரிந்துகொள்ளப்படத்தக்கதாக வெண்முரசு வழி மாற்றம்பெற்றிருப்பதை நான் முழுமையாக உணர்ந்துவருகிறேன். இந்தப் படிமங்கள், சடங்குகள் மற்றும் அவை ஆழ்மனதில் கொண்டுள்ள செல்வாக்கு ஆகியவற்றை, என் தந்தைக்கு நீர்க்கடன் செலுத்தியபிறகு, அதுவரை நான் கொண்டிருந்த குற்ற உணர்ச்சி எங்குசென்றதென தேடிக்கொண்டிருந்த ஒரு நாளில் உணர்ந்தேன். அதுவரை அவரைக்குறித்து இரண்டுசொற்றொடர் கேட்டாலும், ஏற்படுகிற மனஅழுத்தமும், அதன்விளைவான கண்ணீரும், முகமலர்ச்சியாகவும், சிரிப்பாகவும் மாற்றம்பெற்றிருந்தது.

இந்தியமண்ணில் மஹாபாரதம் கேட்காமல் ஒருவர் இருப்பது மிகவும் கடினம். ஆனால் தட்டையாக்கப்பட்ட கதைமாந்தர்களுடன் மட்டுமே பெரும்பாலும் மஹாபாரதம் சொல்லப்படுகிறது. எனக்கும் அப்படித்தான். இங்கு பெரும்பாலும் மஹாபாரதக்கதைகளை எதிர்மறை எடுத்துக்காட்டுகளாக மட்டுமே எடுத்தாள்கிற பலரை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் வெண்முரசு மஹாபாரத மனிதர்களை இரத்தமும், சதையுமாக என் கண்முன்னே நிறுத்தியது. திருதராஷ்டிரருக்கு இருந்த ஒரே உணர்வு பாண்டவர்கள் மேல் பொறாமை என்றும், துரியனுக்கு மண்விழைவைத்தவிர வேறேதுமில்லை என்றுமட்டுமே கற்பிக்கப்பட்டிருந்த எனக்கு, இந்த இருவரும் எவ்வளவு மகத்தான மனிதர்கள் என்று புரிந்துகொள்ளவும், அதன்வழியாக என் சமகாலத்தில் நான் வெறுத்து ஒதுக்கிய திருதராஷ்டிரர்களையும், துரியன்களையும் வெண்முரசுதான் மீட்டளித்திருக்கிறது. இது வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்களையும், தந்த மன அமைதியையும், இசைவையும் வேறெதுவும் எனக்கு தந்திருக்க முடியாது.

இன்று குடும்பம், வேலை அல்லது வாழ்க்கை என்று நான் எடுக்கும் எந்த ஒரு முடிவும், இதற்கு முன்பிருந்த நான் எடுக்கும் முடிவுகள் அல்ல. இன்று இதுபோன்ற சமயங்களில் என்னுள் கூடியிருக்கும் கூர்மையும், விருப்பு வெறுப்பற்ற தன்மையும், வெண்முரசு எனக்களித்தவையே. எந்தஒரு சந்தர்ப்பத்திலும் அதற்கிணையாக வெண்முரசில் ஒரு நிகர்வாழ்க்கை இருந்துகொண்டேதான் இருக்கிறது, அதன்வழி கற்றவை என்னுடன் வந்துகொண்டேதான் இருக்கின்றன.

எப்படி ஒரு மனிதனால் இத்தனை பக்கங்கள் எழுதமுடியும்? என்று என்னால் உங்களிடம் கேட்கவே முடியாது ஜெ. ஏனென்றால் இதோ கண்முன் இருக்கின்றன நீங்கள் சற்றேறக்குறைய ஏழு வருடங்களாக எழுதிய 25,000 வெண்முரசுப்பக்கங்கள். இது எனக்கு ஒரு மாபெரும் திறப்பு ஜெ. முடியும் என்பது...அது எத்துனை பெரியதாயினும், சாத்தியக்கூறுகளுக்கு அப்பாற்பட்டதாயினும், எதிர்ப்புகளால் சூழப்பட்டாலும், வசைகளால் கீழிறக்கப்பட்டாலும்...முடியும்...நிச்சயம் முடியும் என்பது. செழுமையான, தரமான, பிரம்மாண்டமான ஒரு படைப்பு, இன்றும் நிகழமுடியும் என்கிற நம்பிக்கை நீங்கள் எனக்களிக்கும் ஒரு பரிசு என்றே எடுத்துக்கொள்கிறேன்.

கிட்டத்தட்ட 50 வருடங்களாக தயார்செய்யப்பட்டிருக்கிறீர்கள். இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக தயார் செய்திருக்கிறீர்கள். அலைகழிக்கப்பட்டிருக்கிறீர்கள், கொந்தளிப்பில், தனிமையில் வாடியிருக்கிறீர்கள், வாழ்க்கை முறையை இதற்காக கடினப்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள், விருப்பங்களை விட்டுக்கொடுத்திருக்கிறீர்கள். இதன் விளைபொருளான அறிதலில் ஒருபகுதியை எங்களுக்கும் தந்திருக்கிறீர்கள் என்பதே மிகுந்த மனநிறைவை அளிக்கின்றது ஜெ.

நீங்கள் வெண்முரசு எழுதி முடித்துவிட்டீர்கள். நான் இன்னும் படித்து முடிக்கவில்லை ஜெ. மீண்டும் மீண்டும் வெண்முரசிற்குள் வந்துகொண்டேதான் இருப்பேன், மேலும் மேலும் என்னையும், இவ்வாழ்வையும் வெண்முரசில் கண்டடைந்துகொண்டேதான் இருப்பேன்.

 

பிரபு செல்வநாயகம்.