அன்புள்ள ஜெ,
வெண்முரசு முடிவடைந்திருக்கிறது. அதுவும் அபாரமான ஒரு சமன்வயத்துடன். உண்மையில் நாவலில் இருந்து வெளிவரும் வழியை நாவலே சொல்லியிருப்பது தான் இதை பிற எந்த சமகால நாவல்கள், பேரிலக்கியங்கள் போன்றவற்றில் இருந்து வேறுபடுத்துகிறது. இதை காவியங்களின், இதிகாசங்களின் வரிசையில் கொண்டு வைக்கிறது. தமிழில் வெண்முரசின் இடம் என்பது கம்பராமாயணத்திற்கு அடுத்த இடம் தான். ஒரு வேளை ஊழியே ஏற்படினும் சிலப்பதிகாரம், திருக்குறள், கம்ப ராமாயணம், வெண்முரசு ஆகிய நான்கும் எஞ்சினாலே ஒட்டு மொத்த தமிழினக் கலாச்சாரத்தையும் மீட்டெடுத்து விடலாம். இயல்பாகவே உங்களின் இடமும். யாமறிந்த புலவர்களிலே என அந்த வரிசையில் வந்து சேரும். இது உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை.
நாவல் தொகுப்பின் மிகச் சிறந்த இடமாக உக்ர சிரவஸ் தன்னுடைய அலைச்சல்களோடு 'ஜய' என்ற மூலத்தை மகாபாரதமாக விரித்தெடுத்த பின்னரும் எஞ்சும் நிறைவின்மையை அப்பெருங்கதை அனைத்து உயிர்களுக்குமாக விரிந்து செல்கையில், அக்கதை தன்னில் இருந்து விடுபட்டுச் செல்வதை, தானும் அதன் ஒரு பகுதியாக மாறி கரைவதை உணர்கையில் இழப்பதைச் சொல்லலாம். உண்மையில் நீங்களும் வாசகர்களாகிய நாங்களும் கரைவதே அது.
பெரும் வெறுமை சூழுமோ என அஞ்சிக் கொண்டிருந்தேன். கலம் ஒழிவதன் வெறுமை. இழப்புணர்வின் வெறுமை. ஆனால் ஒரு வகை நிறைவே எஞ்சுகிறது. கடலில் கலக்கும் நதியின் நிறைவு. நினைவில் பெருகி, கனவைக் கடந்து, ஆழத்தை அடைந்து இரண்டின்மையில் கரைகையில் வரும் நிறைவு. அறிந்து, உணர்ந்து, எண்ணமாகவே ஆகியபின் வெண்முரசு என்பது எனக்கு வெளியில் இல்லை. இது வரையிலும் ஒரு நாள் விடாமல் கடந்த ஆறரை வருடங்கள் செய்த தவம் இன்றோடு நிறைவடைகிறது. வேண்டியதையும், அடையவேண்டிய அனைத்தையும் அள்ளி அள்ளித் தந்திருக்கிறது வெண்முரசு எனக்கு. ஒருவகையில் இது என்னுடைய உபாசனா தெய்வம். இறப்பு வரை கூடவே இருக்கப்போகும் ஒன்று.
2014 ஆம் ஆண்டு துவங்கி இன்று வரை தொடர்ந்த இப்பெருங்காவியம் எனக்கு அளித்தவற்றில் முதன்மையானது என சலிப்பின்மையையே சொல்வேன். இந்த ஆறறை வருடங்களில் ஒருமுறை கூட ‘போரடிக்கிறது’ என்ற வார்த்தையை உச்சரித்தது கூட இல்லை. கிடைக்கும் எந்த ஒரு இடைவெளியிலும் சிந்திக்க, எண்ணி நெகிழ, சிரித்து மகிழ என ஏதாவது ஒன்று வெண்முரசில் இருந்து எழுந்து வரும். இனியும் வந்து கொண்டே இருக்கும். இது அளித்த நிமிர்வும் கூடவே வரும். சிந்தனையில், அணுகுமுறையில் இது கொண்டு வந்த மாற்றங்களும் தொடர்ந்து வரும். பெரும் பணி. அதன் போக்கிலேயே வளர்ந்து நிறைவு கொண்டுள்ளது. உங்களை குருவென எண்ணித் தொடரும் எத்தனையோ சீடர்களில் ஒருவனாக இவ்வரும்பணியின் நிறைவில் உங்களின் பாதம் பணிகிறேன். குரு வணக்கம்.
அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்