Saturday, July 18, 2020

வெண்முரசின் இறுதி


அன்புள்ள ஆசிரியர்க்கு , 

          நலம் என்று நம்புகிறேன்.இன்று வெண்முரசின் இறுதி  அத்தியாயத்தை வாசிக்கையில் ஏனீ இன்னும் இது நீடிக்க கூடாதா என்ற ஒரு ஏக்கத்துடனே வாசித்தேன். ஒரு மாத காலமாகவே வெண்முரசின் நிறைவு ஏதோ ஒரு வகையில் என்னை பாதிக்கத்தான் செய்தது.
       எனக்கு வெண்முரசை அறிமுகம் செய்தவர் வானவன் மாதேவி இன்று அவர் இல்லை , அவர் நினைவாக என்னிடம் இருப்பது அவர் தங்களை எனக்கு அறிமுகம் செய்வித்தது தான். அவர் தங்கள் எழுத்தை நான் வாசிக்க ஆரம்பிக்க இருந்த அந்த தொடக்க நாட்களில் இந்த வார்த்தைகளை கூறினார் " உன் வாழ்க்கையை ஜெயமோகன் வாசிப்பதற்கு முன் பின் என்று பிரித்து விடலாம்" என்றார். தீவிர இலக்கியத்தில் நான் நுழைந்த எழுத்தே தங்கள் உடையது தான். அப்போது தான் வெண்முரசு ஒரு நாவல் போதும் காலம் முழுக்க வாசிக்க என்றார். எனக்கு அசட்டையாக இருந்தது அது எப்படி ஒரே நூலை காலம் முழுக்க வாசிக்க முடியும் என்று . இன்று அந்த வார்த்தைகளை நினைவு கூறும் போது  வியப்பாக தான் இருக்கிறது . 

      என் இருபதுகளில் வெண்முரசை படிக்க தொடங்கினேன். அப்போதே நீங்கள் காண்டீம் தாண்டிய போய் கொண்டு இருந்தீர்கள் என்று நினைக்கிறேன்.முதலில் நூலாக தான் வாசிக்க ஆர்மபித்தேன். பின் தங்கள்  உங்கள் எழுத்துடன் போட்டி போட முடியாது என்று உணர்ந்து நீங்கள் நீர்கோலம் தொடங்கும் போது நான் வலைத்தளத்தில் படிக்க தொடங்கினேன். கூட புத்தகமாக வெய்யோன் படித்து கொண்டு இருந்தேன். இப்படி வெறித்தனமாக படித்த காலங்கள் இருந்தது. 12 மணி வரை காத்திருந்து படித்த பல இரவுகள் இருந்து. போர் தொடங்கிய பின் இரவில் படிப்பதை விட்டுவிட்டேன் கனவுகலில் போர்காட்சிகள் தொந்தரவு தர ஆர்மபித்தன.இப்படி  பல காலம் கூட இருந்த ஒரு நூல் நிறைவுரும் போது பெரும் சோர்வு வரத்தான் செய்கிறது. வாசகர்கள் ஆகிய எங்களுக்கே  இவ்வளவு என்றால் உங்களுக்கு எப்படி ஒரு வெறுமையில் இருப்பீர்கள் என்று கற்பனை செய்ய முடியவில்லை . 
      
 இப்போது திரும்பி பார்க்கும் போது என் இளமை காலம் முழுக்க நீங்களும் தங்கள் எழுத்தும் நிறைந்து இருக்கிறீர்கள். வெண்முரசு என்ற நாவல் என் வாழ்வில் பல மாற்றங்களை நிகழ்த்தி இருக்கிறது .உங்கள் எழுத்துக்கள் என்னை அவமானம் , சோகம் , ஆதிக்கம் , என்று பல இடங்களில் இருந்து  மீட்டு இருக்கிறது.  

    வண்ணக்கடலில் ஒரு இடம் வரும் பார்த்தன் அஸ்வத்தாமன் இடம் சொல்லும் இடம் " நீ எதை நோக்கி இப்படி பயில்கிறாய் என்று "  அவன் உரைப்பான் " எஞ்சுவது ஏதும் இன்றி கற்றல் " ஏனோ அந்த ஒரு நோடியில் எனக்கான சொற்கள் கிடைத்தது என்று தோன்றியது . தங்கள் மொழியில் சொல்ல வேண்டும் என்றால் எனக்கான ஊழ்க நுண்சொல் அந்த வார்த்தைகளை என்றும் என்னுடன் இருக்கும் 
இப்படி பல வாசகர்களுக்கு அவர்களின் நுண்சொல் இருக்கும்.

      என்னை இயங்க வைத்ததும் வைத்துகொண்டும்  இருக்கும் அந்த சொற்களுக்கு நன்றி .என் வாழ்வுக்கும் கல்விக்கு வெண்முரசின் பங்கு என்றும் இருக்கும் அதற்காக தங்கள் தாழ்பனிந்து வணங்குகிறேன். 

நன்றி 

பா.சுகதேவ் 

மேட்டூர்.