Wednesday, July 15, 2020

யுதிஷ்டிரின் முடிவு



அன்புடன் ஆசிரியருக்கு

இன்றைய அத்தியாயத்தில் யுதிஷ்டிரனுக்கு கூறப்படும் சொற்கள் உள எழுச்சியை அளித்தன. சகோதரர்களை மனைவியை பற்றினை விடுத்து யுதிஷ்டிரனால் கடந்து செல்ல முடிகிறது. திரௌபதியும் பீமனும், நகுலனும் சகதேவனும், அர்ஜுனனும் கிருஷ்ணனும் என ஒவ்வொருவரும் தங்களுக்கு உகந்தவர்களையோ உகந்தவற்றையோ தேர்ந்து கொண்டு தயங்கி நிற்கும்போது யுதிஷ்டிரனால் தயக்கமின்றி முன்செல்ல முடிகிறது. ஆனால் தன்னை இட்டு வந்த நாயை அவரால் அப்படி விட்டுவிட முடிவதில்லை. உலகியல் பற்றுதான் அரசர்களை உருவாக்குகிறது. பெரும்பற்றினைக் கொண்டவர்கள் பேரரசர்களாகத் திகழ இயலும். ஆனால் உலகியல் மண்ணில் திகழ்வது. ஒவ்வொரு கணமும் அறத்துடன் எது அறமெனத் தெரிந்தும் அதனுடன் சமரசம் செய்து கொள்வதன் வழியாகவே உலகியல் முன்னகர்கிறது. யுதிஷ்டிரன் வெண்முரசு முழுக்க உலகியலாளராகவே வருகிறார். அவரது உலகியலின் அடிப்படை பற்று. உடன்பிறந்தோர் மீது மைந்தர் மீது குடிகள் மீது என ஒவ்வொரு தருணத்திலும் அவரைப் பற்றே இயக்குகிறது. ஆனால் யுதிஷ்டிரனின் பற்றுக்கான அடிப்படை விசை இவர்கள் மகிழ்வுடன் இருக்க தன்னால் ஏதும் செய்துவிட முடியுமா என்ற தவிப்புதான். அந்த தவிப்பை அவருக்குள் விதைப்பது யுதிஷ்டிரனின் இயல்பான அறவுணர்வு. பாண்டுவின் இறப்பினைப் பார்க்கும் யுதிஷ்டிரன் நினைவுக்கு வருகிறார். அங்கிருந்து இங்கு. யுதிஷ்டிரன் தன்னுடைய மீட்பினை நாய்க்கு நல்கும் தருணத்தில் அவர் உலகியலின் கல் உச்சியில் இருந்து அறத்தின் முகிலில் கால் வைத்து விடுகிறார்.

அன்புடன் 

சுரேஷ் பிரதீப்