அன்பு ஜெ,
ஒரு சவாலான ஓர் பயணத்தை ஏழு வருடங்களாக தொடர்ச்சியாக, இடையராது எழுதி முடித்து நிறைவின் உச்சிப்புள்ளியில் நின்று கொண்டிருக்கும் உங்களுக்கு என்னுடைய பணிவான வணக்கங்களும், வாழ்த்துக்களும் அன்பு ஜெ. இது போல தொடர்ச்சியாக இடையராது எழுதுவது என்பது நீங்கள் கூறுவது போல அருள் தான் எனினும் உங்களுக்குள் இருக்கும் அளப்பறிய முயற்சியைக் கண்டு வியப்பும், ஊக்கமும் ஒரு சேர அடைகிறேன். இதே போன்ற முயற்சியைக் கண்டு மெய் சிலிர்த்த தருணம் ஒரு புறநானூற்று பாடலின் போது தான்.
”விளைபதச் சீறிடம் நோக்கி, வளைகதிர்
வல்சி கொண்டு, அளை மல்க வைக்கும்
எலிமுயன் றனைய ராகி, உள்ளதம்
வளன்வலி உறுக்கும் உளம் இலாளரோடு
இயைந்த கேண்மை இல்லா கியரோ;
கடுங்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென,
அன்று அவண் உண்ணா தாகி, வழிநாள்
பெருமலை விடரகம் புலம்ப, வேட்டெழுந்து
இருங்களிற்று ஒருத்தல் நல்வலம் படுக்கும்
புலிபசித் தன்ன மெலிவில் உள்ளத்து
உரனுடை யாளர் கேண்மையொடு
இயைந்த வைகல் உளவா கியரோ.”
உங்களை அந்தப் புலியாகப் பார்க்கிறேன். அது தாக்கிய பெரிய யானையாக வெண்முரசைப் பார்க்கிறேன்.
”அறம்” என்ற சிறுகதைத் தொகுப்பின் வழி உங்களுக்குள் உள் நுழைந்து, விஷ்ணுபுரத்தை அடைந்தேன். அங்கிருந்து என் புனைவுலகைக் கட்டமைக்க ஆரம்பித்திருந்தேன். விஷ்ணுபுரம் ஆரம்பிக்கும் முன் மலைப்பாய் இருந்தது. “இன்பத்திற்கான நுழைவாயில் இடுக்கமானது” என்று தானே சொல்லப்பட்டிருக்கிறது. அது போலவே சிரமப்பட்டேன். ஆனால் விஷ்ணுபுரம் படித்து முடிக்கையில் எனக்கு இன்னும் தேவைப்பட்டது. அன்று நினைத்துக் கொண்டேன், ‘விஷ்ணுபுரத்தின் நிறைவின் உச்சிப்புள்ளியில் வெண்முரசை நீங்கள் எழுத ஆரம்பித்திருக்க வேண்டும் என்று. பின்னும் இரவு, இன்றைய காந்தி, சங்கச் சித்திரங்கள், காடு, கொற்றவை, நித்தமும் உயிர்ப்புடனிருக்கும் உங்கள் வலைதளம், வீடுறைவு கால சிறுகதைகள் என உங்களின் படைப்புகளில் சிலவற்றையே படித்திருக்கிறேன். அதில் வரும் பெயருள்ள/பெயரற்ற கதைமாந்தர்கள், நிகழ்வுகள், புனைவு இடங்கள், கனவுகள்,உணர்வுகள், எண்ணங்கள் என ஓர் பிரபஞ்சத்தை இந்த நொடிக்கு முன்னர் வரை உருவாக்கி வைத்திருக்கிறீர்கள். அந்த அடைக்கலாங்குருவி சன்னலின் விளிம்பில் உட்கார்ந்து ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருப்பது போல நான் படித்திராத உங்களின் கடந்த கால பிரபஞ்சத்தை (காவியங்கள், நெடு/சிறு கதைகள், அறிவுறைகள் அன்றாடங்கள், இயற்கை, வம்புகள், பயணங்கள், வாழ்வு, பேச்சுரைகள், கடித மறுமொழிகள் மற்றும் பல) பார்த்துக் கொண்டு நிற்கிறேன். ”ஓர் ஆசிரியனுடன் இணைந்து செல்ல நீண்ட கால வாசிப்பு தேவை” என்று நீங்கள் சொல்வதை நான் உணர்ந்து கொண்டேன்.
வெண்முரசின் நிறைவு, அதற்கான வாழ்த்துக்கள், சிறுகதைகளின் சதம் அதற்கான வாழ்த்துக்கள் இவையாவும் என்னை ஒரு வகையில் தூரப்படுத்திக் கொண்டிருப்பதாகப் பார்க்கிறேன். கதைகளில் திழைத்து நான் அமிழ்ந்து சிலாகித்துக் கொண்டிருக்கும் போதெல்லாம் “எழுந்து ஓடு இன்னும் தூரம் அதிகம், இங்கேயே படுத்துக் கொண்டிருக்கிறாயே எருமை மாடு” என்று மனம் கத்துவதைப் பார்க்கிறேன். இப்பொழுதெல்லாம் என் மண்டை சற்றே அதிகமாக துடித்துக் கொண்டிருக்கிறது தூங்குவதற்கு சற்று முன் அதை ஆற்றூப்படுத்தி தியானம் செய்தாலொழிய தூங்க முடிவதில்லை. நான் வாசிப்பின் நிறைவை அடைய எத்துனை தொலைவு ஓட வேண்டும் என்று வியக்கிறேன். சலிப்பில்லை. உயிர்ப்புடனிருக்கிறேன் ஒவ்வொரு நொடியும். இந்த என் நிலை, எனக்கு திருவாசகத்தின் ஒரு வரியை நினைவு படுத்தியது. “கடலினுள் நாய் நக்கியாங்கு உன் கருணைக் கடலின் விடல் அரியேனை விடுதி கண்டாய்”. ஆனால் இந்த எழுத்தின் கடலை அனைத்தையும் படித்து முடித்துவிடுவேன். கடந்த எழுத்துக்களையும், நிகழ், எதிர் எழுத்துக்களையும் முழுவதும் படிக்க வேண்டும். வெண்முரசும் படித்துக் கொண்டிருக்கிறேன். படித்துத் திரட்டி கடிதம் எழுத வேண்டும். எனக்கு நிறைவு இப்போதைக்கு இல்லை.
என்னை நான் திரும்பிப் பார்க்கிறேன். எத்துனை மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்னுள். என் சொற்கள், செயல்கள், எண்ணம், நான், யாவும் செம்மைப் பட்டிருக்கிறது. மேலும் மேலும் அமிழ/ பண்பட முற்படுகிறேன். உங்களின் எழுத்துகளுக்காய் நன்றி. உங்கள் எழுத்தென்னும் பிரபஞ்சத்தின் சிறுதுளியாய் நின்று வெண்முரசு காவியத்தின் நிறைவிற்
என்றும் அன்புடன்
இரம்யா.