பிறரைப்பார்க்க ஒருகண்கூட போதுமானதாக இருக்கிறது. தன்னைப்பார்க்க இருவிழிகள் மட்டும்போதவில்லை எத்தனை எத்தனை கண்ணாடிகள் வாங்கி சுவற்றில் மாட்டவேண்டி உள்ளது. உலகில் மனிதன் தன்னைப்பார்க்கத்தான் அதிகமாக கண்ணாடிகளைப்பார்த்துக்கொண்டே இருக்கிறான். அப்படியும் அவன் முழுவதும் தன்னைப்பார்த்து முடித்துவிடுவதில்லை.
இலக்கியங்கள் கண்ணாடிகள்போல் மனிதனை மனிதனுக்கு யார் என்று காட்டிக்கொண்டே இருக்கிறது. அதில் மனிதனை மனிதனுக்கு காட்டுவதில் வெண்முரசு வண்ணப்பெருமாடி. அது மாயக்கண்ணாடி இல்லை படிக மலர்கள் பூத்த பெரும் மனகங்கை மாகண்ணாடி. பெரும் அலைகளை எழுப்பி மிக மிக துல்லியமாக மனிதனை மனிதனுக்கு காட்டுகின்றது. அதனை செய்த உங்களுக்கு இதயம் கனிந்த நன்றி.
இன்றைய வெண்முரசின் முதலாவிண்’-13 பகுதி மிகமிக அற்புதம். நெஞ்சத்தை அள்ளி அணைத்தது. தாமரையின் ஒரு இதழை அறிந்தாலும் முழு தாமரையையும் அறிந்ததுபோல்தான். தருமனின் நடுக்கத்தை பயத்தை நிலையின்மை நிறைவினமையை முன்பின் ஊசலாட்டத்தை அற்புதமாக வெண்முரசு ஒவ்வொரு இதழாக மலர்த்திக்காட்டிக்கொண்டே வந்து இன்று முழுமலரையும் தருமன் யார் என்று காட்டியது.
“நான் அறிந்தது நான் துறப்பவன் அல்ல என்றே. பெரும்பற்றினாலானவன் நான். துறப்போர் அறத்தையும் துறக்கலாகும். நான் அறம்துறக்க ஒப்பாதவன், ஆகவே எதையும் துறக்க இயலாதவன். என் உடன்பிறந்தாரும் சுற்றமும் உடன்சூழும் விண்ணுலகொன்றை மட்டுமே விரும்புகிறேன். அவர்களை விட்டுவிட்டு இந்த மலைமுடியிலேறி நான் அடையப்போவதென்ன?”
பரமஹம்ச யோகானந்தரின் குரு ஸ்ரீஸ்ரீயுக்தேஸ்வர் கிரி தனது முக்திக்கு பின்பு தனது சீடருக்கு காட்சிக்கொடுக்கும்போது ஒளி உலகத்தில் தடுமாறுபவர்களை மேல்நோக்கி எடுத்துச்செல்ல பணிக்கப்பட்டு இருக்கிறேன் என்பார். அங்கு இருப்பவர்கள் ஒரு சிறுதவரும் நடந்துவிடக்கூடாது என்று தவிப்பவர்களாக உள்ளார்கள் என்பார். அந்த தவிப்பை வெண்முரசு தருமனில் கொண்டு வந்து இருக்கின்றீர்கள்.
பொன்மலையில் ஒற்றைக்காலில் தருமன் ஸ்ரீநடராஜனாக நிற்கும் தருணத்திலும் அவன் அறத்தின் பொருட்டு தவிப்பது பெரும் நடனம். அறத்தின் பொருட்டு அறத்தோடு வாழ்பவனுக்காக மட்டும் அறம் மண்ணில் இருக்கிறது. அறம் அவனைவிடுவதில்லை. அவனும் அறத்தை விடுவதில்லை.
சொல்லும் பொருளும் ஒன்றென நிற்கும் கோலம்.
சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே நின் புதுமலர்த்தாள்
அல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே-
அபிராமி அந்தாதி. முதலில் நாய் தருமனுக்கு முன் சென்றது. பின்பு தருமன் நாயிக்கு முன் சென்றான். என்ற காட்சியில் உள்ளம் உருகினேன். அறத்தைப் பற்றுபவனுக்கு முதலில் அறம் வழிகாட்டுகிறது. அறமென்றே வாழ்பவன் பின்பு அறத்திற்கு வழிக்காட்டுகிறான். நெஞ்சை அள்ளும் உண்மையின் தரிசனம். வெண்முரசு என்று காவியம் தந்த உங்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி.
அன்புடன் ராமராஜன் மாணிக்கவேல்