ஜெயமோகனின் 'வெண்முரசு' நிறைவடைந்தது. மொழியிலும், கருத்திலும் சமகால எழுத்துகளின் சாயலின்றி அதன் போக்கு ஒரு பேரொழுக்காக இருந்தது உண்மையில் ஒரு அற்புதம். தமிழ் இலக்கியம் அதன் செவ்வியல் தன்மையாலேயே ஜெமோவின் வழி இப்படைப்பைச் சென்றடைய முடிந்தது.
ஒரு செவ்வியல் மரபின் உள்ளடக்கம் என்பது மிகவும் ஆழமானதும், நவீன மனிதனின் உள்ளடுக்குகள், முரண்கள் அத்தனையின் மீதும் ஒளிபாய்ச்சக்கூடியதுமாகும். ஏனெனில் செவ்வியல் என்பது தேர்ந்த, மேதமைகளின் எண்ணியெண்ணி துலக்கியும் தொகுத்தும் நமக்குள்ளாகவும் புறத்திலும் செய்யப்பட்ட சேகரமே. அந்தச் சேகரத்தின் அத்தனை வலிமையும், வளமும் கொண்டு விரிந்த ஒரு மலர் வெண்முரசு.
ஒரு அத்தியாயம் கூட கடனுக்காக எழுத்தப்பட்டதாக நான் உணரவில்லை. தத்துவத்திலும், கலையிலும் மிகச்சாதரணமாக வடமொழின் பயன்பாட்டால் ஒழிந்த பல சொற்களுக்கு மிக இயல்பான தமிழ்ச் சொற்கள் எழுந்து வந்திருப்பதை தமிழ் செவ்வியல் ஊடுருவிய, அதில் தோய்ந்த ஒரு படைப்பு
மனம் மட்டுமே செய்யமுடியும். இப்படி பல உன்னதங்களை அப்படைப்பில் ஒருவர் கண்டுகொள்ளமுடியும்.
ஜெமோவின் மீது எனக்கு கடுமையான விமர்சனங்கள் உண்டு. அவரது அரசியல் நிலைப்பாடு,
உத்திகள், கருத்து வெளிப்பாடுகள் இவை மீது எனக்கு ஒவ்வாமை உண்டு. அது வாசிப்பனுவத்தைப் பாழாக்குகிறது என்பது உண்மைதான்!
ஆனால் ஜெமோ பெரும்பாலும், பெரும்பாலும்தான் புனைவுகளில் தன்னை வெளிப்படுத்துவதில்லை.
தன்னைக் கண்டுபிடிப்பதில் அல்ல தன்னைக் கடந்து போவதையே எழுத்தின் மூலம் செய்யக்கூடியது
என்று சொன்னதாக நினைவு.
தங்கமணி [சமூக ஊடகப் பதிவு]