Sunday, July 19, 2020

வெண்முரசென்னும் உறவின் நிறைவு



அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

 புஷ்கரவனத்தில் குடிலின் முன்பு நின்றிருந்த செண்பக மரத்தின் அடிமர நிழல்,  அந்தியில் ஏற்றி வைத்த மண் அகல் விளக்கொளியில் முற்றம் வரை விழுந்திருந்ததை கண்டுகொண்டிருந்த  ஆஸ்திகனுக்கு அன்னை மானசாதேவி அன்று சொல்லத்துவங்கிய கதை, இன்று மானசாதேவியின் நூற்றெட்டு நாகஸ்தலங்களில் ஒன்றில் வழிபடும் சீர்ஷனுடன் பயணித்து, மற்றுமொரு அன்னை, ஆயர்குடிப்பிறந்த அழகை, ஆழிப்பால் பெருக்கின் அலையை,, கரியோனை, அணிச்சங்கனை,தேவர்க்கிறைவனை,அலைமலர் கண்ணனைப் பாடும் இனிய தாலாட்டில் நிறைவுற்றிருக்கிறது. இத்தனை ஆண்டுகாலம் எங்களுடனேயே வெண்முரசும் வளர்ந்தது, திகழ்ந்தது, இனி எந்நாளும் எங்களுடனும் இனி வரும் தலைமுறையுடனும் என்றென்றுமென இருந்து கொண்டுமிருக்கும்

இம்மாபெரும் படைப்பின் நிறைவைக்குறித்து நான் உண்மையில் அஞ்சிக்கொண்டிருந்தேன். முதலாவிண்னை வாசிக்க வேண்டாமென்று கூட நினைத்திருந்தேன். வருடங்களாக  என்னுடன் மிக அணுக்கமாக இருந்த வெண்முரசின் நிறைவு எனக்குள் ஒரு வெறுமையை, மாளாத்துயரை, பொருளின்மையை உருவாக்கிவிடும் என்றே நினைத்திருந்தேன். ஆனால் அப்படி இல்லாமல் கமுகும், மஞ்சளும் செங்கீரையும், மூங்கிலும்,அசோகமும் ஆலும், அருகும், நிலவும் குளிரும், நீள்பீலியும், கானும், கடலும், வானும் வளியும், கரியோனின் நீலமலர்க்காலடி படிந்த பொன்பரப்பும், பால் உலர்ந்த கன்னங்களுக்கிடப்பட்ட ஓராயிரம் முத்தங்களுமாய், பூத்தெழுந்த பொன்மலரை பாடிப்புகழும் தாலாட்டுடன் இனிதே நிறைவுற்றிருக்கிறது. ஆம் நிறைவு என்று வாசிக்கையில் உணரும் உண்மையான் பொருளே வெண்முரசின் நிறைவுதானென்று எண்ணுகிறேன்.

வெண்முரசு துவங்கிய போதும் அழகு, எங்களுடனேயெ இத்தனை வருடங்கள் வளர்ந்தபோதும் அழகு, இளமழை   பொழிந்துகொண்டிருக்கும்  இருள்பிரியா இக்காலையில் நிறைவுற்ற போதோ இன்னும் பேரழகு.  அவ்வன்னையின் தாலாட்டு ஓய்ந்த பின்னரும் அது சென்றடைந்த இடத்திலேயே இருக்கும் சீர்ஷனைப்போல வெண்முரசு நிறைவடைந்த பின்னரும் அது என்னை அழைத்துச் சென்று  விட்டிருக்கும்  அவ்வுலகிலேயே நிறைவுடன் இருக்கிறேன்.

மகாபாரதக்கதையில் மிகஇளம் வயதிலேயே  பித்துக்கொண்டிருந்த,  ஒரே மகனுக்கும் சந்தனுபரீக்‌ஷித் என்றெ பெயரிட்டிருக்கும் என் சகோதரி சங்கமித்ரா எங்களின் இளம்வயதில் பள்ளி விளையாட்டு மைதானத்தில் எனக்கும் இன்னும் சில தோழிகளுக்குமாக ஈரமணலில் குச்சியொன்றினால் ஒரு மரம் வரைந்து அடித்தண்டை சந்தனுவென்றும், அதிலிருந்து கிளைவிரித்துச்சென்ற முழுமகாபாரதக்கதையையும் சுருக்கமாக விளக்கிய கணம்தான் மகாபாரதக்கதைகளுக்கான விதையொன்று மனதில் விழுந்த கணம். வெண்முரசு நிறைவுற்றிருக்கும் இக்கணம் வரையிலும் அம்மரம் வளர்ந்தபடியேதான் இருந்தது

வெண்முரசு போன்ற பெரும்படைப்பொன்று நிகழ்ந்த காலத்தில் நானும் இருப்பதும், அதை முழுமையாக,வாசித்ததும், அம்மொழி எனக்கு புரிந்ததுமே என் வாழ்வின் ஆகசிறந்த விஷயங்களாகியிருக்கின்றன. என் வாழ்வையே வெண்முரசுக்கு முன்னும் பின்னுமென இரண்டாக பகுத்துக்கொள்ளலாம் அத்தனைக்கு பெரும் அகமாற்றங்களை ஏற்படுத்தியிருக்கும் படைப்பு இது. துவங்கிய நாளிலிருந்தே தினமும் என் காலைகள் வெண்முரசினோடுதான் புலர்ந்தன. தவிர்க்க இயலாத காரணங்களால் சிலநாட்களைத்தவிர வேறெப்போதும் வெண்முரசை வாசிக்காமல் இருந்ததேயில்லை

சொல்லப்போனால்  அஸ்தினாபுரியிலும் காசியிலும் மகதத்திலும் அங்கத்திலும் சொல்வளர்க்காட்டிலுமேதான் நான் வாழ்ந்துகொண்டிருந்தேன் அவ்வப்போது அவ்வுலகின் திரைவிலக்கி இவ்வாழ்வில் அன்னையும், ஆசிரியையுமாக இருந்தேனென்றே சொல்லலாம். வெண்முரசின் தாக்கமும் எனக்கு மிக அதிகம் இருந்தது. குறிப்பாக வெய்யோனும் மாமலரும். அப்போதெல்லாம் காலையில் வாசித்த அத்தியாயம் ஏற்படுத்திய உளஎழுச்சிகளிலிருந்து, அன்றைக்கு இரவு வரையிலுமே கூடவிடுபடமுடியாமலிருந்திருக்கிறேன்.

வகுப்பில் கரும்பலகையில் எழுதிக்கொண்டிருக்கும் போதும் உள்ளத்தின் ஒருபகுதியில்  வெண்முரசின் எதோவொரு நிகழ்வொன்றின் பொருட்டான துயரோ, மகிழ்வோ பொருளின்மையோ, சீற்றமோ இருந்துகொண்டிருந்த நாட்கள் பற்பல. வாசிக்கையில் உடல்மெய்ப்புக்கொண்ட பலநூறுகணங்களை இப்போதென நினைவிலிருந்து மீட்டெடுக்க முடியும்.

எப்போதும் வெண்முரசின் அத்தியாயங்களை நேரிடையாக தளத்தில் சென்று வாசிக்காமல்,  நான் வெண்முரசை மின்னஞ்சல் வழி தொடர்ந்து கொண்டிருந்ததால் உள்பெட்டியில் சென்று, மின்மடலை திற்ந்தே வாசிப்பேன். மீள் வசிப்பே தளத்தில். அது இம்மாபெரும் படைப்பு எனக்கே எனக்கெனெ எழுதப்பட்டு மின்மடலாக அனுப்பப்பட்டிருக்கிறது என்னும் ஒரு மகிழ்வையும் அங்கீகாரத்தைதியும் எனக்களித்து வந்தது பலநாட்கள் கண்விழித்திருந்து 12.01 க்கு காத்திருந்து வாசித்திருக்கிறேன்.

காலையில் வாசித்துவிட்டு மகன்களுக்கு சொல்ல இன்னொருமுறையும் வாசித்துவிட்டு, பயணங்களிலும், கல்லுரியில் வகுப்புகளுக்கான இடைவேளையிலும் மீள மீள வாசித்திருக்கிறேன்

மாமலர் நிகழ்ந்து கொண்டிருக்கையில் டெங்கு காய்ச்சலால் கொத்துக்கொத்தாக பலர் எங்களூரிலும் சுற்றுப்புற கிராமங்களிலும் உயிரிழந்து கொண்டிருந்தார்கள். எனக்கும் அக்காய்ச்சல் தொற்றி, உள்ளூரில் ஒரு சிறிய மருத்துவமனையில் 1 வாரமிருந்த போதும் தினம் வெண்முரசை வாசித்துக்கொண்டிருந்தேன். என் ரத்த அணுக்களின் அளவு  3000த்திலிருந்து மிக வேகமாக குறைந்த ஒரு  அதிகாலையில் உடனே ஆம்புலன்ஸில் என்னை கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையின் டெங்கு சிறப்புப் பிரிவில் அனுமதிக்க வேண்டுமென்னும் ஒரு அவசரநிலையின் போது கண்ணீருடன் என் சகோதரி ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யச்சென்ற இடைவெளியிலும் அன்றைய வெண்முரசின் அத்தியாயத்தை வாசித்தேன். கோவைக்கு சென்று கொண்டிருக்கையில், வண்டியின் விரைவும் அந்த  ஒலிப்பானின் சத்தமும் கடும்காய்ச்சல் கொடுத்த தலைவேதனையுமாக கனவும் நனவும் கலந்த ஒரு பயணத்தில் என்னுடன், உறவை முடித்துக்கொண்டு விடைபெற்ற கசனும், கண்ணீரும் சினமுமாக தேவயானியும் உடனிருந்தார்கள். நான் இறந்துவிடுவேனோ என்னும் அச்சமும், விடுதியில் இருந்த மகன்களின் நினைவும் எவ்வளவு இருந்ததோ அதற்கிணையாகவே , தேவயானியின் இறப்புக்கு நிகரான அந்த கைவிடப்பட்ட தருணமும் அது அளித்த துயரும் இருந்தது அப்போது.  இப்போதும் ஆம்புலன்ஸின் ஒலி கேட்கையில் எனக்கு கசனும் தேவயானியும்  // மீண்டெழும் வாய்ப்புள்ள இறப்பென்பது மாளாத்துயர்ப்பெருக்கு// என்னும் வரியும் நினைவுக்கு வரும்.

நானும் உடழலிந்து வெறும் உள்ளமென இருந்த நாட்கள் அவை. தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்த அந்த 3 நாட்களில் எனக்கு அலைபேசி கொடுக்கப்படவில்லை அதன்பொருட்டான என் அதி தீவிர முயற்சிகளை கேள்விப்பட்ட தலைமை மருத்துவர் ஒருவர் கேலியாக என்னிடம் ’’இப்படி மகாபாரதம் படிச்சே ஆகனும்னு அடம்பிடிச்சீங்கன்னா அப்புறம் கருடபுராணம் வாசிக்கவேண்டி வந்துரும்’’ என்றார் சிரித்தபடி. அதற்கு நான் புன்னகைக்கக்கூட செய்யாததால்  ’’ஏம்மா, எப்பவோ நடந்த எல்லாருக்கும் தெரிஞ்ச கதைதானே மகாபாரதம், அதுக்கு ஏன் இப்படி மெனக்கெடறீங்க? என்றார்.  அவருக்குபுரியும்படி சொல்ல என்னிடம் பதிலில்லை ஆனால் எனக்கு அலைபேசியை  கொடுக்கும்படி  செவிலியரிடன் சொல்லி விட்டுச் சென்றார் அவர்

மானசாதேவியின் மடியில் படுத்து கதை கேட்ட ஆஸ்திகனைப்போலவே சிறுவர்களாக  என்னிடம் கதைகேட்டு வெண்முரசின் கூடவே வளர்ந்து இன்று தோளும், மார்பும், அகமும் விரிந்த இளைஞர்களாக  என் இரு மகன்களும் இருக்கிறார்கள். அப்போதெல்லாம் காலை 8 மணிக்கு வரும் பள்ளி வாகனத்துக்கு 7.30க்கே தயாராகி தெருமுனையிலிருக்கும் அரசப்பெருமரமொன்றின் புடைத்த வேர்களில்  மூவருமாக அமர்ந்து வெண்முரசை வாசிப்போம் வாகனத்தின் மஞ்சள் நிறம் கண்ணுக்கு தென்படும் வரையில் கதை போய்க்கொண்டிருக்கும். முடியாத கதையின் நினைவுகள் கண்களில் நிறைந்திருக்க கனவிலென வண்டியேறிச்செல்லும்  பெரியவன் சரண் மாலை வீடுதிரும்பி என் கைகளைப்பிடித்தபடி சாலையைக் கடக்கும்போதே ’’அப்புறம் என்னாச்சு சொல்லு சொல்லு’’ என்றபடியே வருவான் அந்த முழுநாளும் அவன் மனதில் வெண்முரசேதான் நிகழ்ந்து கொண்டிருந்திரும்திருக்கும்

 9 ஆம் வகுப்பில் பூரிசிரவசின் மேல் பெரும் அபிமானமும் அணுக்கமும்  அவனுக்கு ஏற்பட்டிருந்த அந்தக்காலத்தில், விடுதியில் தங்கவேண்டி வரும்  எதிர் காலத்தின்  பயிற்சியாக   திங்கட்கிழமை பள்ளி விடுதியில் விட்டு வெள்ளியன்று வீடு திரும்பும் ஒரு ஏற்பாட்டை 3 மாதங்கள் செய்தேன். வீட்டிலிருந்து பள்ளி செல்லும் இளையவன் தருண் மதிய உணவு இடைவேளையில் அண்ணனை சந்திக்கும் போது கொடுக்க அன்றன்றைக்கான வெண்முரசின் நிகழ்வுகளை ஆங்கிலத்தில் சிறு சிறு குறிப்புகளாக ஒரு துண்டுப்பேப்பரில் எழுதி கொடுத்துவிடுவேன், 11, 12 வகுப்புக்களை இருவரும் கோவையில் ஒரு பள்ளி விடுதியில் இருவரும் தங்கிப்படிக்கையில், மாதமொருமுறை வெளியே அழைத்துச்செல்லலாமென்னும் ஞாயிறுகளிலும் சிறுவாணி அணைக்கு செல்லும் மரங்கள் சூழ்ந்த அந்தச்சாலையில், பள்ளிக்கு வெளியே சிறுபடிகளுடன் கூடிய  பீடத்துடன் ஒரு கொடிமரம் இருக்கும் அங்கு அமர்ந்து மணிக்கணக்காக, ஒருமாத வெண்முரசின் கதைகளை பேசுவோம். பிற மாணவர்கள் குடும்பமாக கோவையின் உணவு விடுதிகளுக்கும் மால்களுக்கும் திரைப்படங்களுக்குமாக சென்ற பல நாட்களில் நாங்கள் மூவரும் அஸ்தினபுரியிலும் இந்திரபிரஸ்தத்திலுமாக இருந்தோம். வெண்முரசால் நானும் மகன்களும் இன்னும் அணுக்கமானோம்.

மகன்களுக்கு மட்டுமல்லாது மிக நெருங்கிய நண்பர்களுக்கும் அலைபேசியில் பலமணிநேரம் வெண்முரசின் முக்கியப்பகுதிகளை சொல்லி இருக்கிறேன். ஒருமுறை ராமேஸ்வரத்திற்கு  பொள்ளாச்சியிலிருந்தே காரில் சென்று வந்த பயணம் முழுவதும் உடன்வந்த குடும்பத்தினருக்கும் சேர்த்து வெண்முரசை வழியெல்லாம் சொல்லிக்கொண்டே இருந்தேன். அப்போது துருவனின் கதை நிகழ்ந்துகொண்டிருந்தது. உணவுக்காக சாலையோரம் நின்றிருந்த போது அந்த வாடகைக்காரின் ஓட்டுனர் என்னிடம் தான் வாழ்க்கையில் கதையே கேட்டதில்லை என்றும் இந்தகதையை தெய்வமே சொல்லிக்கொண்டு வந்ததுபோலிருப்பதாகவும் சொன்னார் இனி மீதிக்கதையை தான் எப்படி தொடர்ந்து வாசிப்பதென்றும் கேட்டார். உளமகிழ்ந்து உங்களின் தளத்திற்கு சென்று எப்படி வாசிப்பதென்பதை சொல்லிக்கொடுத்தேன் அவருக்கு

.அவருக்கு கதையில் வரும் ’’கத்தியை குத்தி, சுழற்றி பின்னர் உருவி வெளியே எடுப்பது’’ என்பது போல வரும் ஒரு   சொற்றொடரை குறித்து பெரும் பிரமிப்பு இருந்தது அதை சொல்லிக்கொண்டே இருந்தார்

எங்களது கோடைவிடுமுறைகள் எல்லாமே வெண்முரசுடன் தான் கழிந்தன. இளநாகனின் பயணமொன்றின் போது அவன் ஒரு மூதாட்டியின் இல்லத்தில் கம்பரிசிக்கூழ் அருந்துவதை வாசித்தபின்னர்,நினைத்துக்கொண்டதுபோல  புத்தகத்தையும் கையில் எடுத்துக்கொண்டு மெல்ல நடந்தே பக்கத்து ஊருக்கு சென்று அங்கு சாலையோரம் விற்கப்பட்ட கம்பங்கூழை வாங்கி அருந்தியபின்னர் கதை சொல்லியபடி, கேட்டபடியே வீடு வந்தோம்.

மழைப்பாடல் புத்தகமாக வந்த சமயத்தில் அதை எடுத்துக்கொண்டே மகாபலிபுரம் கடற்கரையொட்டிய ஒரு விடுதியில் தங்கசென்றிருந்தோம். அங்கு அலைகளின் அருகிலமர்ந்து 5 நாட்களில் மழைப்பாடலை முழுமையாக வாசித்தோம். ’’இத்தனை செலவு செய்து அங்கு வந்தும் இந்த புத்தகத்தை படிக்கறதுக்கு பொள்ளாச்சியிலேயே இருந்திருக்கலாமென்னும்’’ கணவரின் அங்கலாய்ப்புக்கும், கோபத்திற்கும்   அப்போது அஸ்தினபுரியிலும் மதுராவிலும் காசியிலும், காந்தாரத்திலும் இருந்த நாங்கள் எதிர்வினையாற்றவே இல்லை. இப்படி வெண்முரசுடன் கழிந்த இனியநாட்களின் பலநினைவுகள் ஏராளமாக  எங்களுடன் இருக்கின்றது

சென்ற மாதத்திலிருந்து முதற்கனலிலிருந்து மீள் வாசிப்பை துவங்கி இருக்கிறோம். வெண்முரசு நிறைவெனும் துயர் அதிகம் ஏற்பட்டிருக்காததற்கு இந்த மீள் வாசிப்பும் ஒரு காரணம். பூரிசிரவஸின் முறிந்த காதல்களுக்கு  கண்ணீர் விட்டழுத அன்றைய சரண், இப்போது எனக்கு கதையை சொல்லிக்கொண்டிருக்கிறான். மீண்டும் ஒரு முறை வாழக்கொடுத்து வைத்ததுபோலிருக்கிறது மகன் சொல்லச்சொல்ல வெண்முரசை நான் இப்போது கேட்கையில்.

வெண்முரசு ஏற்படுத்திய அதே பிரமிப்பும் மகிழ்வும் வெண்முரசின் வாசகர்களும் எனக்களித்தார்கள். வெண்முரசு ஒரே ஒருவரால் எழுதப்பட்ட பெரும்படைப்பென்பதை நம்பவே நம்பாத ஒரு தலைமுறைக்கு அது ஒற்றை மனிதராக உங்களால் மட்டுமே எழுதபட்டதென்று சொல்லும் சாட்சிகளாகவே வாசகர்களாகிய நாங்கள் இருப்பதாக நினைத்துக்கொள்வேன்.    

முதன்முதலாக வெண்முரசு கூடுகைக்கு விஜயசூரியனின் இல்லத்திற்கு சென்று அங்கு அத்தனை தோழமையும் அத்தனை புரிதலுமாக ஆணும்,பெண்ணும் வாசிப்பில் மகிழ்ந்திருக்க முடியுமென்பதை வாழ்வில் முதன்முதலாக கண்ட பிரமிப்பு எனக்கு இன்னும் இருக்கின்றது. அதுபோன்ற சந்தர்ப்பங்கள் என் குடும்பத்து பெண்களுக்கெல்லாம் கற்பனைக்கெட்டாதவை, எனக்கு எப்படியோ வெண்முரசால் அருளப்பட்டவை

.சொந்த ஊரான வேட்டைக்காரன் புதூரின் சித்தர் கோவிலுக்கு ஒருமுறை பேருந்தில் சென்று கொண்டிருக்கையில் நீங்களும் அருண்மொழியுமாய் ஒரு ஐரோப்பிய பயணத்திலிருந்த புகைப்படங்களை நண்பரொருவர்  அனுப்பியிருந்தார். மகன்களுடன் அவற்றைப் பார்த்துப் பேசி மகிழ்ந்து கொண்டிருக்கையில் அருகில் அமர்ந்திருந்த ஒரு கிராமத்துப் பெண்மணி உங்களிருவரின் புகைப்படத்தை தொட்டுக்காட்டி’ யாரு கண்ணு உன்னோட அண்ணனும் நங்கையாளுமா?‘ என்றார்கள். மனம் சட்டென்று பூரித்து, நிரம்பி, மூச்சடைத்தது, சமாளித்துக்கொண்டு ’ஆம்’என்றேன்.

 முதல் சந்திப்பிலேயே சின்னப்பிள்ளைக்கு சொல்லித்தருவதைப்போல அன்புடனும் பொறுமையுடனும் எனக்கு தமிழ் தட்டடச்சு செய்ய கற்றுக்கொடுத்த மீனாம்பிகையிலிருந்து, சொந்த சகோதர சகோதரிகளைப்போல இன்பத்திலும் துன்பத்திலும் தோள் கொடுக்க தயாராக  உலகெங்கிலும் இருக்கும் அத்தனை நண்பர்களுடன்  நானும் வெண்முரசு குடும்பத்தின் ஒர் அங்கம் என்பதைத்தவிர பெருமையான, சிறந்த  விஷயம் எனக்கு வேறோன்றுமே இல்லை

வெண்முரசை வீட்டிற்கு வெளியே மரங்களுக்கு அருகிலும், அடியிலும் அமர்ந்தேதான் பெரும்பாலும் வாசித்திருக்கிறோம். மகன்களுடன் மரங்களும்,செடிகொடிகளும் சேர்ந்து வெண்முரசை கேட்டுத்தான் வளர்ந்தன. அன்று சிறு கன்றுகளாக வைத்திருந்தவை இன்று வீட்டைவிட உயரமான பெருமரங்களாகி விட்டிருக்கின்றன. மாமலர் துவங்குகையில் பூக்கத்துவங்கிய புன்னைக்கு மாமலர்ப்புன்னை என்றே பெயர். சொல்வளர்க்காடு துவங்குகையில் நட்டுவைக்கப்பட்ட ஏழிலைப்பாலையும், இந்திரநீலத்தில் பாளைவிட்ட தென்னையொன்றும், காண்டீபத்தின் போது மலரத்துவங்கிய கொடிச்சம்பங்கியும், வெண்முகில் நகரின் மீது படர்ந்து மலர்ந்த ருத்ரமல்லியுமாய் என் மகன்களுக்கு நான் விட்டுசெல்லவிருப்பது கதைகேட்டுக்கேட்டு வளர்ந்து இவ்வீட்டை சூழ்ந்திருக்கும் பசுமையையும், வெண்முரசென்னும் உறவுகளையும் மட்டும்தான்

வாசிப்பென்பது இத்தனை பெரிய இயக்கமாக, ஒரு கொண்டாட்டமாக இருப்பதெல்லாம் வெண்முரசைப்போன்ற ஒரு பேரிலயக்கியத்திற்க்குத்தான் சாத்தியம். என்னைபோல் வீட்டுக்கும், வேலைசெய்யும் இடத்துக்கும் தவிர வேறெங்கும் செல்லும் சாத்தியங்களும், சுதந்திரமும் அற்ற பெண்ணுக்கு வெண்முரசு திறந்து விட்டிருக்கும் வாயில்கள் ஏராளம்.

 வெண்முரசின் சொற்களெல்லாம் எங்களின் மனதில் பல்லாயிரம் விதைகளாக, நிறைந்து முளைத்து வளர்ந்து கொண்டெ இருக்கின்றது. ஆலெனப்பெருகி அருகென தழைத்தபடியெ இருக்கும் வெண்முரசு வாழ்வில் கொண்டுவந்திருக்கும்  நன்மாற்றங்களுக்கும், நிறைவிற்கும், மகிழ்விற்கும் இனிமைக்கும், துயருக்கும், கனிவிற்கும் இன்னும் எல்லாவற்றிற்குமாய் மனம் நிறைந்த நன்றிகள்

  வெண்முரசின் கழிமுழையின் தாளம் என் இறுதிக்கணம்  வரையிலும் இதயத்துடிப்பிற்கு இணையாகவே ஒலித்துக்கொண்டேதான் இருக்கும் ஒவ்வொரு வருடமும் இறுதிவருட படிப்பை முடித்துவிட்டு கண்ணீருடன் விடைபெற்றுக்கொண்டு பிரியும் மாணவர்களை நினைத்துக்கொண்டு தனித்தமர்ந்திருக்கையில் உணரும் இனிய துயரே இன்று எனக்கிருக்கிறது,  ஒருவேளை எனக்கு பெண் பிறந்திருந்து அவளுக்கு விருப்பமானவருடன் அவளது திருமணம் முடிந்து அவள் சென்றிருந்தாலும் இப்படித்தான் உணர்ந்திருப்பேனாயிருக்கும்.  

// நிறைவின்மை என்னும் கூரலகு கொண்ட மரங்கொத்தி.

முடிவின்மையை ஏந்தி அமைதிகொண்டிருக்கிறது காடு//

என்று சொல்லி இருப்பீர்கள் பிரயாகையில். அப்படியான ஒரு தருணம் இது. மீண்டும் மீண்டும் நன்றி அனைவர் சார்பாகவும்

அன்புடன்

லோகமாதேவி