Friday, July 17, 2020

வாசகர்களில் நானும் ஒருவன்


அன்பின் ஜெ,

  வெண்முரசின் நிறைவு அளிக்கும் இந்தக் கணத்தின் உணர்வுகள் குழப்பமானவை. ஆனால் மேலோங்கியிருப்பது துக்கமும் வெறுமையும் தான். ஆரம்பம் முதல் கடைசி வரைத் தொடர்ந்து வந்த வாசகர்களில் நானும் ஒருவன்.

     "சங்க சித்திரங்கள்" முதல் உங்களைத் தொடர்ந்து வந்ததால் நீங்கள் வெண்முரசு அறிவித்தபோது போதே இதை உங்களால் சிறப்பாக எழுதிவிட முடியும் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமுமில்லை. பெரிய எதிர்பார்ப்பும் இருந்தது. முதல் அத்தியாயத்திலேயே வெண்முரசு அதன் வீச்சைத் தெரிவித்தது‍ இறுதிவரை அது மேலும் மேலும் விரிவாகிக்கொண்டே இருந்தது. அதன் பிறகு என் சந்தேகம் எல்லாம் அதன் வாசகனாக என்னை ஆக்கிக் கொள்ளமுடியுமா என்பது மட்டுமே.

     இவ் வெண்முரசு வாசிப்புக் காலங்களே என் வாழ்வின் வண்ணம் மிகுந்த காலங்கள். காலச் சக்கரத்தின் ஒரு சுழிப்பின் மொத்த‌ வாழ்வைஉங்களின் எழுத்துக்களால் நான் நிகர்வாழ்ந்து இருக்கின்றேன். இதில் நான் பெற்ற உணர்வுகளையும்உச்சங்களையும் என்னால் விளக்கிவிட முடியாது. அனைத்தும் வண்ணங்களும் கலந்து வெண்மையானது போல இத்தருணத்தில் என் உணர்வுகள் அனைத்தும் குழம்பி கண்ணீராகவே வெளிப்படுகின்றது. உங்களின் அயராத அசுர உழைப்பிற்கும்ஞானத்திற்கும் முன் பணிகிறேன். "வெண்முரசு" வாசகனாகும் பேறுபெற்றேன்.

வெண்முரசின் ஒவ்வொரு அபார தருணத்தின் போதும்உச்ச உணர்வின் போதும் நான் மானசீகமாக இருவருக்கு என் நன்றியைத் தெரிவிப்பேன். அன்று காலையில் பொன்னொளி கொண்டு காசர்கோடு தண்டவாளத்தில் ஊர்ந்த புழுவிற்கும்மகாபாரதத்தை எழுதக்கேட்ட சைதன்யாவிற்கும்.‍‍‍ இப்போதும் அவ்வாறே.

என் வாழ்நாள் முழுமைக்கும் ஆசிரியருக்கு மனமார்ந்த நன்றி.!!!

கணேசமூர்த்தி

கத்தார்.