Monday, July 27, 2020

வெண்முரசு ஆக்கம்



அன்புக்கும் மதிப்புக்கும் உரிய ஜெ,



வெண்முரசு ஆக்கம் நிறைவு குறித்து மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

வெண்முரசின் சாதனைகளை பட்டியலிடத் தேவையில்லையென்று நினைக்கிறேன். அதுவாழும். மொழியுள்ள வரை, சொல்லும் பொருளும் உள்ள வரை, மனிதம் உள்ள வரை, அதுவாழும். உங்கள் பெயர் வாழும். இவையெல்லாம் சொல்லத் தேவையுமில்லை.

'பெரும் கடலின் நீர்ப்பரப்பை கையில் ஒரு குவளையோடு எதிர்கொள்ளும் உற்சாக
மனநிலை' என்று உங்கள் உள்ளத்தைப் பற்றி உங்களின்  வரி நினைவுக்கு வருகிறது.
குவளைகள் நிறைந்ததற்காக மகிழ்ச்சி. திவலைகள் தமிழர்மேல் தெறித்தமைக்காக நன்றி.

உங்களுக்குள் ஒரு யானை உண்டு. பேராற்றலுடனும் பெரும் கருணையுடனும் மானுடம்பார்க்கும் யானை. மானுடம் வெல்லும் யானை. ஒரு சிறுத்தை உண்டு.
பேரிறையைத்தேடும் கண்களுடன், ஓசையில்லாத பெருவிசையுடன் பெருங்கனவுகளைவெல்லும் சிறுத்தை. மிக அழகான, ஆற்றலை விரும்பிப் பார்க்கின்ற மனிதக்கண்களுக்கு விருந்தான சிறுத்தை. ஒரு குட்டிப்பூனையுமுண்டு. அன்பென்ற மொழிமட்டும் வேறல்லாது சலிப்பின்றி உலகை, மனிதத்தை விரும்பி நாடுகின்ற பூனை.காண்பவரில் அன்பையும் கனிவையும்  மட்டுமன்றி வேறெதுவும் வருவிக்காத பூனை.வெண்முரசு உங்கள் உள்வடிவம். பலப்பல கணங்களில் பல்வடிவங்களில் பல்சுவைகளைபல்லறங்களை பல தருணங்களை வெளிப்படுத்திய ஆக்கம். அது பல யுகங்கள் வாழும்.

முதலாவிண் துவங்கும் கணத்தில் உங்கள் வரிகள் ஆழமாகச் சலனப்படுத்தின.
"அகத்தில் ஓர் அச்சம் இருந்தது, வெவ்வேறு வகையில் நாஞ்சில்நாடனும் அதைச்
சொல்லியிருந்தார். தமிழில் பாரதம் எழுதி முழுமைசெய்ய எவராலும்
முடிந்ததில்லை. இது முடிவதுவரை வாழ்வு வேண்டும்," என்று
வெளிப்படுத்தியிருந்தீர்கள். உடனே உங்களுக்கு மடல் எழுத அமர்ந்தேன். பாதி
எழுதினேன். அதற்குள் உங்கள் சொற்பெருக்கு துவங்கிவிட்டது. பெருகிப்
பொங்கியது. மூன்று நாட்களிலேயே உங்கள் முதலச்சம் வீணானது என்று தோன்றியது.என் மைந்தன் ஆறு வயதில் முதன்முதலில் சதுரங்கத்தில் குதிரையை நகர்த்தலின்விதிகளை விவரித்தபோது, 'ஐயோ! எவ்ளோ கஷ்டம்!' என்றான்! அதுவே ஞாபகம் வந்தது.புன்னகை வருவித்தது.

புகழ்ச்சிகளோ வாழ்த்துக்களோ பெரும்சலனத்தைத் தராத நிலைக்குச்
சென்றிருக்கிறீர்கள். ஆனாலும் இச்சொற்கள் உங்களுக்கே. கலையின் அழகை,
இசையின் இனிமையை, ற்களின் முழுமையை வெண்முரசின் வழியாகப் படைத்தமைக்காகஉங்களுக்கு வணக்கங்கள்.

செல்லுங்கள். சென்றுகொண்டேயிருங்கள். உங்களுடன் பேசியிராத, சந்தித்திராத,
அன்பையும் வணக்கத்தையும் வெளிப்படுத்தும் தருணங்கள் வாய்த்திராத எவ்வளவோஉள்ளங்களின் நினைப்புகள் உங்கள் வழித்தோழர்கள். உங்கள் குழந்தைகள். உங்கள் கவசங்கள்.

நீங்களே எழுதியது போல, 'நூறாண்டிரும் என்பதற்கு மேல் என்ன வாழ்த்த'!?


அன்புடன்

வெ.சரவணன்