குழப்பங்களும் தயக்கங்களும் அதே சமயம் சின்ன சின்ன இன்பங்களும் நிறைந்த வாழ்க்கையின் இடையே உங்களை 2008 ம் வருடம் நான் கண்டடைந்தேன். நிச்சயமாக அது ஒரு கீதா முகூர்த்தம் தான். வெண்முரசு ஆரம்பித்து சித்ரகரணி கதையில் வியாசர் சீடனிடம் சொன்ன நியாயத்துடன் எனக்கு பாரதம் முடிந்து விட்டதாக நினைத்தேன். அதுவே வாழ்வின் இறுதி தத்துவமாக தோன்றியது. ஆனால் வாழ்வில் நிறையாத கேள்விகள் தொடரும் போது வெண்முரசில் இருந்து பதில்கள் வந்து கொண்டே இருந்தது.
இதன் வாசகர்கள் பலர் இதன் ஆழம் அகலம், இதிலுள்ள தொன்மங்கள் படிமங்கள் பற்றிய கருத்துகளையும், விமர்சனங்களையும் எழுதி விட்டனர் இன்னும் எழுதுவார்கள். என்னை பொறுத்தவரை என் தனிப்பட்ட வாழ்க்கையில் நான் போகவேண்டிய பாதை என்ன என்ற அடிப்படை கேள்விக்கு பதிலாகவும் பதில் களின் ஊற்றாகவும் மட்டுமே எனக்கு திசை தெளிவித்த நாவல் வெண்முரசு. அறிய விமர்சனங்களுக்கிடையே இதை எழுதவும் வேண்டுமா என்ற தயக்கம் எனக்கு இருந்தது. ஆனால் இந்த காலை மிக நிறைவான ஒரு பொழுது. சமீபத்தில் ஏதோ ஒரு சேனல்லில் திருப்பதி உத்சவருக்கு மலர் அலங்காரம் செய்வதை காண்பித்தார்கள். கூடை கூடையாய் பல அடுக்காக பல வித மலர்களை கொட்டி குவித்தார்கள். முதலில் எதற்கு இவ்வளவு என்று தோன்றினாலும் ஒரு க்ஷணத்தில் ஒரு மலர் கூட அதிகமில்லை என்ற எண்ணம் வந்தது. அந்த நினைவு வந்தது.
ஆயிரம் பூக்களில் ஒரு எளிய பூவாக என் நிறைவையும் நன்றியையும் உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
அன்புடன்
கோகுல்.