வணக்கம். வரிசையிலே வழக்கம்போல கடைசியில் நிற்கிறேன். நலம்தானே. மலையை இறக்கிவைத்த நிம்மதி இருக்குமே. ஒரு பெரும் துயரமாகவும் இருக்கும். என்னுடைய மகிழ்ச்சியை வர்ணிப்பதற்கு வார்த்தையே இல்லை. .
ஏழுவருடங்களுக்கு முன்னர் சைதன்யாவின் ஒரு வார்த்தையில் நம்பிக்கை வைத்து மகாபாரதக்கதையை 10 வருடங்கள் தொடர்ந்து எழுதப்போவதாக அறிவித்தீர்கள். இதை எழுதி முடிக்கும்போது நான் இருப்பேனா தெரியவில்லை என நான் எழுதினேன். இன்று உங்கள் படைப்பு பூர்த்தியாகிவிட்டது. அந்த அதிசயத்தை என் கண்களால் பார்க்கிறேஎன். 25000 பக்கங்கள். இந்த வாழ்நாள் சாதனை கடந்த 2000 வருடங்களில் எந்த மொழியிலாவது நடந்திருக்கிறதா. உங்கள் காலத்தில் வாழ்வதையே நச்ன் பெரும் பாக்கியமான நினைக்கிறேன்.
வியாச பூர்ணிமா அன்று நிறைவு பெற்றது இன்னும் விசேடம். உங்கள் இரண்டு உரைகளையும் இப்பொழுது கேட்டுக்கொண்டிருக்கிறேன். நீங்கள் நீடூழி வாழ்க.
அன்புடன்
அ. முத்துலிங்கம்