அன்புள்ள ஜெ
வெண்முரசின் உச்சமென அமையும் தகுதிகொண்ட
பகுதி கண்ணனுக்கான பிள்ளைத்தமிழ். தமிழில் எழுதப்பட்ட உரைநடைப்பகுதிகளில் உச்சமான ஒன்று
என்று முப்பது ஆண்டுகளாக தமிழிலக்கியமும் உலக இலக்கியமும் படிப்பவன் என்றநிலையில் உறுதியாகச்
சொல்வேன்.
நவீன தமிழ் உரைநடை என்பதன் பெரிய போதாமையே
அது ஆங்கில மொழியாக்கத்தில் இருந்தே உருவானது என்பதுதான். அந்த மொழியாக்கநெடியால் தமிழுக்கே
உரிய ஓசை அழகு இல்லாமலாகிவிட்டது. அது பெரிய இழப்பு. கபிலன் கம்பன் ஆழ்வார்கள் எல்லாம்
பாடிய மொழியின் அழகை இன்றைய உரைநடையில் தேடமுடியாது. மனதிலே ஆங்கிலம் ஒலித்துக்கொண்டே
இருக்கும்.
அந்த இயல்பு இல்லாமலாகியது கொற்றவையில்.
அன்றைக்கே ஒரு நீண்ட கடிதத்தை அனுப்பியிருந்தேன். வெண்முரசு முழுக்க தமிழின் ஓசை காதில்
ஒலித்துக்கொண்டே இருந்த நாவல். எனக்கு அதில் பேரின்பம் அதுதான். ஆழ்வார்பாடல்களின்
அழகுகொண்ட படைப்பு நீலம். நீலமே வெண்முரசு நாவலின் உச்சமாக வந்ததும் சிறப்புதான். அதுவும்
பிள்ளைத்தமிழ்.
நவீன இலக்கியம் மரபை அர்த்தபூர்வமாகச்
சந்திக்கும் இடம் அது என்று சொல்வேன். பிள்ளைத்தமிழ். ஆனால் புதுக்கவிதையின் அழகுகொண்டது.
அன்னைக்கு அவள் முதல்நிலவை குழந்தை காட்டித்தருகிறது. அதன் கனவில் சின்னக்குழந்தையாக
விளையாடச்செல்லும் களித்தோழியாகிறாள் அன்னை. உதாரணமாக இலையசையாது ஊழ்கமியற்றி காடு காத்திருக்கும் முதுவேனில்
பெருமழையே வருக! என்றவரியில் புதுக்கவிதையின்
அழகும் மரபின் ஓசையழகும் அமைந்திருப்பது.எல்லா வரிகளும் அதே அழகுடன் அமைந்துள்ளன.
ஸ்ரீனிவாஸ்