Saturday, July 25, 2020

அரியணை



ஜெ

சில இடங்கள் வெண்முரசில் அந்தக் கதைச்சந்தர்ப்பதைக் கடந்து சென்றுவிடுவதைக் கண்டிருக்கிரேன். சுதமன் களிற்றியானைநிரையில் அந்த அரியணையை பார்த்து நின்றிருக்கும் இடம் ஓர் உதாரணம். அந்த அரியணை சாதாரணமானது அல்ல. அதற்காகவே அத்தனைபெரிய போர் நடைபெற்றிருக்கிறது. அத்தனை ஆயிரம்பேர் செத்திருக்கிறார்கள். அது பலிகொண்ட தெய்வம்.ரத்தவெறிகொண்டது

ஆனால் அது பேரழகுகொண்டது. அழிவில்லாதது. அந்த அரியணையின் மர்மத்தை அந்த அத்தியாயம் விரித்துச் சொல்லிக்கொண்டே செல்கிறது. அந்த அரியணை இல்லாவிட்டால் அரசன் இல்லை.அறம் இல்லை. சொல்லுக்கு நிலையான அர்த்தம் இல்லை. மக்களின் வாழ்வும் இல்லை. ஆகவேதான் மக்கள் ரத்தம் கொடுத்து அதைக் காக்கிறார்கள்.  

அது ஒரு மாபெரும் மலர்போலிருந்தது. மஞ்சள் மலர். செம்மணிகள் பதிக்கப்பட்டது. அவர் உள்ளம் விம்மியது. அது கோன்மையின் அடையாளம் அல்ல. பல்லாயிரம் படைக்கலங்களால் காக்கப்படும் மையம் அல்ல. வேதச்சொல்லும் அல்ல. அதற்கும் அப்பால் மேன்மையேறிய ஒன்று அதில் இருந்தது. அதை வடிவமைத்த பொற்கொல்லனின் கைகளில் அமைந்து ஒரு தெய்வம் தன்னை எழுப்பிக்கொண்டிருக்கிறது. அது சொல்லுக்கு ஆழத்தை அளிப்பது. வெறும் கோலை காவல்தெய்வமென நிலைநிறுத்துவது.

என்ற வரிகள் அரசு என்ற கருத்து உருவாகி நிலைபெற்ற வரலாற்றைச் சொல்பவை

ராஜசேகர்