வணக்கம் ஆசான்.
உங்கள் வாசகன் என்று என்னை அறிமுகபடுத்திக்கொள்ளும் தகுதி எனக்கில்லை,வெண்முரசை தவிர உங்கள் எழுத்தில் வேறெதையும் இதுவரை வாசித்ததில்லை.ஆனால்,வெண்முரசை முழுமையாக மனம் ஒன்றி படித்திருக்கிறேன்,வெண்முரசு படித்தவர்களுக்கு ஆளுமையும் சிந்தனையும் செம்மையாவதை உணர்வார்கள் என நீங்கள் குறிப்பிட்டதை போல உணர்ந்தவர்களில் நானும் ஒருவன்.
வெண்முரசை படித்த ஒருவரால் உங்களை ஹிந்துதுவத்தின் கைப்பாவையாக ஒருபோதும் பார்க்கமுடியாது.
வெண்முரசு படிக்கும் முன்னர் வரை கிருஷ்ணாவதாரமே துரியோதனனை அழிப்பதற்காக அல்லது திரெளபதிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கிடைக்க மட்டுமேயானதாக நினைத்திருந்தேன்.இங்கு பல்லாயிரம் வருடங்களாக வேர்போல ஊன்றியிருந்த நால்வேதத்திற்கு மேல் அல்லது நால்வேதத்தை எளிதாக்கி ஒன்றாக்கி எழுந்த நாராயணவேதத்தின் பொருட்டே கிருஷ்ணாவதாரமும் பாண்டவர்களும் கெளரவர்களும் ஏனைய மாந்தரும் என்று வெண்முரசின் வழியாகவே புரிந்துகொண்டேன்.
இது இன்றைய தேதியில் என் அறிவுக்கு/சிந்தனைக்கு எட்டிய புரிதல்,வரும் நாட்களில் இது மேலும் கூர்மையாக வளரும் என எதிர்பாக்கிறேன்.
இராஜன் குறை அவர்களின் ஆய்வு,அதை பொதுவெளியில் விவாதபொருளாக்கிய உங்கள் கட்டுரை எதுவும் என் மண்டைக்குள் ஏறவில்லை.என் அளவில் அவர்கள் உங்களை ஹிந்துத்துவா பரப்புரையாளர் என முத்திரைகுத்துவதாக புரிந்துகொள்கிறேன்.நான் யார் என்பது எனக்கும் என் வாசகனுக்கும் தெரியும் என்பதாக நீங்கள் பதில் அளிப்பதாக புரிந்துகொள்கிறேன்.
வெண்முரசின் வழியாக உங்களுடனான விவாதத்திற்கு ஒரு கதவை நான் திறந்துவைத்திருப்பதால்,இனி உங்கள் மற்ற எழுத்துக்களை படிப்பதன் மூலமாக அக்கதவின் வழி வெளிவந்து உங்களுடன் உரையாட இருப்பவன் எனும் முறையில் உங்களிடம் நான் சொல்லிகொள்வது,நான் உங்களுடன் இருக்கிறேன்.
இளைய யாதவரின் பற்றாளர்கள் அர்ஜுணன்,சாத்யகி போல அல்ல அபிமன்யூவின் அனுக்கன் பிரலம்பனைபோல அந்த கால்கள் அவை மட்டும் போதும்,அதைமட்டும் பார்ப்பதே என் தகுதி என்று.(துருபதரை போல,வார்த்தைகளால் உங்கள்மீதான அன்பை சொல்ல முடியாததால்,அனிசொற்களை நாடியிருக்கிறேன்).
நன்றி