Monday, September 9, 2019

அதிரதனும் கர்ணனும்



அன்புள்ள ஜெ,

கர்ணனின் பெண்களுடனான விலக்கத்தைப் பற்றிய கடிதங்களைக் கண்டேன். அவ்விலங்கங்களில் தலையாயது ராதை உடனான அவனது விலக்கம். அது கர்ணன் கிட்டத்தட்ட உடைவது தான். அவன் முற்றிலும் எதிர்பார்க்கவே செய்யாத ஒன்று.

மாறாக அதிரதர் கர்ணனை கைவிட்டாரா எனக் கேட்டால் வெண்முரசு இல்லை என்றே சொல்கிறது. ஆம், அவர் உறுதியாக இருந்ததால் தான் ராதை விருஷாலியை அவன் மனைவியாக்குகிறாள். ஆனால் அதற்கு காரணம் உண்மையிலேயே அதிரதர் தானா? இல்லை. அதிரதர் எப்போதுமே கர்ணனை தன் மைந்தனாக மட்டுமே எண்ணுபவர். எனவே இயல்பாகவே மைந்தன் தன் நீட்சியாக இருக்க வேண்டுமென விரும்பியவர். கர்ணனின் இளம்பருவத்தில் இருந்தே அவர் அவன் சிறந்த குதிரை சூதனாக வரத் தேவையானவற்றை வலியுறுத்துபவராகவே வருகிறார். ஆனால் அத்தகைய சமயங்களில் எல்லாம் அவனை அவன் விரும்பிய திசையில் செல்ல உதவுவது ராதை. அவளால் அவரை எளிதாக கடந்து செல்ல இயலும். எனவே தான் விருஷாலி விஷயத்திலும் அவன் அவள் உதவியை நாடுகிறான். ஆனால் இம்முறை ராதை வேறு முடிவை எடுக்கிறாள். அதற்கு காரணமாக கர்ணன் மீதான ஆள்கையில் தன் இடத்தை உறுதிப் படுத்திக் கொள்வது என்பது போன்ற சமையலறை அதிகாரப் போட்டியாகக் கூட இருந்திருக்கலாம்.அதை அதிரதன் மீது சுமத்தி தன்னை மறைத்துக் கொள்கிறாள் அவள். எனவே தான் கர்ணன் உள்ளூர விலகுகிறான். அதை முதன்முதலில் அறிபவளும் ராதை தான். எனவே தான் அவள் கசப்பு நிறைந்தவளாக வாழ்ந்து மடிகிறாள்.

அப்படியெனில் அதிரதன் கர்ணன் உறவு? எல்லா தந்தை மைந்தர் உறவு போலவே மைந்தன் தன்னைக் கடந்து விட்டதை, அவன் வாழ்வைப் பற்றி இனி தான் அச்சம் கொள்ளத் தேவையில்லை அல்லது தன்னால் செய்யக் கூடுவது ஒன்றுமில்லை என்பதை உணர்ந்து விடுதலை கொள்கிறார். அவர் அளவு கர்ணனைப் புரிந்து கொண்டவர் இன்னும் ஒருவரே. அதை அவர் ராதையுடனான கர்ணனின் இறுதிச் சந்திப்பில் அவர் பேசுவதைக் கொண்டு அறியலாம். ஆம், அதிரதர் அவனைக் கைவிடவில்லை. அவனை விலக்கவில்லை.

அதன் பிறகே அவன் போருக்கெழுகிறான், நிறைவுடன். அவனளவில் ஒரு பெருங்கடன் முடிந்துவிட்டது. அவனைக் கைவிடாத மற்றொருவர் சிவதர். துரியனுடனான அவன் உறவின் தளம் வேறு. வெண்முரசில் எந்த தந்தையுமே மைந்தனைக் கைவிட்டதில்லை, துணைக் கதைகளில் வரும் ஓரிருவரைத் தவிர.

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்