அன்புள்ள ஜெ
என் ஊரில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி உண்டு.
மிகப்பெரிய துரியோதனன் சிலையைச்செய்து வைத்து வணங்கி கடைசியில் தொடையை உடைத்து கொல்வார்கள்.
அதன்பின்னரும் பூசை நிகழும். கொடியவனைக் கொல்வதுபோல அது இருக்காது. அது ஒருவகை வீரவழிபாடு
போலவே இருக்கும். துரியோதனனின் வடிவமும் விழுந்துகிடக்கும் வீரமுனியப்ப சாமிபோலவே இருக்கும்.
இது ஏன் இப்படி நடக்கிறது என்று நான் சிந்தனை செய்தது உண்டு. இந்த மக்களுக்கு ஏன் துரியோதனன்
ஹீரோ ஆனார்?
இப்போது புரிந்துகொண்டேன். வெண்முரசில் வரும் துரியோதனன்தான்
அவர்களின் மனசிலே இருக்கிறான். கதாகாலட்சேபங்களிலும் ஏராளமான டிவி தொடர்களிலும் வரும்
துரியோதனன் அல்ல. இந்த துரியோதனன் ஒரு மிகச்சிறந்த வீரன். வீரன் வீழ்ந்துபட்டால் வழிபடுவது
நம்மவர் வழக்கம். என் ஊரில் துரியோதனனுக்கு குடம்குடமாக கள்ளும் இறைச்சியும் படையல்கொடுப்பார்கள்.
துரியோதனனை காவல்தெய்வம் என்றும் வணங்குவார்கள். துரியோதனன் வீழ்த்தப்பட்ட மாவீரன்
என்றுதான் நம்மவர் நினைக்கிறார்கள்
எம்.மாதேஸ்வரன்