அன்புள்ள ஜெ,
துரியோதனன் பாண்டவர்களின் மைந்தர்கள் கொலைசெய்யப்பட்டதை
ஏற்றுக்கொள்ளவில்லை என்று மகாபாரதத்தில் இல்லை. கிருபரும் கிருதவர்மனும் அஸ்வத்தாமனும்
சாகாமல் சுனைக்கரையிலேயே கிடந்த துரியோதனனை வந்து பார்க்கிறார்கள். அவனிடம் பாண்டவர்களைப்
பழிவாங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள். அதைக்கேட்டு அவன் மகிழ்ச்சி அடைந்து அதன்பின் உயிர்விட்டான்
என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. வெண்முரசு இன்னொரு துரியோதனனைக் கட்டமைத்துக் காட்டுகிறது.
ஆனால் இந்தத்துரியோதனனை ஆரம்பம் முதலே அது உருவாக்கி
வந்திருக்கிறது. அவனுடைய ஒரே தீமையாக நிலம் மீதான விழைவு மட்டுமே காட்டப்படுகிறது.
நல்ல ஆட்சியாளனாகவும் சிறந்த தந்தையாகவுமே காட்டப்படுகிறான். அவனிடமிருக்கும் தீங்கு
முழுக்க அவனிடம் கலி குடியேறுவதனால் உருவாவது என்றே வெண்முரசு காட்டுகிறது. அதாவது
அவன் கலியின் கருவிதான். ஆனால் அந்தக்கலிகூட கடைசியில் அக்கொலையை ஏற்றுக்கொள்ளவில்லை
என்று வெண்முரசு காட்டுகிறது
சுவாமி