Monday, August 31, 2015

நதி

நதி என்பது எண்ணனம், எண்ணம் என்பது வாழ்க்கை, வாக்கை என்பது நதி,  ஒரு வட்டம் உருவாகிறது.  இந்த வட்டத்தின்  தொடக்கமே மையமாகின்றது. அது மையம் என்பதை அறியாமல், அதை தொடக்கம் என்றுதான் ஒவ்வொரு அர்ஜுனனும் வாழ்கின்றார்கள். 

அர்ஜுனர்கள் அந்த மையத்தை நதியின் எதிர்திசையில் பயணித்து அறிகின்றார்கள். கண்ணன் சொல்வதுபோல உலகம் கண்ணுக்கு வெளியில் பாதியும் உள்ளே பாதியும் உள்ளது. விழியில் இருந்து தொடங்கும் உலகம், விழிக்கு வெளியும், விழிக்கு உள்ளேயும் உள்ளது என்பதை தியானத்தின் வழியாகத்தான் கண்டுக்கொள்ளமுடியும். நதியின் எதிர் திசையில் படகை ஓட்டுவதுபோல எண்ணத்தின் எதிர் திசையில் இயங்குவது தியானம்.


அர்ஜுனன் படகு நதியின் எதிர் திசையில் இயக்கி சென்று மண், நீர், தீ, ஆகாயம், காற்று என்னும் ஐந்து கட்டங்களைத்தாண்டி களிந்த விழியை  அடைகிறான். கதியானம் மண்ஸ்தலமாகிய மூலதாரம், நீர் ஸ்தானமாகிய சுவாதிஸ்டானம், காற்று ஸ்தலமாகிய மணிபூரகம், ஆகாய ஸ்தலமகிய அனாகதம், காற்றுஸ்தலமாகிய விசுத்தி ஆகிய ஐந்து ஸ்தலங்களைக் கடந்து ஆச்ஞா சக்கரத்தில் வந்து நிற்கும்போது நெற்றிக்கண்ணை திறக்கின்றது. நெற்றிக்கண்ணில் வந்து நிற்கிறான் இந்திரநீலவிழியோடு கண்ணன். 

ஞானக்கண் பெரும்வரை உலகம் தட்டையாக தெரிகிறது. ஞானவிழி பெரும்போது உலகம் உருண்டையாக ஆகிறது. உருண்டையின் எந்த தொடக்கமும் அதன் மையமே. அந்த மையத்தில் நின்று உலகம் சுழல்கிறது. 

ஞானி தான் அசையாமல் நின்று உலகம் சுழல்வதைப்பார்க்கிறான், அஞ்ஞானி தான் சுழன்று உலகம் அசையாமையைப்பார்க்கிறான். 

கண்ணன் எதிலும் அசையாமல் இருப்பதும், அவனை சூழ்ந்து இருப்பவர்கள் அனைவரும் அசைந்துக்கொண்டு இருப்பதும், உலகம் உருண்டையாக தெரிவதற்கும், தட்டையாக தெரிவதற்கும் உள்ள வித்தியாசம்தான். 

ஜெ மையத்தின் வழியாக உருவாக்கும் வட்டம் மாபெரும் நிஜயத்தின் சித்திரம்

நாகம்மாள்

பெரியது கேட்கின்

...

ஒரு நல்லத் திருத்தொண்டரை கண்டு அடைய எத்தனை பெரிய வாழ்க்கையை வாழவேண்டி உள்ளது. எத்தனை எத்தை களங்கள், காலங்கள், கதைகள் வழியாக பயணம் செய்துபோகின்றது அந்த வாழ்க்கை.  அதனால் தான் அன்னை ஓளவையார் பெரியது எது என்று கேட்ட எரிதவழ் வேலோன் இடம் ”தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிது” என்கிறார். பெரிதினும், பெரிதாகிய, பெரியோனாகிய இறைவன் தொண்டர் உள்ளத்தில் ஒடுங்குவதால், தொண்டர் தன் உள்ளத்தில் ஒடுக்குவதால் தொண்டர் பெரியவர்.  இறைவன் தொண்டர் உள்ளத்தில் ஏன் ஒடுங்குகின்றார்?, எப்படி ஒடுங்குகின்றார்? என்பதை மேலும் பெருக்கிக்காட்டுகின்றார் சேக்கிழார் பெருமான். 

கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்
ஓடுஞ் செம்பொனும் ஓக்கவே நோக்குவார்
கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்-பெரியபுராணம்.

காளந்தி கண்ணை கும்பிடுவதற்காகவே பிறந்தவள். தன்னை பக்தை என்றோ, கண்ணனின் மனைவி என்றோ, துவாரகையின் அரசி என்றோ என்றும் எண்ணாதவள். பொன்வளையலோடு தனது குலவளையலாகிய இருப்பும் வளையலையும் சேர்ந்தே அணிந்திருக்கும் இடத்தில் அவள் நோக்கு ஒன்றென இருக்கிறாள். சத்வகுணம் நிறம்பிய ருக்மணிகூட காளந்தியை கேளிப்பேசுகின்றாள் என்றால், மற்றவர்கள் அவளைப்பற்றி பேசும் வசை, கேளி எத்தகையதாக இருக்கும்? இருக்கிறது.  இன்றைய நாள் காளந்திக்கு உரியது என்று கண்ணனே அவளைப்புகழ்கின்றான். அந்த கணத்திலும் இருந்தும் இல்லாததுபோலவே இருக்கிறாள். தனது தவத்திற்கு மகிழ்ந்து கண்ணன் வந்தபோது கும்பிட்டதுபோலவே, சியமந்தகமணியின் ஒளியறிய எழும்போதும், நான் என்று தறுக்காமல் உனது கட்டளை என்பதுபோலவே கண்ணனைப்பணிந்து எழுகின்றாள். அவளுக்கு அரசாட்சி வேண்டாம், தனது இறைவன்போல் மாயம் செய்து ஒப்பனையில் வந்த தெய்வம் வேண்டாம், யமுனையில் இருக்கும் முடிவிலி மீனில் ஒரு ஒரு மீனை மட்டுமு் கண்டது போதும். நீலன் கையால் தரும் ஒரு நீலமலருக்காக அவள் பூத்திருக்கிறாள்.
இரண்டு என்று அவள் வாழ்க்கையில் எதுவும் இல்லை. சத்துவத்தின் சத்துவம் என்ற குணத்தையும் தாண்டி நிற்கின்றாள். யோகியரில் ஒரு யோகி ஆகின்றாள்.

திருஷ்டாத்யுமனன் முதன் முதலில் காளந்தியைப்பார்க்கும்போது இல்லாதவள்போல் அங்கு இருந்தாள் என்று எண்ணுவது எத்தனை பொருத்தம். திருத்தொண்டர்கள் இல்லாததுபோலவே இருக்கிறார்கள். கடவுளில் அவர்கள் மறைந்து இருக்கிறார்கள். கடவுளை சுமந்துக்கொண்டு இருக்கிறார்கள். பிறவிப்பெருங்கடலில் இருந்து கடவுள் அவர்களை கரை சேர்க்கிறான். பிறவிப்பெருங்கடலில் அவர்கள் கடவுளை உள்ளம் என்னும் தோணியில் வைத்து தள்ளித்தள்ளி கடவுளை கரை சேர்க்கிறார்கள் அதன் மூலம் கரைசேர்கிறார்கள். அவர்கள் கடவுளால் பெருமை அடைகிறார்கள், அவர்கள் பின்பு கடவுளை பெருமை அடைய செய்துக்கொண்டே இருக்கிறார்கள். காளந்தியின் பெருமையா இங்கு வெளிப்படுகின்றது? கண்ணனின் பெருமை அல்லாவா காளந்தியால் வெளிப்படுகின்றது. ஏழு மனைவியை கண்ணன் அடைந்தது பெருமை இல்லை, எட்டாவது என்று நிற்கும் காளந்தியை அடைந்ததன் மூலம் அவன் பெருமை அடைகிறான். இறைவனுக்கா பக்தன் ஏங்குகிறான். பக்தனுக்காக இறைவன் ஏங்குகின்றான்.  

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர். “தாமசகுணம், ரஜோகுணம், சத்வகுணம் மூன்றில், சத்வகுணம் சிறந்தது.. சத்வகுணத்திலும் சத்வதாமசகுணம், சத்வரஜோகுணம், சத்வசத்வகுணம் உண்டு,   பரமஹம்சர்கள் இந்த மூன்றுக்குணங்களையும் கடந்தவர்கள்” என்பார்.

காம,குரோத, மோகத்திற்கு அப்பார்ப்பட்ட தூய சியமந்தமணியை கைக்கொள்வர்களின் முக்குணம் அந்த மணியில் ஏறி, .அந்த குணத்தின் இருப்பிடமாக அந்த அணி ஒளிர்கிறது. ஒவ்வொரு குணமும், மேலும் மூன்று குணங்களாக கிளைக்கிறது. ஏழு அரசியரும் அந்த குணங்களுக்குள் சிக்கித்தவிக்க காளந்தி அந்த குணங்களை கடந்து பரமஹம்ச நிலையை அடைந்து இருக்கிறாள். குணம் அற்றவளின் குணத்தை அடையும் மணி’யும் குணமற்றதாக ஆகின்றது. காளந்திப்போன்ற பரமஹம்சர்கள் நதியின் மையத்தில் அமர்ந்துகொண்டுவிடுகிறார்கள். “இயந்திரக்கல்லின் அச்சியின் அருகில் இருக்கும் உளுத்தம்பருப்பு அறைபடுவில்லை” என்று பகவான்ஸ்ரீராமகிருஷ்ணர் சொல்வதுபோல, காளந்தி இளையயாதவனிடம் தன்னை ஒளித்துக்கொள்வதுபோல அமர்ந்து கண்ணனில் கலந்து தப்பிவிடுகின்றாள். ஆனால் மற்ற எழுவரும் அவர்கள் அவர்கள் குணத்திற்கு ஏற்ப பீடத்தில் அமர்ந்து தங்கள் குணத்தால் கண்ணனிடம் இருந்து விளகி அறைபடுகின்றார்கள்.

காளந்தியும் கண்ணனும் இங்கு வேறா? பரமஹம்சர்களும் பகவானும் வேறா?  காளந்தி அடையும் மையத்தை அர்ஜுனனும் கண்ணனின் கூட்டால் அடைகின்றான் ஆனால் அவனால் அங்கு நிலைக்கமுடியவில்லை. மின்னலில் தெரிந்த மலை, மின்னல்போனதும் இருட்டென்றே ஆகிவிட்டதுபோல் அர்ஜுனன் ஒரு நொடியில் அந்த மையத்தில் இருந்து நதியின் ஒழுக்கில் விழுந்து நீந்தவேண்டியவனாக உள்ளான்.. ஞானசூரியனாகவும் இறைவனே இருக்கிறான், மாயஇருளாகவும் இறைவனே இருக்கிறான். அர்ஜுனன் வாழ்க்கை நதியில் இன்னும் நீந்தவேண்டும் என்பது அவனது திருவுளம்போலும். ஊஞ்சலில் ஆடுபவன் கால்களால்  பூமியைத்தொடமல் காற்றுபோல் அங்கும் இங்கும் போகின்றான். ஊஞ்சலைவிட்டு இறங்கியவன் ஒரு அடி நகரவேண்டும் என்றாலும் காலைத்தான் பயன்படுத்த வேண்டி உள்ளது. கண்ணன் அருகில் இருக்கும்போது ஊஞ்சலில் இருப்பதுபோல் இருக்கிறது அர்ஜுனனுக்கு, கண்ணன் அகன்றால் பூமியில் நடந்துக்கொண்டு இருக்கிறான். கண்ணனுக்கு நண்பனாக, மனைவியாக, தொழும்பனாக, உறவினாக எல்லாம் இருக்கலாம் அதனால் அவர்கள் பெரும் பயன் பெரிதாக இருக்கலாம் ஆனால் காளந்திப்போல் மகாயோகி ஆவது என்பது ஒருவழிப்பாதையில் சென்றாலும் மையத்தில் அசையாமல் நிற்பதால்  அடையக்கூடியது. அந்த மையம் எல்லாப்பாதையின் கூட்டாக அமைந்துவிடுகின்றது. காளந்தியை இப்போது பார்க்கும்போது அவளிடம், ஞானம் பக்தி, கர்மம் என்று மூன்று நிலைகளும் இருப்பது தெரிகின்றது. அன்று அவள் தொடங்கியது கர்மமார்க்கத்தை.  இதற்கு முயற்சி மட்டும் போதுமா? இறைவன் கருணையும் வேண்டும்.

இந்திரநீலம் என்னும் பெரும் நாவல் காளந்தி என்னும் ஒரு பெரும் மாகயோகியாகிய பந்தை தனது ஆடுகளத்தில் வெற்றி இலக்கில் சேர்க்க எத்தனை எத்தனை பாதையில் தன் ஓட்டத்தை நடத்துகின்றது. நன்றி ஜெ.

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.

பிரபஞ்சத்தின் மையம் எது?


   கணித வகுப்பில் என் மாணவர்களிடம்  இந்தக் கேள்வியை எழுப்புவேன். அவர்கள் பல விடைகளை கூறுவார்கள். ஆனால் அவை சரியல்ல என்பது எளிதில் நிறுவப்பட்டுவிடும். அடுத்து ஒரு எளிய கேள்வி வட்டத்தின் மையம் எது என்று? அதற்கு அனைவருக்கும் விடை தெரியும். அடுத்த கேள்வி ஒரு வட்டத்திற்கு எத்தனை மையங்கள் என. இதென்ன கேள்வி ஒரு மையம்தான்  எனக் கூறுவர். வட்ட ஆர நீளத்தை இருமடங்காக்கினால் எத்தனை மையங்கள். அப்போதும் ஒன்று தான் என பதில் வரும் பலகோடி மடங்கு அதிக ஆரமுடைய வட்டத்திற்கும் ஒரு மையம்தானா என்று கேட்பேன், விடை ஒன்று  என வரும். சரி, இப்போது சொல்லுங்கள் முடிவிலி ஆரத்தை உடைய வட்டத்திற்கு எத்தனை மையங்கன் என கேட்பேன். சில மாணவர்கள்  அப்போதும் ஒன்றுதான் என்பார்கள். அப்படியென்றால் அது எங்கிருக்கும்? மாணவர்கள் சிந்திக்க ஆரம்பிப்பார்கள்.  முடிவிலி ஆரத்தைகொண்ட வட்டத்தின் மையம் எது? மையம் என்பதே  இல்லையா?  உண்மையில் அவ்வட்டத்தின் அனைத்து புள்ளிகளும் மையங்கள் அல்லவா. 
      இதைப்போல ஒரு கோளத்தை எடுத்துக்கொள்வோம். எவ்வளவு பெரிய கோளமாக இருந்தாலும் மையம் ஒன்றுதான். அதுவே, அது முடிவிலி ஆரம் கொண்ட கோளமென்றால், உள்ளமைந்த அனைத்து புள்ளிகளும் அதன் மையங்கள் ஆகின்றன.   இப்பிரபஞ்சமும்  முடிவிலி ஆரம்கொண்ட ஒரு பெருங்கோளம். ஆகவே பிரபஞ்சத்தின் ஒவ்வொரு புள்ளியும் அதன் மையப்புள்ளிதான்  என்பேன். ஆகவே பிரபஞ்சத்தின் மையம், நான் எனச் சொல்லுவேன். நீங்களும் அவ்வாறு சொல்லிக்கொள்ளமுடியும் என்பேன். ஆக இப்பிரபஞ்சத்தில் உன்னைப்பொறுத்தவரை மிக முக்கியமான நபர், அப்பிரபஞ்சத்தின் மையமாக விளங்கும் நீ எனக் கூறுவேன்.அப்போது வகுப்பறை முழுதும்  ஒரு சிலிர்ப்பு பரவும். இதை ஒரு சடங்குபோல் ஒவ்வொரு ஆண்டும்  புது மாணவர்களுக்கான வகுப்பில் நடத்திவிடுவேன்.
   நதியின் தொடக்கம் அதன் மையம் எனக்கூறும் கூற்று அபாரமானது. அதனை அர்ச்சுனனுக்கு காட்ட கிருஷ்ணன் அழைத்துச் செல்லும் பயணம். ஒரு பெரும் யோக சாதனையை உருவகித்து காட்டுகிறது. வானிலும் மண்ணிலும் நிகழும் ஒரு சுழல் அல்லவா ஒரு நதி. அந்த சுழலை அந் நதி மண்ணில் இறங்கும் அதன் தோற்றுவாய்க்கு சென்றபின்னரே அர்ச்சுனனால் அறிய முடிகிறது.
       ஆன்மா என நாம் நம்மை உணர்வது  பிரம்மம் என்ற பேரான்மா மண்ணில் இறங்கி நதியாக நடக்கும் ஒரு சிறு நிகழ்வல்லவா?  அதை நாம் எப்படி அறிவது.  வேதாந்தம்  அதை அதன்  தோற்றுவாய்க்கு சென்று அறியலாம எனக் கூறுகிறது.     இரமணரின் உபதேச உந்தியார் என்ற தொன்னூறுவரிகள்(முப்பது மூன்று வரி பாடல்கள்) கொண்ட நூல்,  ஆன்மாகொள்ளும் இந்தச் சுழலை நமக்கு  கற்பிக்கிறது.    முதலில் நாம் நம் ஆன்மாவின் மையம் நம் மனம் என நினைத்திருக்கிறோம். ஆனால் மனம் என்னவென்று நாம் ஆராயத்தொடங்கினால் மனம் என்ற ஒன்றே இல்லமலாகிவிடும் என்கிறார்
   மனத்தின் உருவை மறாவாது உசாவ
   மனம் என ஒன்றிலை  உந்தீபற
   மார்க்கம் நேரார்க்கும் இது உந்தீபற  (பாடல் 17)

  முதலில், நான் என்னும் நம் அகங்காரம் அதை நம் ஆன்மாவென சொல்லிக்கொண்டிருக்கிறது. உண்மை நிலையறிய அந்த நான் என்ற எண்ணத்தின் தோற்றுவாய்க்கு செல்ல வேண்டும். அப்போது நம்மிலிருந்த அந்த நான் மறைந்துபோய்விடும் என்கிறார். இந்த தோற்றுவாயை அறிவதே ஞான விசாரம் என்றும் சொல்கிறார்,
நானென்று எழுமிடம் ஏதென நாடவும்
நான் தலை சாய்ந்திடும் உந்தீபற
ஞான விசாரமிது உந்தீபற.  (பாடல் 19)

அப்புறம் நாம் நம்மில் உறையும் ஆன்மா எங்கும் நிறைந்திருக்கும் அந்த பேரான்மா என்பதை நாமாக அறிவோம் என்கிறார்.
நான் ஒன்றுதானத்து நான் நான் என்ற ஒன்றது
தானாக தோன்றுமே உந்தீபற
தானது பூன்றமாம் உந்தீபற (பாடல் 20)

இந்த ஆன்ம ரகசியத்தை கிருஷ்ணன் அர்ச்சுனனுக்கு நதியின் தோற்றவாயை காட்டும் நிகழ்வு விளக்குகிறது. வெண்முரசு இந்த ஆன்ம தத்துவத்தை,  அன்னை பற்கள் முளைக்காத  குழந்தைக்கு அன்னத்தை குழைத்து ஊட்டுவதைப்போல,  கண்ணனின் லீலையாக நம்முள் புகட்டுகிறது. 

Sunday, August 30, 2015

ஹெர்மிஸ்

மற்ற மனைவியர் நிறைய பேச, காளிந்தி ஒற்றை சொல்தான் பேசுகிறாள்... யமுனையில் எத்துனை மீன்கள் உள்ளன என கி௫ஷ்னர் கேட்க, அவள் ஒன்று என்கிறாள்... அந்த ஒற்றை சொல்லில் தான் எத்தனை அர்த்தங்கள்... கடலாலழத்தில் வீசப்பட்ட அந்த நிலம் இன்னுமொ௫ ஒ௫ விழியை தேடி கொன்டி௫க்கும்...  
          
                               ஆட்டு குட்டியை தோளில் தூக்கி கொன்டி௫க்கும் யவன சிலை எவரை குறிக்கிறது? ஏசுவையா?..

ரகுராம்



 ரகு,


 அந்த யவன சிலை Hermes எனும் கிரேக்க தெய்வம்.Zeus எனும் கிரேக்கத் தலைமைத் தெய்வத்தின் மகன்களில் ஒருவன்..ஹெர்மியர் என்று தெளிவாக எழுதியிருக்கிறாரே. ஏசுவுக்குப் பல முன்மாதிரிகளுண்டு,Mithra ,Osiris Zoraster என்று. Hermesம்  அவற்றில் ஒன்று..இங்கு அதைக்கொண்டு வந்து சேர்த்ததில் ....ஜெவின் வாசிப்பும் உழைப்பும் . கற்பனைத் திறனும்,அசர அடிக்கிறது.

சுரேஷ் கோவை.

உடலோம்பல்.




குசலன், திருஷ்டத்யுமனன், சாத்யகி மூவரும்  கள்ளுண்டு முடித்தப்பின்பு ஒரு உண்மையை புலப்படுத்துகின்றார்காள். அது உடல்பலம் எத்தனை அத்தியாவசியமானது என்பது விளக்குகிறது. .

மூலாதாரம், சுவாதிஸ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்சா, என்னும் ஆறு சக்கரங்கள் மலர சரியான உடல்பலம் வேண்டும். உலகாதய நலன்களை உண்டாக்கும் முதல் மூன்றுச்சக்கரங்களையும் உண்ணுதல், சுகித்தல், உழைத்தல் என்னும் கடமைகளின் வழியாக தூண்டும் செயல் இல்லாமல் குசலன் அதை தவறவிடுகின்றான். ஆனால் ஆன்மிக நலன் செய்யும் உடலின் மேல்தளச்சக்கரங்கள் மலர்வதன்மூலம் உச்சத்திற்கு சென்று நெற்றிக்கண் திறக்கின்றான். நெற்றிப்பொட்டில் யோகிஸ்வரன் பாத தரிசனம் காண்கின்றான். அங்கிருந்து சகஸ்ராரசக்கரத்திற்கு பயணிக்க முடியாமல் கீழ் இரங்குகின்றான். கீழ் சக்கரங்கள் பலம் இழப்பாதல் புழுபோலவும், மேல் சக்கரங்கள் மலர்வதால் பாம்புபோலவும் ஆகின்றான். புழு பாம்பென்று ஆகும் மாற்றம் என்பது அருமை. போதை ஏறி அங்கேயே விழுகின்றான் குசலன்.  

சாத்யகி கள்ளுண்டு மயங்கும் முதல் கணத்திலே வரும் பரவசத்திலேயே விடுதலை என்பது ஒரு மனமயக்கு. “அ” போட்ட உடனேயே சரித்திரம் படைத்த எண்ணம் அவனுக்கு. போதை ஏறினாலும் உடல் பலத்தால் தல்லாடி தல்லாடி சாத்தியகி பயணிக்கின்றான். குசலனில் இருந்து சாக்தியகி உடல்பலம் கூடி உள்ளது.  சாத்தியகியின் குதிரையையும், சாத்தியகியையும் திருஷ்டத்யுமன்தான் காப்பாற்றி எடுத்துச்செல்கின்றான். சாத்யகியின் உடல்பலத்தைவிடவும், திருஷ்டாத்யுமன் உடல் பலம் அதிகம். உடல்பலம் என்பதுதான் எத்தனை தேவையாக இருக்கு இங்கு.

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோவில் கொண்டானென்று
உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே- திருமந்திரம்.

யுத்தத்திற்கு மட்டுமல்ல ஆன்மிகத்திற்கும் உடல் எத்தனை முக்கியம் என்பது புரிகின்றது. குசலன் உடல்பலத்தோடு இருந்தால் எத்தனை பெரிய முனியாகி இருப்பான். வெறும் களிமகனாக பரிகாசத்திற்கு ஆளகிவிட்டான். பெரும் கவிஞர்கள் வெறும் குடிகாரனாக மாறி, தங்கள் கனத்த தலையை தூக்கமுடியாமல், மண்ணில் புறண்டு நலம் இழக்கும் கொடுமை  நினைவில் எழுவதை தவிர்க்க முடியவில்லை.  

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.

ஆடையை தளர்த்திக்கொள்ளுதல்:


     ஒரு விழாவுக்கு போகும்போது ஆடைகளை தேர்ந்தெடுப்பதற்கே அதிக நேரம் செலவழிக்கிறோம். பின்னர் அதை நேர்த்தியாக அணிந்துகொள்வதில் அதிக கவனம்கொள்கிறோம். போகும்வழியிலும், அவ்விழாவில் கலந்துகொள்ளும்போதும் ஆடையின் நேர்த்தி கலையாமல் இருக்கிறதா என சரிபார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் விழா முடிந்து வீடு வந்தவுடன் முதல் காரியமாக அந்த ஆடைகளை களைந்து தளர்வான வீட்டு ஆடைகளை அணிந்துகொள்கிறோம்.  வெளியில் இருப்பவர்கள் நம் ஆடைகளின் ஊடாகத்தான் நம்மை பார்க்கிறார்கள். அந்த ஆடையின்மூலம் நம்மை உலகிற்கு வெளிக்காட்டிக்கொள்கிறோம். வெளியில் செல்லும்போது அணியும் ஆடைகள் உடலின் வடிவத்திற்கு மிகப்பொருத்தமாக தேவையான இறுக்கத்துடன் இருக்கும். கடும் வெய்யிலிலும்,  முழுதும் மூடும் காலணி அணிந்துகொள்கிறோம்.  வறண்ட காற்று வீசும்போது கழுத்துசுருக்கு துண்டை இறுக்கமாக அணிந்துகொள்கிறோம்.  அந்த ஆடைகள் மற்றவர்களுக்காக அணிவது. ஆனால் நமக்கே நமக்காக நாம் வீட்டில் அணியும் ஆடைகள் இறுக்கமின்றி தளர்வானது.

   வெளிமனிதர்களிடம் பழகும்போது, நம்மை அவர்கள் மதிக்கும் வண்ணம்,    நம் பேச்சு செயல் போன்ற நடவடிக்கைகள்    பொருத்தமானதாக சரியானதாக இருப்பதில் நாம் மிகக் கவனமாக இருக்கிறோம். நாம் பேசும் வார்த்தைகளில்,  நாம் நடப்பது, அமர்வது, பேசுவது, சிரிப்பது, போன்ற தோரணைகளில்,  உண்பது குடிப்பது போன்ற செயல்களில்  மிக நேர்த்தியாக இருக்கும்படி நடந்துகொள்கிறோம். இவ்வாறு நடப்பது என்னதான் நல்ல விளைவுகளை கொடுத்தாலும்  நமக்கு மன இறுக்கத்தை கூடவே தரச் செய்கின்றன. வீட்டிற்கு வந்ததும் ஆடைகளை தளர்த்திக்கொள்வதைப்போல நம் மனதை அவ்வளவு எளிதாக தளர்த்திக்கொள்ள பலரால் முடிவதில்லை.  பெரும்பாலும் கலைகளை அனுபவிப்பதன்மூலம் நாம் நம் மனதை தளர்வாக்கிக்கொள்ளலாம். அது ஓரளவிற்கு பலனளிக்கும்.

  மது அருந்துவதில் பல தீமைகள் இருக்கின்றன.  இருந்தாலும் ஒருவன் மது அருந்துவது அவன் மன இறுக்கத்தை வெகுவாக தளர்த்துகிறது. அப்போது மனம் தன் இறுக்கமெல்லாம் அவிழ்ந்து  இதமாகிறது. மது அருந்தியிருப்பவனை கவனித்தோமானால் அவன் தன் பேச்சு தோரணைகளில் இருந்த நேர்த்தி மறைந்துவிடுவதை பார்க்கலாம். அவன் மனம் கட்டுகளில் இருந்து விடுபட்டு பறக்க ஆரம்பிக்கிறது. அவன் ஒரு விடுதலையுணர்வை அனுபவிக்கிறான். அவன் அகத்தை  மூடியிருந்த ஆடைகள் தளர்ந்து நெகிழ்ந்து அவன் அகத்தின் மறைக்கப்பட்டிருந்த பகுதிகள் வெளியில் தென்பட ஆரம்பிக்கின்றன. தோற்றத்தில் சிறிதாக தெரிந்த, ஒருவன் மேல் வைத்திருந்த நட்பு அல்லது விரோதம், ஒரு பெண்ணின் மேல் கொண்டிருந்த காதல் அல்லது காமம், ஒரு நபரின் மேல் கொண்டிருந்த கோபம் அல்லது  இரக்கம், போன்றவை  அந்த நேரத்தில் வெளிப்பட்டு பெரிதாக தெரிகின்றன.   தன் குடிபோதை தெளிய தெளிய அவன் மீண்டும் தன் அக அடைகளை எடுத்து அணிந்து கொள்கிறான்.


  கிருஷ்ணனிடம் சாத்யகி  என்னதான்  அருகாமையில் இருந்தாலும் அவன் மன்னனாக  இருப்பதால் இவன் சேவகன் என இருக்கவேண்டியுள்ளது. அதற்கான தோரணைகளான மரியாதை பயம் பணிவு போன்றவை வெளிப்படும்வண்ணம் அவன் நடவடிக்கைகள் அமைவேண்டியுள்ளது. கிருஷ்ணனுக்கு இது தேவையில்லயென்றாலும்  மற்றவர்களுக்காக இது சாத்யகி அன்றாடம் அணியவேண்டிய ஆடை. ஆனால் அவன் கிருஷ்ணனை தூரத்தில் வைத்து வணங்கும் பக்தன் அல்ல. அவனுடன் கலந்து ஒன்றாகிவிடத் துடிக்கும் ஆன்மாவை கொண்டிருப்பவன். அவனை கிருஷ்ணனிடமிருந்து முதலில் அவனுடைய உடல் தள்ளி வைக்கிறது. (ஒரு வேளை சாத்யகி பெண்ணாக இருந்திருந்தால் அந்தக் காமுகனிடம் இன்னும் சற்று நெருக்கத்தில்  இருக்கலாம்.)  கிருஷ்ணன் மன்னன் என இருப்பது அவனை இன்னும் தூரத்தில் தள்ளி வைக்கிறது. கிருஷ்ண்னைபோன்ற ஒருவனிடமிருந்து தள்ளி நிற்பது சாத்யகிக்கு துன்பத்தை தருகிறது. அவன் மது அருந்திய நிலையில் அவன் அணிந்திருந்த சேவகன் என்ற ஆடை அவிழ்ந்து விழ கண்ணனுக்கு மிகவும்  நெருங்கிய தோழனாக இருக்க வேண்டும் என்ற அவன் வேட்கை வெளிப்படுகிறது. 

தன் பெற்றோரின் கவனத்தை கவர ஒரு குழந்தை சேட்டைகள் செய்வதைப்போலதான் சாத்யகி சியமந்தகமணியை கவர்ந்து சென்றிருப்பான் என நினைக்கிறேன்.      தொலைந்து போன ஆட்டுக்குட்டியை அல்லவா மேய்ப்பன் தேடிப் பிடித்து தோளில் சுமக்கிறான். ஒருவேளை அந்த ஆடு அதற்காகக்கூட  தொலைந்து போயிருக்கலாம்.

தண்டபாணி துரைவேல்