கணித வகுப்பில் என் மாணவர்களிடம் இந்தக் கேள்வியை எழுப்புவேன். அவர்கள் பல விடைகளை கூறுவார்கள். ஆனால் அவை சரியல்ல என்பது எளிதில் நிறுவப்பட்டுவிடும். அடுத்து ஒரு எளிய கேள்வி வட்டத்தின் மையம் எது என்று? அதற்கு அனைவருக்கும் விடை தெரியும். அடுத்த கேள்வி ஒரு வட்டத்திற்கு எத்தனை மையங்கள் என. இதென்ன கேள்வி ஒரு மையம்தான் எனக் கூறுவர். வட்ட ஆர நீளத்தை இருமடங்காக்கினால் எத்தனை மையங்கள். அப்போதும் ஒன்று தான் என பதில் வரும் பலகோடி மடங்கு அதிக ஆரமுடைய வட்டத்திற்கும் ஒரு மையம்தானா என்று கேட்பேன், விடை ஒன்று என வரும். சரி, இப்போது சொல்லுங்கள் முடிவிலி ஆரத்தை உடைய வட்டத்திற்கு எத்தனை மையங்கன் என கேட்பேன். சில மாணவர்கள் அப்போதும் ஒன்றுதான் என்பார்கள். அப்படியென்றால் அது எங்கிருக்கும்? மாணவர்கள் சிந்திக்க ஆரம்பிப்பார்கள். முடிவிலி ஆரத்தைகொண்ட வட்டத்தின் மையம் எது? மையம் என்பதே இல்லையா? உண்மையில் அவ்வட்டத்தின் அனைத்து புள்ளிகளும் மையங்கள் அல்லவா.
இதைப்போல ஒரு கோளத்தை எடுத்துக்கொள்வோம். எவ்வளவு பெரிய கோளமாக இருந்தாலும் மையம் ஒன்றுதான். அதுவே, அது முடிவிலி ஆரம் கொண்ட கோளமென்றால், உள்ளமைந்த அனைத்து புள்ளிகளும் அதன் மையங்கள் ஆகின்றன. இப்பிரபஞ்சமும் முடிவிலி ஆரம்கொண்ட ஒரு பெருங்கோளம். ஆகவே பிரபஞ்சத்தின் ஒவ்வொரு புள்ளியும் அதன் மையப்புள்ளிதான் என்பேன். ஆகவே பிரபஞ்சத்தின் மையம், நான் எனச் சொல்லுவேன். நீங்களும் அவ்வாறு சொல்லிக்கொள்ளமுடியும் என்பேன். ஆக இப்பிரபஞ்சத்தில் உன்னைப்பொறுத்தவரை மிக முக்கியமான நபர், அப்பிரபஞ்சத்தின் மையமாக விளங்கும் நீ எனக் கூறுவேன்.அப்போது வகுப்பறை முழுதும் ஒரு சிலிர்ப்பு பரவும். இதை ஒரு சடங்குபோல் ஒவ்வொரு ஆண்டும் புது மாணவர்களுக்கான வகுப்பில் நடத்திவிடுவேன்.
நதியின் தொடக்கம் அதன் மையம் எனக்கூறும் கூற்று அபாரமானது. அதனை அர்ச்சுனனுக்கு காட்ட கிருஷ்ணன் அழைத்துச் செல்லும் பயணம். ஒரு பெரும் யோக சாதனையை உருவகித்து காட்டுகிறது. வானிலும் மண்ணிலும் நிகழும் ஒரு சுழல் அல்லவா ஒரு நதி. அந்த சுழலை அந் நதி மண்ணில் இறங்கும் அதன் தோற்றுவாய்க்கு சென்றபின்னரே அர்ச்சுனனால் அறிய முடிகிறது.
ஆன்மா என நாம் நம்மை உணர்வது பிரம்மம் என்ற பேரான்மா மண்ணில் இறங்கி நதியாக நடக்கும் ஒரு சிறு நிகழ்வல்லவா? அதை நாம் எப்படி அறிவது. வேதாந்தம் அதை அதன் தோற்றுவாய்க்கு சென்று அறியலாம எனக் கூறுகிறது. இரமணரின் உபதேச உந்தியார் என்ற தொன்னூறுவரிகள்(முப்பது மூன்று வரி பாடல்கள்) கொண்ட நூல், ஆன்மாகொள்ளும் இந்தச் சுழலை நமக்கு கற்பிக்கிறது. முதலில் நாம் நம் ஆன்மாவின் மையம் நம் மனம் என நினைத்திருக்கிறோம். ஆனால் மனம் என்னவென்று நாம் ஆராயத்தொடங்கினால் மனம் என்ற ஒன்றே இல்லமலாகிவிடும் என்கிறார்
மனத்தின் உருவை மறாவாது உசாவ
மனம் என ஒன்றிலை உந்தீபற
மார்க்கம் நேரார்க்கும் இது உந்தீபற (பாடல் 17)
முதலில், நான் என்னும் நம் அகங்காரம் அதை நம் ஆன்மாவென சொல்லிக்கொண்டிருக்கிறது. உண்மை நிலையறிய அந்த நான் என்ற எண்ணத்தின் தோற்றுவாய்க்கு செல்ல வேண்டும். அப்போது நம்மிலிருந்த அந்த நான் மறைந்துபோய்விடும் என்கிறார். இந்த தோற்றுவாயை அறிவதே ஞான விசாரம் என்றும் சொல்கிறார்,
நானென்று எழுமிடம் ஏதென நாடவும்
நான் தலை சாய்ந்திடும் உந்தீபற
ஞான விசாரமிது உந்தீபற. (பாடல் 19)
அப்புறம் நாம் நம்மில் உறையும் ஆன்மா எங்கும் நிறைந்திருக்கும் அந்த பேரான்மா என்பதை நாமாக அறிவோம் என்கிறார்.
நான் ஒன்றுதானத்து நான் நான் என்ற ஒன்றது
தானாக தோன்றுமே உந்தீபற
தானது பூன்றமாம் உந்தீபற (பாடல் 20)
இந்த ஆன்ம ரகசியத்தை கிருஷ்ணன் அர்ச்சுனனுக்கு நதியின் தோற்றவாயை காட்டும் நிகழ்வு விளக்குகிறது. வெண்முரசு இந்த ஆன்ம தத்துவத்தை, அன்னை பற்கள் முளைக்காத குழந்தைக்கு அன்னத்தை குழைத்து ஊட்டுவதைப்போல, கண்ணனின் லீலையாக நம்முள் புகட்டுகிறது.