Wednesday, September 2, 2015

கண்ணன் முகம்


வட்டம்

Dear Jeyamohan

Another great episode which required intense reading. Every sentence is loaded with meaning and poetic beautiful Tamil words. It was a delight to read about how Neelamanivannan got the eight consorts. The Devi's coming from different backgrounds come together to form the circle of love.
The coveted Syamanthaka completes the full circle of dazzling in different colors to a pebble and goes down to the earth again. The conversation between Arjuna and Mayakannan when tracing the origin of River Yamuna is the high light of the whole episode.  One cannot forget the ants conversation and your attention to detail and the imagination -like comparing their fast walk to that of a "puravi"!

Finally, Dhrishtadhyuma understands the meaning of what constitutes a Yogi and makes an important decision to marry Shubrai. His life has come to a full circle by spending the time with  Mughilvannan. The valiant warrior emerges again conquering the insecurities. Perhaps his decision to marry Shubrai must have come from seeing Karmeghavannan treating Kalindhi or Jambavathi equally with other Princesses. 

Another marathon effort by you and another jewel in the crown or a pebble in the hands of a great Yogi. 


As always, felt that I have to read again when it comes as a book. Thank you.

Warm regards

Sobana Iyengar

 
 
 
 

இயற்கையின் ஆராதனை



திருவண்ணாமலைமேல் இருந்த ரமணரைப்பார்க்க சென்றவரிடம் ஒரு பெரியவர் ”எங்கே போகிறாய்?” என்றுக்கேட்க “ரமணரைப்பார்க்க” என்று வந்தவர் பதில் சொல்கின்றார். அதைக்கேட்டதும் அந்த பெரியவர் ”ஐயோ! அவனையாப்பார்க்கப்போகிறாய், அவன் கொலைகாரனாச்சே!” என்றாராம்.

மண்ணில் மனிதர்கள் எல்லாம் நான் என்னும் பளுவின் கீழ் இருக்கும் இலைசருகுகள்தான். அந்த நான் பளுவை மகான்கள் அகற்றிவிடுகிறார்கள் அல்லது கொன்றுவிடுகின்றார்கள். நான் போனபின்பு மனிதன் பாரம் அகற்றப்பட்ட சருகு பறப்பதுபோல் காற்றில் பறக்கத் தொடங்கிவிடுகின்றான்.  பகவான் ரமணரைப்பார்த்தப்பின்பு எவரும் நானோடு இருக்கமுடியாது அதனால் ரமணரை கொலைகாரர் என்றார் அந்த பெரியவர்.

நீலனைக்காணச்செல்லும் சாத்யகி நானை இழக்கப்போகின்றான் அல்லது இழந்துக்கொண்டே போகிறான், அது அவன் கழுவில் ஏறப்போவதுப்போன்றதுதான். நான் என்னும் கல் ஏறி அமர்ந்து இருக்கும் சருகுஇலை அவன், அந்த பளு அதிகமாக இருந்தபோது அவனால் அசையமுடியவில்லை, அதை கறைக்க திருஷ்டத்யுமனன், கொஞ்சம் கள்ளுற்றி கரைத்தான்.  அந்த கல் அகன்றுவிட்டால் அவன் பறந்துவிடுவான். அப்படிப்பறந்து எதவாது ஒரு முள்கழுவில் மாட்டி துடிப்பான். பார்ப்பவதற்குதான் அது கழுவில் அமர்ந்து துடிப்பதுபோல் இருக்கும். அந்த சருகுக்கு அது ஒரு பீடம்.

பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்வர் ”அருள்காற்று எங்கும் வீசிக்கொண்டுதான் இருக்கிறது. நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் சருகுபோல் இருப்பதுதான்” என்பார்.

சருகுபோல் ஆகுவது என்பது எளிதான செயலா? கடமை, கட்டுபாடு, காவல், நகரம், கடல் என்று எத்தனை எத்தனை சுமைகளைத் தாண்டி செல்ல வேண்டி இருக்கிறது. இதை எல்லாம் தாண்டி சென்றபின்பும், சடங்குகள், சம்பிரதாயங்கள், சொற்கள் என ஏதே ஒரு பளு நம்மை அழித்திக்கொண்டு இருக்கிறது.

ஆன்மிக உலகிற்குள் நுழைபவருக்கும், உலோகாயத வாழ்வில் நுழைபவருக்கும்  ஒரேவகையான பளுதான் உள்ளது. ஆனால் அந்த பளு அவர்கள் எண்ணும் எண்ணங்களின் வழியாக உயரத்திற்கோ, பாதளத்திற்கு கொண்டு செல்கிறது.

சாத்யகி போதை ஏறியபோது பளுகுறைந்தவன் ஆகின்றான், அவனை அழுத்திக்கொண்டு இருந்த நான் அந்த போதையில் செயற்கையாக கரைகின்றது. நட்பென்னும் சகமார்க்கத்தில் அவன் நீலனை நெருங்க நெருங்க அந்த பளுவை இயற்கை குறைத்துக்கொண்டே செல்கிறது.
கிருஷ்ணகிரியில் வந்துமோதும் அலைகள், பால் அபிஷேகம் செய்வதுபோல் உள்ளது, முல்லை மலர்களை தூவி புஷ்பாபிஷேகம் உள்ளது. ஒரு கட்டத்தில் நாககுடையென உள்ளது. இது இயற்கை தன்னை இறைவனாக ஆக்கி தன்னையே ஆராதிப்பதுபோன்றது.  இயற்கை நடத்தும் ஒரு அபிஷேக வழிபாடு. பாலாகவும், மலராகவும், நாகக்குடையாகவும் இருக்கும் கடல், தனது ஒசையில் வேதமாக சொல்லாகவும் ஒலிக்கிறது. அந்த சொற்களின் முன்பு சாத்யகி, திருஷ்டாத்யுமனனும் சொல் இழந்து மௌனத்தில் விழுகின்றார்கள். இது எல்லாம் இயற்கையே செய்துக்கொண்டு செல்கிறது. இயற்கை தன்னை இறைவனாக ஆக்கிக்கொள்கிறது, இயற்கையே தன்னை வழிபடவும் செய்கிறது. இயற்கையே ஒலிக்கிறது, இயற்கை மௌனத்தை’யும் உண்டாக்கிறது. இயற்கையே எங்கும் கடவுள் என்று நிற்கிறது.  .

”நீலமென்பது ஆழம் தன்னை தன் ஒளியாலே மறைத்துக் கொள்ளும் நீரின் மாயம்”-இந்திரநீலம்-89 என்ற இடத்தில் வந்துநிற்கும்போது,  கண்ணன் தன் பெயரால் தன் ஆழத்தை மறைத்துக்கொண்டு மனிதன் என்று நின்றான். சிலருக்கு மகன், சிலக்கு கணவன், சிலருக்கு நண்பன், சிலருக்கு ஆண்டான், அவனும் கடலும் வேறு அல்ல, அவனை யாரும் ஆராதிக்கவேண்டாம், அவனே அவனை ஆராதிக்கின்றான். அவனை காணச்செல்பவர்கள் தங்கள் பளுவை இழந்து சருகென ஆகின்றார்கள் அவ்வளவுதான். அவர்கள் பறந்து எங்கும் செல்லலாம், ஏன் ஒரு முள்ளில் மாட்டி கழுவேறித் துடிக்கலாம். பார்ப்வர் கண்களுக்குதான் அது துன்பம். அந்த சருகும் அந்த முள்ளும் இயற்கையில் இயற்கையாய் இருக்கிறது.

களியோகி என்னும் சொல்லெடுத்து அதை இயற்கையில் வைக்கும்போது இயற்கையின் கடவுள் தரிசனம் கண்களில் நிறைகிறது. இயற்கையைவிட பெரிய களியோகி யார்? 

எங்குமே இருப்பவன் ஆகி
யாவற்றிலும் நிலைத்தவன் ஆகி
மகேஸ்வரனாகி  பலஉருவம் கொண்டுமே
அசுரர்களை அழித்த புருஷோத்தமனான 
ஸ்ரீவிஷ்ணுவை வணங்குகின்றேன். -ஸ்ரீவிஷ்ணுசகஸ்ரநாமம். 
  
நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல். 

சியமந்தகத்தின் ஒளி


    ஒளிவிடும் மணிகளைபற்றி   நாம் நிறைய கதைகளை படித்திருக்கிறோம். ஆனால் உண்மையில் ஒரு கல்லிற்கு ஒளிவிடும் தன்மை இருக்குமா?  ஆனால் மங்கிய வெளிச்சத்தில்கூட மின்னும் விலைஉயர்ந்த கற்களை பார்த்திருக்கிறோம். கற்களிலிருந்து  ஒளி பிரகாசமாக பளிச்சிடுகிறது. அதற்கு காரணம் அது வெளியில் இருக்கும் ஒளியை உள்வாங்கி தனக்குள் பலமுறை பிரதிபலித்து தன் வண்ணத்தை சேர்த்து  சட்டென்று ஒரு கணத்தில் உமிழ்வது. அது வெளியில் உள்ள ஒளியிலிருந்து மாறுபட்டும் திண்மை அதிகமாகவும் இருப்பதால் அந்த ஒளி அந்தக் கல்லிலிருந்தே வெளிப்பட்டதாக உளமயக்கு கொள்கிறோம்.
 

 சியமந்தக மணியும்  அத்தகையதா? அதன் உள்ளிருந்து வரும் ஒளி வெளி ஒளியை வாங்கி உமிழ்வதுதானா?  ஆம் என நினைக்கிறேன். ஆனால் அது தன் ஒளியை அதை பார்ப்பவரின் கண்களில் வெளிப்படும் ஆசை என்ற ஒளியை வாங்கி உமிழ்கிறது.  ஒரு வண்ணதொலைக்காட்சியில் மூன்றே மூன்று வண்ணங்கள் வேவேறு விகிதங்களில் ஒன்றிணைத்து பல்லாயிரம் வண்ணங்களை தோற்றுவிப்பதுபோல் சாத்வீக ராஜச தாமசம் என்ற முக்குணங்கள் பல்வேறு விகிதங்களில் ஒன்றிணைந்து பல்லாயிரம் குணங்களாக மனிதர்களுக்கு அமைகின்றன.  அந்த குணங்களுக்கேற்ப மனிதர்களிடமிருந்து ஆசைகள் வெளிப்படுகின்றன. அந்த ஆசையின் ஒளியை உள்வாங்கியே சியமந்தகம் என்ற அந்த மாயக்கல் ஒளிஉமிழ்கிறது.
 

 காளிந்தி தன் முக்குணங்களுக்கும் அப்பாற்பட்டவளாக இருக்கும் யோகீஸ்வரியாக இருக்கிறாள். அதனால் அவளிடம் ஆசை என்பது இல்லாததால், சியமந்தகக்கல் பெருக்கிக்காட்ட எந்த ஒளியையும் அவளிடமிருந்து பெறமுடியவில்லை. அதனால் அது அவள் கரத்தில் ஒளியிழந்து வெறும் குழாங்கல்லாக சிறுத்துவிடுகிறது. என்ன அற்புதமான நிகழ்வு. படித்து முடிக்கையில் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் உறைந்துவிட்டேன். இவற்றை எழுதும் ஒருவர் எத்தகைய உச்சநிலையில் இருப்பார் என நினைத்துப்பார்க்கிறேன். கண்ணன் வெண்முரசில் அவதரித்தெழுந்து நமக்கெல்லாம் அருள்புரிந்துவருகிறான் என்பதில் எனக்கு எந்த ஐயமுமில்லை.

தண்டபாணி துரைவேல் 

Tuesday, September 1, 2015

யமுனையில் எத்தனை மீன்கள் உள்ளன?


    
    ஒரு மலைசிகரத்தில் அல்லது மிக உயர்ந்த கோபுர உச்சியிலிருந்து நாம் காணும் பூமியும் வானமும் இணையும் தொடுவானவட்டத்திலிருந்து சிறு பெண்மகவின் கை வளை வட்டம் வரை எத்தனை வகையான வட்டங்கள். அனைத்து வட்டங்களையும் நாம் ஒரு கணித சமன்பாட்டில் ஒருங்கிணைக்கிறோம்.   இனி நாம் தனித் தனியே ஒவ்வொரு வட்டத்திற்குமென பண்புகளை காண்பதில்லை. அனைத்தையும் அந்த சமன்பாடிற்கு நிறுவி அனைத்து வட்டங்களுக்கும் பொருத்திக்கொள்கிறோம்.   இப்போது நாம் அனைத்து வட்டங்களையும் அந்த சமன்பாடாகவே காண்கிறோம். அந்த சமன்பாட்டின்மூலம் அனைத்து வட்டங்களையும்   நாம் அறிந்துகொள்ள செய்கிறோம்.
 
 
   இதைப்போல் ஆற்றில் எத்தனை எத்தனை மீன்கள், பல வண்ணங்கள், பல உருவங்கள், உற்று பார்த்தால் மேலும் மேலும் வேறுபாடுகள். இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து மீன் என்ற ஒன்றை வரையறுக்கிறோம். அப்போது அந்த மொத்த மீன்களும் அந்த வரையறையில் அடங்கிவிடுகின்றன. ஒரு ஞானிக்கு அந்த மொத்த உயிர்குலமும் ஒற்றை உயிராய் ஒருங்கிவிடுகிறது. சில மீன்கள், உண்ணப்படுகின்றன,  சில மீன்கள் இனப்பெருக்கம் செய்து  அதன் சந்ததிகளை பெருக்கிக்கொள்கின்றன. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியிலும், தனிப்பட்ட மீன்களுக்கு,  ஆயிரம் மாறுதல்கள் அந்த மீன்குலத்தில் ஏற்பட்டாலும்,  அந்த மீன் என்ற வரையறையில், எந்த மாறுதலையும் அடைவதில்லை.  தனிப்பட்ட மீன்களின் வாழ்வின் நிகழ்வுகள் நன்மை, தீமை போன்றவை எல்லாம் அர்த்தமிழந்து போய்விடுகின்றன.


         இந்த ஒருமையை மீன்குலத்தில்  அறியும் ஒருவர் இவ்வாறு அனைத்து குலங்களிலும் அறிவார். மனித குலத்தில் இந்த ஒருமையை நாம் விராடபுருஷன் என்கிறோம். மனித குலத்தை விராடபுருஷனாக பார்க்கும்போது தனிப்பட்ட   நபர்களின் விருப்பு வெறுப்புகள் நன்மை தீமைகள் எல்லாம் அர்த்தமிழந்துபோகின்றன. அப்படி காணும் நபருக்கு இயல்பாகவே ஆசைகள், எதிர்பார்ப்புகள்  அற்று போகிறது. அவருக்கு நன்மை தீமைகள் போன்றவற்றுக்கு அப்பாற்பட்டவராக போய்விடுகிறார். மற்ற மனிதர்களை கவர்ந்திழுக்கும் மணிகள் அவர்களின் கையில் விழுகையில் ஒளியற்று போகின்றன.


     காளிந்தி தன் தவத்தின் மூலம் அறிவது இந்த ஒருமையைத்தான் என  நான் புரிந்துகொள்கிறேன்.

ஒரு பசுவின் பாலை அதன் மடியில் கறக்கிறோம். ஆனால் வெண்ணிறம் கொண்ட அந்த பால் அதன் ஊன் முழுதிலும் ஊடுருவிப்பரவும் அதன் செந்நீரின் கனிந்த வடிவம் அல்லவா?  ஆகையால் பசுவின் உடலே பாலால் நிரப்பபட்டது என சொல்லலாம்தானே?   கீதை பிறக்கப்போவது குருஷேத்திர போரின் துவக்கத்தில்தான். ஆனால் அந்தக் கீதை வெண்முரசின் வரிகள்தோறும் ஊடுருவி கலந்திருப்பதை இப்போதே நம்மால் காணமுடிகிறது.

தண்டபாணி துரைவேல்

காளிந்தியும் கடல்மாளிகையும்

காளிந்தியும் கடல் மாளிகையும்:

இன்றைய அத்தியாயம் இந்திரநீலம் குறித்த பூசல்களை நிறைவு செய்திருக்கிறது. படித்து முடித்தபோது இதுதானே இந்திரநீலத்தின் இறுதி அத்தியாயமாக இருக்கவேண்டும் என்று நினைக்கவைத்தது. பல்வேறு அலையடித்தல்கள் நடுவே அமைதியின் உச்சத்தில் இருக்கும் மலைமுடியில் இது முடிவது சிறப்பு.

இந்திரநீல மணியானது காம குரோத மோகம் கடந்த சியாமம் (இருள்). அத்தனை பேரின் அகமும் அதைநோக்கிக் கொந்தளிக்கிறது. எட்டு அரசியர், சாத்யகி, அக்ரூரர், கிருதவர்மன், சததன்வா, சத்ராஜித், பிரசேனர் என அனைவரும் அதற்கு ஏதேனும் ஒரு வகையில் உரிமை கொண்டாடுகிறார்கள். கவர்ந்துசெல்ல எண்ணுகிறார்கள். இவ்வலைகளின் மையத்தில் யோகத்தின் உச்சத்தில் அமர்ந்தவள் காளிந்தி. அந்தக் கடல் மாளிகையையே அவளைக் குறிக்கும் குறியீடாக வாசிக்கமுடியும்.

எங்கும் நிறைந்த பரம்பொருளை எட்டு அரசியரும் ஒவ்வொரு வகையில் காண்கிறார்கள். அவர்கள் காணும் வ‌டிவங்கள் அனைத்தும் எல்லைகள் கொண்டவை. இறைவனோ நன்மை தீமை என்னும் இருமைகளும் அற்றவன். வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன். அந்தப் பரம்பொருள் வடிவை அறிபவனே துன்பங்களிலிருந்து விடுபடுவர் என்கிறார் திருவள்ளுவர்.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

அத்தகைய ஒருவனே (ஒருத்தியே) ஓயாது அலையடிக்கும் உலகில் விருப்பு வெறுப்புகளின் சுமைகளின்றி வாழமுடியும். இந்திரநீலம் அத்தகையவளின் கையில் வெறும் கூழாங்கல்லே. படித்தபோது திருஷ்டத்யும்னன் போலவே எனக்கும் உளஎழுச்சி ஏற்பட்டது.
 
திருமூலநாதன்