ஒரு மலைசிகரத்தில் அல்லது மிக உயர்ந்த கோபுர உச்சியிலிருந்து நாம் காணும் பூமியும் வானமும் இணையும் தொடுவானவட்டத்திலிருந்து சிறு பெண்மகவின் கை வளை வட்டம் வரை எத்தனை வகையான வட்டங்கள். அனைத்து வட்டங்களையும் நாம் ஒரு கணித சமன்பாட்டில் ஒருங்கிணைக்கிறோம். இனி நாம் தனித் தனியே ஒவ்வொரு வட்டத்திற்குமென பண்புகளை காண்பதில்லை. அனைத்தையும் அந்த சமன்பாடிற்கு நிறுவி அனைத்து வட்டங்களுக்கும் பொருத்திக்கொள்கிறோம். இப்போது நாம் அனைத்து வட்டங்களையும் அந்த சமன்பாடாகவே காண்கிறோம். அந்த சமன்பாட்டின்மூலம் அனைத்து வட்டங்களையும் நாம் அறிந்துகொள்ள செய்கிறோம்.
இந்த ஒருமையை மீன்குலத்தில் அறியும் ஒருவர் இவ்வாறு அனைத்து குலங்களிலும் அறிவார். மனித குலத்தில் இந்த ஒருமையை நாம் விராடபுருஷன் என்கிறோம். மனித குலத்தை விராடபுருஷனாக பார்க்கும்போது தனிப்பட்ட நபர்களின் விருப்பு வெறுப்புகள் நன்மை தீமைகள் எல்லாம் அர்த்தமிழந்துபோகின்றன. அப்படி காணும் நபருக்கு இயல்பாகவே ஆசைகள், எதிர்பார்ப்புகள் அற்று போகிறது. அவருக்கு நன்மை தீமைகள் போன்றவற்றுக்கு அப்பாற்பட்டவராக போய்விடுகிறார். மற்ற மனிதர்களை கவர்ந்திழுக்கும் மணிகள் அவர்களின் கையில் விழுகையில் ஒளியற்று போகின்றன.
காளிந்தி தன் தவத்தின் மூலம் அறிவது இந்த ஒருமையைத்தான் என நான் புரிந்துகொள்கிறேன்.
ஒரு பசுவின் பாலை அதன் மடியில் கறக்கிறோம். ஆனால் வெண்ணிறம் கொண்ட அந்த பால் அதன் ஊன் முழுதிலும் ஊடுருவிப்பரவும் அதன் செந்நீரின் கனிந்த வடிவம் அல்லவா? ஆகையால் பசுவின் உடலே பாலால் நிரப்பபட்டது என சொல்லலாம்தானே? கீதை பிறக்கப்போவது குருஷேத்திர போரின் துவக்கத்தில்தான். ஆனால் அந்தக் கீதை வெண்முரசின் வரிகள்தோறும் ஊடுருவி கலந்திருப்பதை இப்போதே நம்மால் காணமுடிகிறது.
தண்டபாணி துரைவேல்