Tuesday, September 1, 2015

காளிந்தியும் கடல்மாளிகையும்

காளிந்தியும் கடல் மாளிகையும்:

இன்றைய அத்தியாயம் இந்திரநீலம் குறித்த பூசல்களை நிறைவு செய்திருக்கிறது. படித்து முடித்தபோது இதுதானே இந்திரநீலத்தின் இறுதி அத்தியாயமாக இருக்கவேண்டும் என்று நினைக்கவைத்தது. பல்வேறு அலையடித்தல்கள் நடுவே அமைதியின் உச்சத்தில் இருக்கும் மலைமுடியில் இது முடிவது சிறப்பு.

இந்திரநீல மணியானது காம குரோத மோகம் கடந்த சியாமம் (இருள்). அத்தனை பேரின் அகமும் அதைநோக்கிக் கொந்தளிக்கிறது. எட்டு அரசியர், சாத்யகி, அக்ரூரர், கிருதவர்மன், சததன்வா, சத்ராஜித், பிரசேனர் என அனைவரும் அதற்கு ஏதேனும் ஒரு வகையில் உரிமை கொண்டாடுகிறார்கள். கவர்ந்துசெல்ல எண்ணுகிறார்கள். இவ்வலைகளின் மையத்தில் யோகத்தின் உச்சத்தில் அமர்ந்தவள் காளிந்தி. அந்தக் கடல் மாளிகையையே அவளைக் குறிக்கும் குறியீடாக வாசிக்கமுடியும்.

எங்கும் நிறைந்த பரம்பொருளை எட்டு அரசியரும் ஒவ்வொரு வகையில் காண்கிறார்கள். அவர்கள் காணும் வ‌டிவங்கள் அனைத்தும் எல்லைகள் கொண்டவை. இறைவனோ நன்மை தீமை என்னும் இருமைகளும் அற்றவன். வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன். அந்தப் பரம்பொருள் வடிவை அறிபவனே துன்பங்களிலிருந்து விடுபடுவர் என்கிறார் திருவள்ளுவர்.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

அத்தகைய ஒருவனே (ஒருத்தியே) ஓயாது அலையடிக்கும் உலகில் விருப்பு வெறுப்புகளின் சுமைகளின்றி வாழமுடியும். இந்திரநீலம் அத்தகையவளின் கையில் வெறும் கூழாங்கல்லே. படித்தபோது திருஷ்டத்யும்னன் போலவே எனக்கும் உளஎழுச்சி ஏற்பட்டது.
 
திருமூலநாதன்