Sunday, September 27, 2015

யோகம்

கந்தர்வனின் கதை ஆகட்டும், திரிசிரசின் கதை ஆகட்டும், இன்று அர்ஜுனன் வென்று மீளும் ஏழு நாகலோகம் ஆகட்டும் அனைத்துமே [குழந்தைக் கதையாக சொல்லப்பட்ட] ஆத்மீகத்தில் ஒரு சாதகன் சிக்கிக் கொள்ளும் இடங்களும், ஒரு சாதகன் வென்று மீளும் இடங்களும் ஆகும்.

குறிப்பாக இன்றைய அத்யாயம்  குண்டலனி, சக்கரங்கள் வழியே உயர்ந்து சகசரத்தை அடையும் ஆத்மீக குறியீட்டின் கதையே.

ஒரு எல்லைக்க்கு மேல் இதை விளக்க இயலாது.  கதைக்குள் ஒரு வரி வருகிறது ''இது வரையாடும் கால் பிழைக்கும் பாதை'' . ஆம் பிழை திரிசிரஸ். வென்ற சாதகன் அர்ஜுனன்.

அர்ஜுனன் செல்வது வெல்லவே இயலாது என்பதை நோக்கிய பயணம்.  ஆத்மீகமும் அதுதான்.  வெண் சுழியின் மைய இருள் புள்ளி  நோக்கி அர்ஜுனன் பறக்கையில் [உண்மையில் பாம்புகளில் சில மரம் விட்டு மரம் தன்னை அம்பாகி பாயும்]  அந்த மையத்திலிருந்து எழும் பெண்ணின் சிரிப்பொலி...

இந்தக் கதையை சொல்லிக் கொண்டிருப்பவள்  ஆணால் தீண்டப்படாத பரிசுத்தமான ஒரு பெண்.

இதற்க்கு மேல் இதை சொல்ல முடியாது என்ற எல்லை வரை சொல்லப்பட்ட கதை.

காண்டவத்தில் ஜெயம் இந்த தத்துவார்த்த சிக்கலில் சிக்கி நின்றுவிட்டார். காண்டீபத்தில் நாண் பூட்டி, அம்பு செலுத்தி, மைய பிந்துவை கச்சிதமாக அடித்துவிட்டார்
 
கடலூர் சீனு

தத்துவத்தின் கனவு

அன்புள்ள ஜெயமோகன்

நாக உலகின் சித்திரம் பிரமிக்கவைத்தது. இரண்டுமுறை வாசிக்காமல் உள்வாங்கவே முடியாத அடர்த்தி. ஒரு கனவு போல. தியானம் போல என்றும் சொல்லலாம்

குண்டலினிப்பாம்பில் இருந்து சகஸ்ரமாக விரியும் பாம்புவரை ஏழு படிநிலைகள். இறுதியில் எஞ்சும் ஒளிவடிவம். அதன் நடுவே கருஞ்சுழி

ஒவ்வொரு வர்ணனையையும் நுணுக்கமாக வாசித்தாகவேண்டியிருக்கிறது. வென்றேன் என்று ஒருபடியில் சொல்பவன் வெற்றி என்றில்லை என்று எந்தப்படியில் சொல்கிறான். சென்றுகொண்டே இருப்பவன் என எந்தப்படியில் உணர்கிறான்

தத்துவத்தை கனவாக ஆக்கிய அத்தியாயம்

சுவாமி

கருஞ்சுழி

Dear Mr.Jeyamohan,

 Just now I read kaandeevam today. I see the whole chapter as the revelation of Hawking's Brief history of time. when I read his book the first time , I had trouble imagining certain concepts like arrow of time in the black hole. But today's line 
 தன் உடலை ஒரு சிறு அம்பென ஆக்கி அவ்விருள் மையம் நோக்கி பாய்ந்தான்.
This sealed it. 
Even I could imagine further concepts like event horizon, schwarzchild radius from today's writing
வளைத்து இறுகப்பற்றிக்கொண்டு தலைகீழாக ஆடியப விழுந்து ஆழத்தின் தொலைவில் மறைந்த பிறிதொரு நாகத்தின் "இறுதிக் கண சுருங்கலை"
I am not sure whether you can interpret a pure literacy work like venmurasu in this manner. But this is how I visualise today's article. it helps bring alive very complex concepts for children and adults alike.
thanks for giving this.

Warm regards,
Meenakshi
 
அன்புள்ள மீனாட்சி நாராயணன்,
 
அந்த மொத்தச்சித்திரமும் யோகப்பயிற்சியில் பெரும்பாலும் தென்படுவது. முடிவற்ற சுழல். மைய இருள். நெளிவுகளின் வெளி
 
பிரபஞ்சமே அப்போது உள்ளே தெரியும்போலும்
 
ஜெ

சுழல் உலகம்



அன்புள்ள திரு.ஜெ வணக்கம். அர்ஜுனனின் நாகலோகப்பயணம் குழந்தைகளுக்கான  உலகமாக படைக்கப்பட்டாலும், அது ஞானிகளுக்கான தோரணவாயிலைக் கொண்டு உள்ளது

மூலாதாரம், சுவாதிஸ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா, துரியம் என்னும் ஏழு சக்கரங்கள் ஏழு லோகங்களாக உள்ளன. இந்த ஏழு லோகங்களும் அக உலகங்கள். அந்த அகலோகங்களில் ஏழாம் உலகம் கீழே இருக்கிறது. ஆறாம் உலகம் அதற்குமேல் உள்ளது. ஐந்தாம் உலகம் அதற்குமேல் உள்ளது, நான்காம் உலகம் அதற்குமேல் உள்ளது, மூன்றாம் உலகம் அதற்குமேல் உள்ளது, இரண்டாம் உலகம் அதற்குமேல் உள்ளது. முதல் உலகம் அதற்குமேல் உள்ளது.நாகலோகம் என்பதல் ஏழாம் உலகத்தை கீழே வைத்து, ஏழில் இருந்து ஒன்றுக்கு வரும் கதை அம்சம் அற்புதம்.

தொங்கும்தோட்டம்போல் இது தொங்கும் உலகம். பத்மாசனத்தில் உட்காரும் ஒருவனுக்கு மூலாதாரம் என்பது ஏழாம் உலகம்தான். இப்படி என்னையே தலைகீழாகப்பார்க்கவைத்த ஜெவின் பார்வைக்கு வணக்கம்.

எண்ணிக்கையால் ஒரு உண்மை பெரியதில்லை என்பதையும் உணரவைத்தது இந்த தலைகீழ் ஏழுலோகம். நாகலோகத்தில் ஏழாம் உலகத்தில் இருந்துதான் முதல் உலகத்திற்கு செல்லவேண்டும். அப்ப மானிடன் எட்டாம் உலகத்தில் இருக்கிறானா? எட்டா லோகத்தில் இருக்கிறான். 

காலத்தையும் பாசத்தையும் வெல்லும் அர்ஜுனன் ஏழாம் உலகத்தில் நுழைகிறான். அங்கு தன்னை குரோதத்தால் நிலைநிறுத்துகின்றான். இது முதல் சக்கரமாகிய மூலாதாரம். முயற்சி செய்பவனின் ஆடுகளம்.  

ஏழாம் உலகத்தில் நுழைந்ததாலேயே ஆறாம் உலகத்திற்கு எளிதில் நழுவி சென்றுவிடுகின். ஆறாம் உலகத்திற்கு செல்ல எந்த கடின உழைப்பும் தேவை இல்லை. அது காமத்தால் ஆனது, குரோதமே ஒருவனை காமத்தில் மூழ்க அடிக்கிறது. காமம் நிறையும்தோறும் குரோதம் இல்லாமல் ஆகிறது. ஆனால் அந்த உலகத்தில் உறவுகளால் சிக்கிக்கொள்ளும் கூட்டம் உள்ளது. உறவுகளால் சிக்கிக்கொள்ளாமல், உறவுகள் அனைத்தும் மாயை என்று உணர்ந்து பிறன் என்று எதுவும் அற்றவானாக முன்னேறுகின்றான் அர்ஜுனன்.அங்கு எல்லாம் அவனே. இது இரண்டாவது சக்கரமாகிய சுவாதிஸ்டானம். உறவு பந்தலை உருவாக்கும் உயிர்சக்தி துடிக்கும் இடம்.

ஐந்தாம் உலகமான காளகத்தில் அதிக உழைப்பை கொடுக்கின்றான். ஒருவனுக்குள் பெருகும் பேராசையால் ஆனது அந்த உலகம். பேராசை வளர்வதற்கு உழைப்பை வேண்டுகிறது. வெற்றித்தோல்வி இங்கு நிர்மாணிக்கப்படுகிறது. இங்கு அர்ஜுனன் பதினோறு தோல்விகளுக்கு பிறகு பன்னிரண்டாவது தாவலில் வெற்றிப்பெறுகின்றான்  .வெற்றித்தோல்வியால் இங்கு எதிரிகள் முளைக்கிறார்கள். தோற்பதற்கும் வெல்வதற்கும் எதிரியே காரணமாகின்றான் என்பதை அறிந்து அந்த உலகத்தை கடக்கிறான். எதிரியும் தானும் வேறு அல்ல தானே என்றும், தன்னின் சமபலம் என்றும் இந்த உலகத்தில் உணர்கின்றான் அர்ஜுன்ன். இது மூன்றாவது சக்கரமாகிய மணிபூரகம். மனம் இங்கு இயங்கும்போது செயல்வீரன் எழுகிறான்.

ஏழாம் உலகம், ஆறாம் உலகம், ஐந்தாம் உலகம் என்று செல்லும் மனம் நான்காம் உலகம் செல்லமுடியாமல் கணத்தில் சோர்வுற்றுவிழுந்துவிடும். நான்காம் உலகம் ஒரு மையம். நான்காம் உலகத்திற்கு கீழே மூன்று உலகம் உள்ளது. நான்காம் உலகத்திற்குமேலே நான்கு உலகம் உள்ளது. மையத்தை அடைவது என்பது வெற்றியின் முதல்படி. இருநிலைகளை சமத்தில் உணரும் தருணம். அதை வாயில் படி என்றும் சொல்லலாம், அதற்கு அப்பால் அகம் உள்ளது, அதற்கு இப்பால் புறம். அங்கு நின்று அகத்தையும் புறத்தையும் அறியமுடியும். கீழ் உலக நிலையும், மேல் உலக நிலையும் அங்கு நிலவும். குளிச்சியும் வெப்பமும் அங்கு இருக்கும், இருளும் ஒளியும் அங்கு இருக்கும். எனவே இருமையின் பிளவை அங்கு மனம் உணர்ந்து சோர்வு கொள்கிறது. இந்த உலகம் தமசத்தால் ஆனது. தாமசத்தை வெல்பவன் அங்கு வெல்கிறான். அங்கு செல்ல ஜலஜன் சோர்வுரும் கணம்தான் அங்கு செல்ல அர்ஜுனன் ஊக்கம் கொள்ளும் கணமும். அங்கு உள்ள அனைவரும் தங்களை உடலென்று என்று எண்ணி உடலாகி உறைய, அவர்களின் விழியின் விளக்கால் ஒளிப்பெற்று அர்ஜுனன் வெல்கிறான். உடல் நினைவினை மறக்கிறான். நான்காவது ஆதாரம் அனாகதம். உடலும் உள்ளமும் சம எடை கொண்டு கனக்கிறது. உடல் உணர்வை இழப்பவருக்கு உள்ளுணர்வு ஒளியும்ஒலியும் காட்டி உயர்த்துகிறது.

மூன்றாவது உலகம் பொன்னுலகம் இங்கு செல்பவர்கள் உடல் பொன்னென்று ஆகின்றது. கீழ் உள்ள மூன்று உலகமும் உடம்பைப்பற்றி பெரிதாக பேசவில்லை ஆனால் மேல் உள்ள மூன்று உலகத்தில் தொடக்கஉலகமே உடம்பைப்பற்றித்தான் பேசுகிறது. உடம்பின் மாற்றத்தைப்பற்றிப்பேசுகிறது. இதுவரை இருந்த உடலை புத்துடல் ஆக்கச்சொல்கிறது. அங்கு பொன் உடல் பெறாதவன் வாழமுடியாது. அது சித்தர்கள் உலகம், இந்த உலகத்தில் சித்தர்கள் சித்துக்கல்செய்து உடலை பொன்னாக்கி நிலைநிற்கின்றார்கள். சித்துக்களில் மாட்டிக்கொண்டவர்கள் அந்த உலகத்தை தாண்டமுடியாமல்போகலாம். அர்ஜுனன் அந்த உலகத்தின் சித்துக்களில் மாட்டாமல், பார்வையாளனாக இருப்பதாலேயே அந்த உலகத்தையும் தாண்டுகின்றான். அந்த உலகத்தை தாண்டுவதாலேயே அவனுக்கு நந்தியின் தரிசனம் கிடைக்கிறது. கால்(காற்று) நடையாகிய நந்தி அவனை மேல் ஏற்றுகிறது. குருவாகி வழிகாட்டுகிறது. சித்தால் பெறும் பொன்னுடலை எண்ணத்தால் பெற்றுக்கொள்ள சொல்கிறது. காதலாகிய அன்பு என்னும் எண்ணத்தால் அர்ஜுனன் பொன்னாகின்றான். அன்பு என்னும் எண்ணம் ஆணவமாகிய ஆலகாலத்தை பிரித்து எடுத்துவிடுகிறது. ஆலகாலமாகிய களிம்பு பிரிந்தபின்பு தாம்ரம் தங்கமாகிவிடுகிறது. இந்த உடலுக்கு ஆணவம் களிம்பு, அதை பிரித்தால் உடம்பு அன்பென்னும் தங்கமாகின்றது. அந்த தங்கத்தை அறிதல் அறிதல் என்ற விழைவின் ஒளிக்கொண்டு சுடர்மின்ன வைக்கின்றான்.

 மூன்றாம் உலகமாகிய விசுத்தி சக்கரத்தில் மனிதன் தனது களிம்புகள் முழுவதும் பிரிக்கப்பட்டு, அல்லது கண்டத்தில் அடக்கப்பட்டு சுத்திக்கறிக்கப்படுகிறான். இது விசுத்தி சக்கரம். விசுத்தி என்பது சுத்தத்தின் சுத்தம்.  

இராண்டாம் உலகமாகிய ஆக்ஞா சக்கரத்தில் அர்ஜுனன் வந்து சேரும்போதுதான் தன்னை அணுவென்று உணர்கின்றான். ஒரு பொன்கொன்றைப்பூ எனறு அவன் அவனை உணர்வது அழகு. அங்கு எழுப்பப்படும் ஒவ்வொரு சொல்லும் இடி என்று ஒலிக்கிறது அவனுக்கு, நாகங்களின் எளிய மூச்சுக்காற்றுகூட பெரும் புயல்என அவனை பறக்க வைக்கிறது. இதுவரை சொல்புத்தி வேலை செய்கிறது. இனி சுயபுத்தி அன்றி வேலைக்கு ஆகாது. தன்னைத் தான் அறிந்து தன்னில் மூழ்குபவன் உலகம் அது. இதுவரை நான் வெல்வேன், வென்றேன், நான் எதிலும் முதல்வன் என்று நினைத்த அர்ஜுனன் இங்கு மெய்மையை அறிகிறான். வெற்றி என ஒன்றில்லை எங்கும் என்றான்.  மெய்மையை அறியும் தருணம், மெய்யுடல் பெற்று மால்யவானுக்கு நிகரான உடல்கொண்டு நிற்கிறான்.  ஆக்ஞா சக்கரத்தில் புருஷோத்தமன் நாகக்குடையென ஆகின்றான். இறைதரிசனமும் பெருகின்றான் இங்கு.


இரண்டாம் உலகம் தாண்டி முதல் உலகத்தில் செல்லும்போது பொன்னுடலும் பயன்படாது, ஒளியுடல் வேண்டும், மெய்ஞானமும் பயன்படாது அனுபவஞானம் கனியவேண்டும். எத்தனை எத்தனைப்பாடுகள் பட்டு தொட்ட முதல் உலகத்தில் ஆயிரம் இதழ்தாமரை உலகமாகிய துரியத்தில் அனுவம் வாய்க்கிறது. ”ஆவது என்றுஒன்றில்லை” என்ற அனுபவஞானம். இதற்காகவா இத்தனைப்பாடு. சும்மாவே இருந்திருக்கலாமே என்றுதான் தோன்றுகின்றது.


இப்படி சும்மாவே இருந்து இறந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் சுவாமி விவேகானந்தர்   “துறுபிடித்து அழிந்துப்போவதைவிட தேய்ந்து அழிந்துப்போ” என்றுசொல்கிறார்.இதைத்தான் பகவான் கண்ணனும் “கடமையை செய் பலனை எதிர்ப்பார்க்காதே” என்றும் சொல்கின்றான்.

மெய்மை ஞானம் என்றும் ஞானம் உணர்வு என்றும் உணர்வு விழைவு என்றும் விழைவு செயல் என்றும் செயல் ஆணவம் என்றும் ஆகி உதிர்ந்து கொண்டிருப்பதை கண்டான்-காண்டீபம்-12 என்பதை வெறும் சொற்களாக வைத்துக்கொள்ளமுடியாது, வெறும் சொற்களாக வைத்துக்கொண்டால் என்ன பயன்? சொற்களின் பயனை அனுபவமாக உணர்வதற்காகத்தான் அர்ஜுனன் இத்தனைபை்பாடு படுகின்றான், இந்தப்பாடுபடுகின்றான். மானிடவாழ்க்கை எண்ணங்களால் ஆனது. ஒவ்வொரு உலகமும் ஒவ்வொரு எண்ணங்களில் கட்டமைப்பு. அந்த எண்ணங்கள் அந்த உலகத்தைத்தான் நமக்கு கொடுக்கும். அந்த எண்ணங்களை தாண்டுவதன் மூலம்தான் அந்த உலகத்தையும் தாண்டமுடியும். அனுபவம்தான் வாழ்க்கை.

இவ்வேழு உலகங்களும் எண்ணங்களால் ஆனவை என்றுணர்க! ஏழாம் உலகம் குரோதத்தால் ஆனது. காமத்தாலானது ஆறாம் உலகம். பேராசையால் ஆனது ஐந்தாம் உலகம். நான்காவது உலகம் தமோகுணத்தால் ஆனது. அன்பெனும் பொன்னொளி கொண்டது மூன்றாம் லகம். ஞானம் கனிந்த எண்ணங்களால் ஆனது இவ்வுலகம்.”-காண்டீாம்-12. அர்ஜுனன் ஏழுலோகத்திலும் பயணித்து கடைசியில் அறியும் ஆவதென்று ஒன்றில்லை என்பதை அதன் வண்ணங்களால், சுவையால் அறிந்தபின்பே அனுபவமாக்கமுடியும் இல்லை என்றால் அவைகள் வெறும் சொற்கள். சொற்கள் அனுபவத்தின் தேர். தெய்வம் இல்லாத தேர் வெறும் அலங்காரம் மட்டும்தான். அலங்காரத்திற்குள் உள்ள தெய்வத்தை அறியவே இந்த ஏழு உலகங்களையும் அறிகின்றான் அர்ஜுனன். அறிந்த பின்பு அந்த தேரையும், தெய்வத்தையும் அங்காங்கே விட்டு பயணிக்கின்றான் அர்ஜுனன். அவன் ஒரு பயணிமட்டும்.  


ஓளியுலகத்தில் சென்று மீண்டும் இருள் உலகத்தில் பாய்ந்தான் அர்ஜுனன் என்பதை அறியும்போதுதான் மனதை என்னமோ செய்கிறது. . மாயை எத்தனை வலிமையானது. இறைவன் தனக்கு நிகராக தனது மாயையை வகுத்து வைத்து உள்ளான். தனது ஒளிக்கு நிகரென இருட்டை தனது அருகிலேயே வைத்து உள்ளான்.   அதை வெளியேறும் வழி என்று அர்ஜுனனே மயங்கும்போது மற்றோர் எம்மாத்திரம். எதற்கும் அம்புவிடும் அர்ஜுனன் அதற்கு தன்னையே அம்பாக்கிக்கொள்கிறான் என்றால் அதன் சக்திதான் என்னே?  அது வெல்லமுடியாத உலகம். ஏழுலகம் வென்றவனும் வெல்லமுடியாத உலகம்.


ககனமும் வானும் புவனமும் காணவிற் காமன் அங்கம்
தகனம்முன் செய்த பெருமாற்குத் தடக்கையும் செம்
முகனும்முந் நான்கு இருமூன்று எனத்தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயதன்றோ வல்லி நீசெய்த வல்லபமே! –அபிராமி அந்தாதி
 
நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல். 



--

Saturday, September 26, 2015

வேறுபாடே இல்லாதவரும் துய்மையானவரும்


யாவற்றையும் வெற்றிக்கண்டிடும் பரமாத்தாவான விஷ்ணுவுக்கு வணக்கம்-என்று விஷ்ணு சகஸ்ரநாமம் விஷ்ணுவை விவரிக்கிறது. பன்னிரு ஆதித்தியர்களில் ஒருவனான சூரியன் ஒருவன் மட்டும் நமது கண்களுக்கு தெரியும் வண்ணம் உள்ளான்.  மற்ற ஆதித்தியர்கள் அனைவரும் அவர்களின் குணங்களால் இங்கு படிமங்களாக நிறைந்து உள்ளனர். எடுக்க எடுக்க குறையாத அட்சயப்பாத்திரங்களாக அவர்களின் படிமங்கள் உள்ளது. விஷ்ணுவைப்பற்றி ஆயிரம் திருநாமங்களால் அவன் குணங்களைப்பற்றி ஓதினாலும் அது ஏதோ துளி என்றே உருவம் காட்டுகின்றது.

விஷ்ணு வேறுபாடு இல்லாதவனாக இருக்கிறான். வேறுபாடு இல்லாதவனாகையால் குணமற்றவானாக இருக்கிறான். உருவமற்று இருக்கிறான். இசையாகி நிற்கிறான். எங்கும் எதிலும் உருவம் என்றே ஆகி நிற்கும் காதலர்களின் அன்பாகி இருக்கிறான். எங்கும் எதிலும் உருவத்தை இழந்து விரியும் பேரன்பாளர்களின் காதலாகி இருக்கிறான். தான் என்ற அகங்தை அவனிடம் இல்லை.குணம் இல்லை. தனக்கென்று ஒரு உருவம் இல்லை. வண்ணம். சுவையில்லை. அதனால் அவன் முப்பட்டகத்தால் பிரிக்கப்படாத வெள்ளொளியாக நிற்கிறான். விஷ்ணு உருவம் இல்லாதவன். விஷ்ணு சச்சுதானந்தன்.

விஷ்ணுவேறுபாடு இல்லாதவனாக இருக்கமுடியும் என்றால் வேறுபாடு உள்ள ஒன்று இருக்கத்தானே வேண்டும். அவன் த்வஷ்டா. வேறுபாடு இல்லாமல் அவனால் இருக்கமுடியவில்லை. அந்த வேறுப்பாட்டை வெறுப்பின் மூலாமாகவே உருவாக்கிக்கொள்கின்றான். வெறுப்பு தோன்றும்தோறும் வேறுபாடு உருவாகிறது, வேறுபாடு தோன்றும்தோறும் உருவம் உருவாகிறது. வண்ணம் உருவாகிறது. உருவம் என்பது படைத்தல், படைத்தல் என்பது பிரம்மாவின் தொழில். த்வஷ்டா பிரம்மாவாக வந்து நம்முன் நிற்கிறான். படைப்பதாலேயே அவன் படைக்கும் உலகத்தை தாண்டி உள்ள உலகத்தை அவனால் காணமுடியில்லை அங்கு வந்து அவன் முன் நிற்கிறது ஆணவம். த்வஷ்டாவின் ஆணவம், தான் படைத்த சிற்பங்கள்போதாது என்று தன்னைப்போல் படைக்கும் திரிசிரசைப்படைக்கிறது. அதாவது விஸ்வரூபன்.
விஷ்ணு உருவம் இல்லாமல் விரிந்தவன். விஸ்வரூபன் உருவத்தால் விரிந்தவன். உருவத்தில் உள்ள உண்மையை அறியும்தோறும் விஷ்ணுவருகிறான். உண்மைக்கு  உருவத்தை உருவாக்கும்தோறும் விஸ்வரூபன் உருவாகின்றான்.

இறைவன் உருவம் உடையவனா? இறைவன் உருவம் அற்றவான என்ற வினா எழுதா நாள் உண்டா? அந்த வினைாவை வெண்முரசு எழுப்பி விஷ்ணு, விஸ்வரூபவன் வழியாக விடைச்சொல்கிறது.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் 
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே-கந்தர் அநுபூதி

இங்குள்ள ஒவ்வொன்றும் தங்கள் உண்மையின்மேல் பொருண்மையை ஏற்றிவைத்து மூடிக்கொண்டிருக்கின்றன. பொருண்மையை விலக்கினால் இன்மையையே அறியமுடியும். பொருண்மையை அறிந்தால் உண்மை மறைந்துவிடும். சலிக்காத பெரும்பகடையாட்டத்தில் புன்னகைத்து அமர்ந்திருக்கிறது பிரம்மம். அவனோ பகடையின் மூன்று களமுகங்களிலும் தானே அமர்ந்தான். நான்காவதாக பிரம்மத்தை அமரச்செய்தான். பொருண்மையை அறிந்தது கள். பொருளை அறிந்தது வேதம். அறிந்ததை ஆண்டது விழைவு-காண்டீபம்-10

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தன பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தன பார்முதல் பூதமே –திருமூலர்.



தவத்தில் நின்று அறிவும் உணர்வும் கொண்டு படைக்கப்படுகிறது விஸ்வரூப உலகம்.  விஸ்வரூப உலகம் மூடர்களால் நொடியில் அழிக்கப்படுவது  கொடுமை. பாரததிருநாட்டின் கலையை, சிற்பங்களை அழித்த அந்நிய படையெடுப்பாளர்கள் கண்முன் வந்து மூடனத்தோடு நிற்கிறார்கள். வேதத்தை அழித்து, சுவையை அழித்து, கலையை அழித்து அவர்கள் இந்த மண்ணில் நிலை நிறுத்துவது என்ன? பலிக்கொள்ளும் பசுவின் தலை மட்டுமா?     கண்டஹார் புத்தர் சிலைகளை உடைத்த தாலிபன்களை நினைக்கும்போது காம்யகன் என்பவன் வெறும் கதை மாந்தர்தானா என்ற கேள்வி எழுகிறது.   

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.

அலையுலகு

http://www.jeyamohan.in/78979

ஜெயமோகன் அவர்களுக்கு

இன்றய பதிவு ஒவ்வொரு வென்முரசு புத்தகத்தில் வரும் உச்ச பட்ச பதிவில் ஒன்று. தொடர்ந்து படிப்பதால் இப்படி என்னமா என்று தெரியவில்லை ஒரு உச்சத்தை அடுத்து வருவது தாண்டி தாவி செல்கிறது.

அப்பா இந்த பதிவு என்ன அர்ஜுனனையே சொல்லி முடித்ததை போல.

ஒரு கணம், அதனால் அல்லவா வில் ஏந்தியவர் எல்லாம் எதிர்க்க முடியாமல் வீழ்ந்தார்கள்.
விழுபவர்களை எல்லாம் நண்பர்கள் அல்லாது பற்றுபவர்கள் யார்.

தழுவி மல்யுத்தம் செய்வதை அண்ணனிடம் அறிந்தானோ. அங்கும் ஒரே கணம்.

கண்களின் ஒளியினால் அடைந்த வெப்பம், இது என்ன அக்பர் பீர்பல் கதையின், அரண்மனை விளக்கின் வெம்மையில் இரவை யமுனை கழுத்தளவு பாய கடந்ததாய் இருக்கின்றது.

பளிங்கில் ஒற்றை கொன்றை - ரொம்ப காலம் நினைவை இது தப்பாது

தன்னுள் தடைகளே இல்லாது ஒளியின் உலகிலும் விழைவே உருவாக செல்கிறான்.

இந்த அத்தியாயத்தில் எத்தனை உவமை.
நாக உடல்கள், ஒற்றை இலக்கு.. ஒரே ஒருவன் சென்றடையும் இலக்கு. 
தாமரை இதழ்கள் மலர அம்பென செல்பவனை உள்வாங்கும் இலக்கு.
'அதை அணுகி “இங்குளேன்” என்றான்'  ' - இந்த வரி என்ன அழகான உவமை

இன்று பொழுது போகும் இடம் எல்லாம் இந்த ஏழு உலக நாகங்கள் தான்... 

மிதித்து ஏறி செல்பவை, எத்தனை சேர்ந்து சுற்றி சுற்றி தள்ளுபவை, எத்தனை பின்னி பிணைந்து நுல் இடை விடாதவை, எத்தனையை நெருப்பு கண்களுடன், எத்தனை பொன் உடலோடு, வெள்ளை பெரிய உடல்லோடு.. என்றேனும் சில ஒளியான உடலோடு 

அர்ஜுனனின் வைர விழிகள் - அதை கேட்க ஒரு கணம் தயக்கமாக இருக்கிறது.

நன்றி
வெ. ராகவ்