Saturday, September 26, 2015

வேறுபாடே இல்லாதவரும் துய்மையானவரும்


யாவற்றையும் வெற்றிக்கண்டிடும் பரமாத்தாவான விஷ்ணுவுக்கு வணக்கம்-என்று விஷ்ணு சகஸ்ரநாமம் விஷ்ணுவை விவரிக்கிறது. பன்னிரு ஆதித்தியர்களில் ஒருவனான சூரியன் ஒருவன் மட்டும் நமது கண்களுக்கு தெரியும் வண்ணம் உள்ளான்.  மற்ற ஆதித்தியர்கள் அனைவரும் அவர்களின் குணங்களால் இங்கு படிமங்களாக நிறைந்து உள்ளனர். எடுக்க எடுக்க குறையாத அட்சயப்பாத்திரங்களாக அவர்களின் படிமங்கள் உள்ளது. விஷ்ணுவைப்பற்றி ஆயிரம் திருநாமங்களால் அவன் குணங்களைப்பற்றி ஓதினாலும் அது ஏதோ துளி என்றே உருவம் காட்டுகின்றது.

விஷ்ணு வேறுபாடு இல்லாதவனாக இருக்கிறான். வேறுபாடு இல்லாதவனாகையால் குணமற்றவானாக இருக்கிறான். உருவமற்று இருக்கிறான். இசையாகி நிற்கிறான். எங்கும் எதிலும் உருவம் என்றே ஆகி நிற்கும் காதலர்களின் அன்பாகி இருக்கிறான். எங்கும் எதிலும் உருவத்தை இழந்து விரியும் பேரன்பாளர்களின் காதலாகி இருக்கிறான். தான் என்ற அகங்தை அவனிடம் இல்லை.குணம் இல்லை. தனக்கென்று ஒரு உருவம் இல்லை. வண்ணம். சுவையில்லை. அதனால் அவன் முப்பட்டகத்தால் பிரிக்கப்படாத வெள்ளொளியாக நிற்கிறான். விஷ்ணு உருவம் இல்லாதவன். விஷ்ணு சச்சுதானந்தன்.

விஷ்ணுவேறுபாடு இல்லாதவனாக இருக்கமுடியும் என்றால் வேறுபாடு உள்ள ஒன்று இருக்கத்தானே வேண்டும். அவன் த்வஷ்டா. வேறுபாடு இல்லாமல் அவனால் இருக்கமுடியவில்லை. அந்த வேறுப்பாட்டை வெறுப்பின் மூலாமாகவே உருவாக்கிக்கொள்கின்றான். வெறுப்பு தோன்றும்தோறும் வேறுபாடு உருவாகிறது, வேறுபாடு தோன்றும்தோறும் உருவம் உருவாகிறது. வண்ணம் உருவாகிறது. உருவம் என்பது படைத்தல், படைத்தல் என்பது பிரம்மாவின் தொழில். த்வஷ்டா பிரம்மாவாக வந்து நம்முன் நிற்கிறான். படைப்பதாலேயே அவன் படைக்கும் உலகத்தை தாண்டி உள்ள உலகத்தை அவனால் காணமுடியில்லை அங்கு வந்து அவன் முன் நிற்கிறது ஆணவம். த்வஷ்டாவின் ஆணவம், தான் படைத்த சிற்பங்கள்போதாது என்று தன்னைப்போல் படைக்கும் திரிசிரசைப்படைக்கிறது. அதாவது விஸ்வரூபன்.
விஷ்ணு உருவம் இல்லாமல் விரிந்தவன். விஸ்வரூபன் உருவத்தால் விரிந்தவன். உருவத்தில் உள்ள உண்மையை அறியும்தோறும் விஷ்ணுவருகிறான். உண்மைக்கு  உருவத்தை உருவாக்கும்தோறும் விஸ்வரூபன் உருவாகின்றான்.

இறைவன் உருவம் உடையவனா? இறைவன் உருவம் அற்றவான என்ற வினா எழுதா நாள் உண்டா? அந்த வினைாவை வெண்முரசு எழுப்பி விஷ்ணு, விஸ்வரூபவன் வழியாக விடைச்சொல்கிறது.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் 
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே-கந்தர் அநுபூதி

இங்குள்ள ஒவ்வொன்றும் தங்கள் உண்மையின்மேல் பொருண்மையை ஏற்றிவைத்து மூடிக்கொண்டிருக்கின்றன. பொருண்மையை விலக்கினால் இன்மையையே அறியமுடியும். பொருண்மையை அறிந்தால் உண்மை மறைந்துவிடும். சலிக்காத பெரும்பகடையாட்டத்தில் புன்னகைத்து அமர்ந்திருக்கிறது பிரம்மம். அவனோ பகடையின் மூன்று களமுகங்களிலும் தானே அமர்ந்தான். நான்காவதாக பிரம்மத்தை அமரச்செய்தான். பொருண்மையை அறிந்தது கள். பொருளை அறிந்தது வேதம். அறிந்ததை ஆண்டது விழைவு-காண்டீபம்-10

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தன பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தன பார்முதல் பூதமே –திருமூலர்.தவத்தில் நின்று அறிவும் உணர்வும் கொண்டு படைக்கப்படுகிறது விஸ்வரூப உலகம்.  விஸ்வரூப உலகம் மூடர்களால் நொடியில் அழிக்கப்படுவது  கொடுமை. பாரததிருநாட்டின் கலையை, சிற்பங்களை அழித்த அந்நிய படையெடுப்பாளர்கள் கண்முன் வந்து மூடனத்தோடு நிற்கிறார்கள். வேதத்தை அழித்து, சுவையை அழித்து, கலையை அழித்து அவர்கள் இந்த மண்ணில் நிலை நிறுத்துவது என்ன? பலிக்கொள்ளும் பசுவின் தலை மட்டுமா?     கண்டஹார் புத்தர் சிலைகளை உடைத்த தாலிபன்களை நினைக்கும்போது காம்யகன் என்பவன் வெறும் கதை மாந்தர்தானா என்ற கேள்வி எழுகிறது.   

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.