Tuesday, August 7, 2018

யுதிஷ்டிரர்




யுதிஷ்டிரர் போர்க்களத்தில் மறுபக்கம் சென்று பீஷ்மர் துரோணர் ஆகியோரை வணங்கி திரும்பிவருவதாகத்தான் மகாபாரதத்தில் உள்ளது.  அது ஒரு சிறிய செய்தியாகவே சொல்லப்படுகிறது. அப்போது இரு சாராரும் யுதிஷ்டிரரை கோழை, அடிபணியப்போகிறான் என்று வசைபாடுவதாகவும் உள்ளது. அந்த வசைபாடல் மகாபாரதம் உருவாக்கும் ஒரு பெருமையான சித்திரிப்புக்கு எதிரானதாகவே எனக்குப்பட்டது. அதுகூட இடைச்செருகலாக இருக்கலாம் என நினைத்தேன். ஏனென்றால் பாண்டவர்கள் யுதிஷ்டிரரை அப்படி கேவலமாக பேசுவார்களா என்ன? இத்தகைய சின்னச்சின்ன பிசிறுகளை புனைவுகளால் அழகாக ஒருங்கிணைத்து மேலும் கிராண்ட் ஆன ஒரு கதைசொல்லும் முறையை கடைப்பிடித்து வெண்முரசு எழுதப்பட்டுள்ளது. இப்போது யுதிஷ்டிரர் செல்வதும் அவர்கள் அவரை வரவேற்பதும் மிக அற்புதமான சித்திரிப்புகளாக உள்ளன

நரேன்

ஷத்ரியர்



Dear JM,

I found following statement as contradictory for the purpose of the war. Krishna wants to break the current order which is favouring Kshatriya's and Arjuna completely gave himself to Krishna but still talking about Rights of kshatriya's and others. Totally amusing


மாதுலரே, தன் குடிகளின்பொருட்டு எவரை கொல்லவும் தெய்வ ஆணை கொண்டவன் ஷத்ரியன் மட்டுமே. சூதர்கள் நாடாளலாம், அப்போதுகூட அவர்களுக்கு ஷத்ரியர்களுக்குரிய உரிமைகளை மரபு வழங்குவதில்லை” என்றான் அர்ஜுனன். 

Thanks

Raghavendran


அன்புள்ள ராகவேந்திரன்,

எல்லா வர்ணத்தவரும் நாடாளலாம் என்பதல்ல கிருஷ்ணனின் தரப்பு. எல்லா வர்ணத்தவரும் நாட்டை வென்று மண்ணை ஆளமுடிந்தால் தங்களை ஷத்ரியர்களாக ஆக்கிக்கொள்ளலாம் என்பதுதான். இந்த வேறுபாடு முக்கியமானது. ஷத்ரியர்களாக ஆனபின்னரே நாடாள்வது ஏற்கபபடுகிறது


உண்மையிலேயே இந்திய வரலாற்றில் பின்னர் நிகழ்ந்ததும் அதுவே. இந்தியாவை ஆண்ட மௌரியர், மராட்டியர், நாயக்கர், யாதவர் உட்பட அனைத்து அரசகுடிகளும் அவ்வாறு பிறசாதிகளில் இருந்து ஷத்ரியர்கள் ஆனவர்கள்

ஜெ

Monday, August 6, 2018

ஏற்பாடுகள்




போருக்கான ஏற்பாடுகளில் சாவு, மருத்துவம் இரண்டும் மட்டும் விரிவாகப் பேசப்படவில்லை. போர் ஏற்பாடுகளில் படைகள் நகர்வது எப்படி என்பது மட்டுமே விரிவாகச் சொல்லப்படுகிறது. நகரும் பாடிவீடுகள் ஒரு ஆச்சரியமான மிகைக்கற்பனை. ஆனால் வேறு வழியில்லை என்றும் தர்க்கபூர்வமாகத் தோன்றுகிறது. ஒரு பெரிய காளால்படையை நிறுத்தி மீண்டும் கிளப்புவது மிகவும் கடினம். அதேசமயம் மந்திராலோசனை நடத்தாமலும் இருக்க முடியாது.  உணவு உட்பட எல்லாவற்றையும் இப்படித்தான் செய்யமுடியும். நான் ஈராக் போர் சமயத்தில் இருந்திருக்கிறேன். குளிக்கக் கூடாது துணி துவைக்கக்கூடாது. பேட்டரியால் இயங்கும் எந்த பொருளையும் பயன்படுத்தக்கூடாது.  அதெல்லாம் வளங்களைச் சேமித்துக்கொண்டு போர் செய்வதற்கான வழிமுறைகளாக கருதப்பட்டன. போரை விட போருக்கான இந்தப்பயணம் மிக முக்கியமானது. மகாபாரத நாவல்கள் , சினிமாக்கள் ,சீரியல்கள் எதிலுமே இதெல்லாம் இல்லை

மகாதேவன்

பயணம்




ஜெ வணக்கம்...

செந்நா வேங்கையில் நான் சுவாரசியமாக கவணித்துக் கொண்டு வருவது, எப்படி உங்கள் பயண அநுபவங்கள், நாவல் காட்சிகளாக மாறுகின்றன என்பதையே. இந்த தலைப்பில் ஒரு சுவாரஸியமான ஆய்வு செய்யலாம்.

குறிப்பாக மூன்றை இங்கே கூற முடியும். முகங்களின் தேசத்தில், ஒட்டகமும் நடுதெருவும் என்ற தலைப்பில் 1989ல் குவாலியரில் இருந்து ஜெய்சல்மருக்கு மணற் புயலின் ஊடே பேருந்தில் ஐந்து நாட்கள் பயணித்து சென்றதை எழுதியிருந்தீர்கள். அந்த பயணத்தில், வழி தோறும், செம்புழுதியால் ஆனவர்களை போல மக்கள் என்ற குறிப்பு வரும்.
செந்நா வேங்கையில் பாண்டவர் படை நகர்வை விவரிக்கையில் அதே புழுதியால் ஆன படை மாந்தர்கள்


கௌரவர்களின் குருதிக் கொள் கொற்றவை ஆலையத்தில் திரை சீலையில் தெரியும் சுடரின் நிழல் வடிவம், கர்நாடகத்தில் உள்ள சாயா சோமஸ்வர ஆலயத்தின் வழிப்பாட்டு முறையை ஒட்டியுள்ளது.

எனக்கு முத்தாய்பாக பட்டது, பந்தாட்டம். 2016ல் உங்கள் ஐரோப்பா பயணத்தின் பொழுது, பாரீஸ் வீதிகளில், யூரோ கால் பந்து போட்டிகளின் கோண்டாடங்களின் நடுவே, ஐஃப்பீல் டவரிலிருந்து திரும்பி கொண்டிருந்தோம். முதல் உலக போரில், கால் பந்தாட்டத்தை பற்றி பேச்சு எழுந்தது. 

1914ல், போரின் துவக்க மாதங்களில், கிறிஸ்மஸையொட்டி, "Christmas Truce" என்ற அதிகாரபூர்வமற்ற போர் நிறுத்தங்கள், பல்லாயிர கிலோமீட்டர் போர்முகப்பில் கடைபிடிக்கபட்டன. இரு படைகளின், படை குழிகளின் (trench) நடுவே இருந்த "no man's land"ல் இரு படையினரும் கால்பந்தாட்ட போட்டிகளை ஒருங்கிணைத்தனர். 

செந்நா வேங்கையில், அச்சம்பவம், சரியாக பொருந்தியது.

அன்புடன்

சதீஷ்

Sunday, August 5, 2018

போரும் விளையாட்டும்




அன்புள்ள ஜெ

போர்க்களக் காட்சியில் ஒரு சின்ன நுட்பமாக அந்த விளையாட்டுக்காட்சி அமைந்துள்ளது. அதில் ஸ்வேதனுக்கு விளையாட்டுத்தனம் இல்லை. அவன் அதைத் தீவிரமாக எடுத்துக்கொள்கிறான். திருஷ்ட்துய்ம்னன் சொல்லும் எல்லா நுட்பமாக வேலைகளையும் ஒழுங்காகப் பார்த்துப்பார்த்துச் செய்கிறான் . ஆனால் சுருதகீர்த்தியும் மற்றவர்களும் போர்க்களத்திலேயே விளையாட்டுத்தனத்துடன்தான் இருக்கிறார்கள். இவர்களின் விளையாட்டுத்தன்மை அவனுக்கும் தொற்றிக்கொள்கிறது. அதுதான் அந்த விளையாட்டின் உச்சமாக உள்ளது

மகேஷ்

பிள்ளைகளின் விளையாட்டு



அன்புள்ள ஜெ

பிள்ளைகளின் விளையாட்டு எத்தனைச் சரியான இடத்தில் வருகிறது என்று பார்த்தேன்.  அதற்கு முன்புவரை எவ்வளவு பெரிய ஏற்பாடுகள், எத்தனை நுட்மபாக அவை அமைக்கப்படுகின்றன என்றெல்லாம் காட்டப்படுகின்றன. ஏராளமான நுண் செய்திகள். குறிப்புகள். போர் என்றால் விளையாட்டு அல்ல என்று அந்தப்பகுதிகள் சொல்கின்றன.  போர் என்பது ஒரு பெரிய நிர்வாகக் கலை என்று காட்டுகின்றன. ஒரு சின்ன புள்ளியைக்கூட கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது. யானைகள் திரும்பி ஓடிவரும் இடத்தில் மருத்துவமனை இருக்கக்கூடாது என்பதுபோல எவ்வளவு விஷயங்கள். உடனே போரும் எங்களுக்கு விளையாட்டே என்று பையன்கள் ஆடிக்காட்டிவிட்டார்கள். அந்த முரண்பாடுதான் அதை ஒரு கிளாஸிக் சிறுகதையின் முடிவுபோல ஆழமானதாக ஆக்கிவிட்டது

எம்.எஸ்.முருகானந்தம்