Friday, November 4, 2016

கிராதத்தின் செல்திசை




கிராதத்தின் செல்திசையும், வடிவும் கொஞ்சம் கொஞ்சமாகத் துலங்கி வருகின்றன. முக்கியமாக இன்று ஜைமினி வந்து சேர்ந்த பிறகு தான் அதை முழுமையாக உணர இயல்கிறது. முதற்கனலில் வியாசரின் மாணவர்களாக வைசம்பாயனர், பைலர், ஜைமினி மற்றும் சூததேவர் என நால்வர் குறிப்பிடப்படுகின்றனர் (முதற்கனல் 5). மிகச்சரியாக அந்த அத்தியாயத்தில் வியாசர் தன்னுள் நிறைந்த சொற்களால் காவியம் எழுதப் புகுகையில் ஒரு மத வேழம் வந்து அவர் இருந்த கல்லால மரத்தில் முட்டி தன் ஒன்றைத் தந்தத்தை இழக்கிறது. ஆம், அவரும் ஒற்றைத் தந்தம் கொண்ட யானையைத் தான் காண்கிறார். உண்மையில் வியாசர் இரு நிலவுகளையும் காணக் கூடியவர் தான். அதனால் தான் தென்திசைத் தெய்வமாகிய அறிவின் மூர்த்தியான் அமர்ந்து நால்வருக்கு மெய்மை அருளிய கல்லால மரத்தில் உறிக்குடில் கட்டி வாழ்கிறார். இருள் முதல்வன் அவருக்கும் யோகியர் அறியும் இருளை முற்றாகக் காட்டியிருப்பான். இருப்பினும் அந்த இரு நிலவுகளில் ஒரு நிலவு தானாகவே அழிந்து அவரை ஒற்றை நிலவில் விழி திறக்கச் செய்கிறது. அவ்வாறாக அவர் யோகத்தை அறிந்து காவியத்தைப் படைக்கிறார். எனவே தான் அவரால் அந்த ஆழுள்ளத்தின் இருளைக் கூட எழுத இயன்றது, மகாபாரத வடிவில். கிராதம் இந்த நான்கு மாணவர்களும் தங்களின் ஆசிரியரைத் தேடிச் சென்று கண்டடையும் பயணமாக விரியவிருக்கிறது என எண்ணுகிறேன்.  

ஒரு வகையில் பாரதம் வியாசர் சொல்லச் சொல்ல விநாயகர் எழுதியது என்பதே ஒரு மாபெரும் படிமம் தானே. எண்ணங்கள் அறியும் இருளே வந்து தன்னை உணர்வால் விரித்து விரித்து எழுதிக் கொண்ட ஒரு காவியம் என்றே மகாபாரதத்தைச் சொல்லலாம். அவ்வாறு அவ்விருளை அதைக் கொண்டே சொல்லியவன் உணர்வு அறியும் இருளில் கனவில் ஆடி, கற்பனையால் விரித்து தொகுத்து தொகுத்து மெய்மையை அறிந்த மாமுனி. முதற்கனல் அபாரமாக காவியத்தை முடித்த பிறகு அவர் அறிந்த மெய்மையை விளக்குகிறது. கிராதம் அதையே அனைத்தையும் ஒன்றெனக் கலந்தால் இருளன்றி வேறேது வரும்மேலே அவ்வீண்மீன்களை தன் மடியில் பரப்பி அமர்ந்திருக்கும் இருள்.” என்று பிச்சாண்டவர் வார்த்தைகளாகச் சொல்கிறது. ஆம், வெண்முரசு இப்பெருங்காவியத்தின் ஒளி பொருந்திய நாயகர்களை அவர்கள் சென்று அடைந்த, அவர்கள் கொண்ட இருளையும் சேர்த்து அவர்களை இருளின் மடியில் ஒளிரும் விண்மீன்களாகக் காட்டுகிறது. வெண்முரசு எத்தனை பெரிய முயற்சி என்பது எண்ண எண்ண பிரமிப்பூட்டுகிறது.
https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif

அருணாச்சலம் மகாராஜன்