Saturday, November 5, 2016

நிகிலம்இனிய ஜெயம்,

ஒரு எல்லையில்  வெண் முரசு  எனக்கு மிக மிக அந்தரங்கமானது.  ஆகவே  அது குறித்து எதுவும் பேசவோ எழுதவோ  செய்கையில்  உள்ளே எதோ ஒன்று குறைபட்டு விடுவதாக ஒரு துவர்ப்பு எழும். மறு எல்லையில்இங்க பாருங்கடா வெண் முரசை என மலைமேல் ஏறி கூவத் தோன்றும். வெண் முரசு பற்றி மட்டுமே பேசிப் பேசி எழுதி எழுதி இந்த ஆயுளை கரைக்கவேன்ன்டும் என உன்மத்தம் பொங்கும்.

கிராதம்  என்னுடைய உலகம். உண்மையில்  ஏனோ  காரணமே இன்றி  கால பைரவரை எனக்குப் பிடிக்கும். கொஞ்சம் கொஞ்சமாக காரணத்தை திரட்டிக் கொண்டேன்.  முதல் காரணம் நாய்.என் நினைவு தெரிந்த நாள் தொட்டு, நாய்கள் மத்தியில் மட்டுமே வாழ்திருக்கிறேன். சொந்த வீட்டைக் காலி செய்து அனாதைப்பக்கிகளாய் வெளியேறும்போது , அங்கிருந்து எங்கள் உடன் வந்தது நாங்கள் சோறு போட்ட தெரு நாய் மட்டுமே.  மெல்ல மெல்ல மரணம் என்பது மற்றொரு உலகம் அவ் வுலகின் கடவுள் கால பைரவன்  அப்பா அங்குதான் சென்றிருக்கிறார். என மெல்ல மெல்ல எனக்குள் அவ்வுலகை உருவேற்றி அத் துக்கத்திலிருந்து மீண்டேன்.  ஆம் காலபைரவன் என் தந்தை சென்று வாழும் உலகின் கடவுள். அக் கடவுள் இல்லை என்றால் என்றோ நான் சிதறி ஒழிந்திருப்பேன். 

நான் கோவிலுக்குச் சென்றிருக்கிறேன் எனில், என்னை அறிந்த நண்பர்கள்  என்னை காலபைரவர் சன்னதியில் காத்திருந்து சந்தித்து விடுவார்கள். ஆனால் எனது நெல்லையில் எப்போதும் காலபைரவரை கண்டும் காணாமல் கடந்து விடுவேன். பின்னால நாய் இல்லாத காலபைரவரை பார்க்க பாவமாக இருக்கும்.  அக் கோவிலில் பிட்சாடனர் சன்னதி உண்டு.  இளம் பெண்கள் அதை பார்த்தால் புத்தி பேதலித்து விடும் முன்பு அங்கே பெண்களை அனுப்ப மாட்டார்கள்.  பலத்த காவலுக்குள்,  இருளுக்குள் [இப்போது மின்னொளியில் தக்கிக்கிறது] இருக்கும் அவரை ரகசியமாய் எட்டிப் பார்த்திருக்கிறேன்.  அவர்  அத்திரி முனிவர் யாகக் குடிக்குள் நுழையும் காட்சியில்  அன்றைய நிகழ்வில்,  நான் கண்டவையும் கண்டிக்கப்பட்டவையும், வணங்கியவையும்  புனைவுலகில்  மேலான உலகில்,  என் வலி போல, உவகை போல, அத்தனை துல்லியமாக எழுந்து வருகையில் என்னால் என்னைக் கட்டுப் படுத்தவே இயலவில்லை.  உண்மையில் இந்த நொடி உள்ளே கிராத உலகம் அப்படியே இயங்கிக் கொண்டு இருக்கிறது.

அர்ஜுனன்  நீலனை வெல்ல, அதற்கான அம்பினை தேடி மனதுக்குள் கூவும் இடம். ''ஒன்றே ஒன்று, நானறியாத ஒன்று, நான் அறியாத ஒன்றை அவனும் அறிந்திர்க்க மாட்டான் அந்த ஒன்று, அது வேண்டும்''  அது மொத்த வெண் முரசு நிகழ்விலும் உச்ச தருணம்.  காரணம்  மொத்த பாரத மாந்தர்களும் எதிர் நின்றாலும் வெல்ல இயலாதவன் நீலன். இப்போது அவனை வெல்வதன் வழியே, முன்னதாகவே  பாரதப் போரை  அதன் அனைத்து வலிகள் கீழ்மை மேன்மை அனைத்து அலகுகளுடனும் பார்த்தன்  வாழ்ந்து கடக்கிறான்.   இந்த தகுதியுடன் பாரத்தைப் போரில் நுழையும் பார்த்தனின்  வினாவுக்குத்தான் நீலன் கீதை உரைக்கப் போகிறான்.

தந்தைக்காக தவம் செய்யும் பார்த்தன் முன், ப்ரபாஹாசன் வந்து ஆயுதம் தருகிறான், விதுரர் வந்து அவனை முதன்முறையாக கண்களுக்குள் கண்கள் கொண்டு சந்திக்கிறார்.  பிறகுதான் அர்ஜுனன் பயணத்தின் உச்சம். நேமி நாதர் வருகிறார்.  ஆகி அமர்ந்தவர்  மட்டுமே அடையப்பெறும் அருகநிலையை  அர்ஜுனன் முன் வைக்கிறார். அர்ஜுனன் அனைத்தையும் விலக்கி மீண்டும் இருமையால் இயங்கும் அவ் வுலகுக்கே செல்ல விழைகிறான்.  காரணம் நீலன்.  அர்ஜுனன் சொல்கிறான்  ''அவன் இருக்கும் இடத்தில்தான் நானும் இருக்க விழைகிறேன், அவனுக்கு நிகழ்ந்ததே எனக்கும் நிகழவேண்டும்''    அர்ஜுனன் நீலன் வசம் சொல்கிறான் ''உங்கள் ஒளியிலும் இருளிலும் உங்கள் உடன் இருக்க வேண்டியவன் நான்''    இதைத்தான் கர்ணன் துரியனுக்கு செய்தான்  சாபம் வாங்கினான், இருளுக்குள் புதைந்தான்.

நேமி நாதர் அர்ஜுனன் விரும்பும் ஆயுதத்தை அவனுக்கு வழங்கும் போது உள்ளே அருவமாக  எதோ ஒன்று முற்றிலும் சிதறி  வேறு வடிவம் கொள்கிறது. இந்திரன் நேமி நாதரின் வடிவில் வந்தான் .சரி. குறைந்த பக்ஷம் ஆயுதம் அளிக்கயிலாவது தனது உருவுக்கு மாறி இருக்கலாம். நேமி நாதரின் உருவில் நின்றே ஆயுதம் வழங்கியது ஏன்?  அந்த ஆயுதம் நீலனை வெல்லும். நீலனிடம் தோற்றவன். அவனை வெல்லும் ஆயுதத்தை தன் மகனுக்கு அளிக்கிறான்.

மலை ஏறுகையில் அர்ஜுனன் ஒவ்வொன்றாக உதிர்த்துச் சென்றது, அவன் மலை இறங்குகையில் ஒவ்வொன்றாக வந்து தழுவிக் கொள்கிறது. நன்கு மலர்ந்த தாமரை மொக்கு ,ஏந்திப் பார்த்தால் பிறந்த குழந்தையின் எடை இருக்கும்.  எந்தக்காமினியின் முலைச் செரிவுகளும், செங்கமல மொட்டின் மறு உருவே. முலைச்சுட்டின் ஸ்பரிசத்தை  குழந்தையின் விரல்களின் ஸ்பரிசத்துக்கு ஒப்புவமை சொன்ன விதம். அழகோ அழகு, 

எந்த ஆணுக்கும் அவனது முதல் காமக் கிழத்தி  அவனது  அந்தரங்கத்துக்குள் பிரிக்கவே இயலாமல் கலந்து கரைந்து போன ஒருவளாகவே இருப்பாள். அர்ஜுனன் வெறுத்து வெறுத்து  காமத்தால் கடந்து சென்ற முதல் காமக் கிழத்தியே அவன் முன்  கிராதை ஆகி வருகிறாள்.  அவனது நண்பனுக்கு நிகழ்ந்தது அவனுக்கும் நிகழ்கிறது.   நிகிலம், நிகிலம், நிகிலம்.   


சொல்புதிது சீனு