Tuesday, November 8, 2016

எத்தனை விதமான அன்னைகள்



 அன்னையாகி நிற்கும் ஒருசீவனின் நிலையை காட்டும் இடத்தில்  பொருளுடமை பொருளின்மை நடுவில் வாழ்க்கை சிக்கி நிற்கும் தருணம் ஒன்றை கண்டடைந்து காட்டுகின்றீர்கள்  

எத்தனை விதமான அன்னைகள் இங்கு. ஒவ்வொரு அன்னையும் விலங்கென குழந்தையென கன்னியென தேவதையென தெய்வமென வடிவம் காட்டி நிற்பதை வெண்முரசில் கண்டு இருக்கின்றேன். இன்று முற்றும் கல்லாகி நிற்கும் ஒரு அன்னையைக்கண்டு நெஞ்சம் அதிர்கின்றது. கல் உயிர் பெற்றது என்பார்கள், உயிரே கல்லாக நிற்கும் ஒரு காட்சி ஜாதவேதன் மனைவி.  

தெய்வத்தாய் என்று சொல்கின்றோம், தெய்வத்தாய் என்பது பொன்னொளியும் பூமணமும் புதுஅணியும் சூடி அருளவும் ஆட்கொள்ளவும்கூடிய பெரும் வாழ்க்கையின் சித்திரம் என்று கண்டுக்கொள்ளும் மனசித்திரம் சிதைந்து தெய்வத்தாய் என்பது உடலை கல்லாக்கி புலன்களை உலரவைத்து உயிரில் திரிக்கொளுத்தி விழியில் வாள் ஏந்தி இங்கிருந்தும் இங்கு இல்லாமல் நிற்கும் ஒரு ஜீவன் மட்டும் என்று இன்று வெண்முரசு காட்டுகிறது
தான் ஆடாவிட்டாலும் தசையாடும் என்பார்கள். தசை உயிர் உணர்வு ஆடா ஒரு தாயாக ஜாதவேதன் மனையாள் வந்து நிற்கும்போது மானிடத்தன்மையை எதற்குள் தெய்வங்களால் அடைக்கமுடியும்? என்று காட்டுகின்றீர்கள் அல்லது அன்னையாகும் சீவன் மண்ணில் விண்ணல் யார்? என்று வினா எழுப்புகின்றீர்கள்.  

ஒரு குழந்தைப்பெற்று அந்த குழந்தையை தனது உயிர் என்று அறிந்தது ஒரு நிலை, ஒரு குழந்தைப்பெற்று அதை தான் என்று அறிந்தது ஒரு நிலை, ஒரு குழந்தைப்பெற்று அதை உலகென்று அறிந்தது ஒரு நிலை, ஒரு குழந்தைப்பெற்று தான் என்றோ முடிவிலி என்றோ வகைப்படுத்த  இடத்தில் வைக்கும் தாயாகி நிற்கும் ஜாதவேதன் மனைவி முன் தாயும் தோற்றுப்போகின்றாள். தாய்மையை வெல்லும் தாய்மை. எதற்கும் பெண்ணை சரிநிகர் என்றுக்காட்டமுடியாது. ஆனால் பெண் அனைத்திற்கும் சரிநிகர் என்று தன்னை சரிவைத்தும் கொள்கிறாள். அது அவள் பெரும் கருணையில் ஒரு துளியாகி மண்ணில் நிற்கிறது. அன்னையாக இருப்பது கூட அன்னைக்கு ஒருவிளையாடல்தான் போலும்

நகையே இது இந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு
முகையே முகிழ்முலைமானே முதுகண் முடிவுயில் அந்த
வகையே பிறவியும் வம்பே மலைமகள் என்பதும் நாம் 
மிகையே இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே. –அபிராமி அந்தாதி

ராமராஜன் மாணிக்கவேல்