Monday, March 13, 2017

கலங்கவைக்கும் கள்ளமின்மையின் இறப்பு (மாமலர் -38)



    இறப்பு என்பது நேராத உயிர்கள் இல்லை. இறப்பு நடக்காத நொடிப்பொழுது உலகில் இல்லை. இறக்காதிருக்க யாராலும் முடிவதென்பதில்லை. இருப்பினும் இறப்பு என்றால் நமக்கு அச்சம் தரும் ஒன்றெனவே இருக்கிறது.  ஆனாலும்  நமக்கு நன்மை செய்பவர்கள்,  நாம் நேசம் வைத்தவர்கள் இறப்பு நமக்கு அதிகம் துயரம் தருவதாக இருக்கிறது.  அவர்கள்  இறப்பில் மனம் கலங்கிப் போகிறோம். ப்போது இறப்பு ஒரு இழப்பு என ஆகிறது.  ஆனால் எவ்வித தொடர்பும் இல்லாத ஒரு உயிரின்  இறப்புக்கு  நாம் இரக்கம்  கொள்வதுண்டா? அந்த இறப்புக்கு நாம் நம் மனம் கலங்கி வருந்துவதுண்டா? ஆம்,  யோசித்துப்பார்த்தால் ஒரு பட்டாம்பூச்சியின் இறப்புக்கு நாம் வருந்திருக்கிறோம்.  ஒரு சிட்டுக்குருவி அடிபட்டு விழுந்து இறந்துவிடுகையில் நாம் வருத்தப்பட்டிருக்கிறோம்.  மான்குட்டி ஒன்று  அடிபட்டு இறந்துவிட்டதான செய்தி நம்மை வருத்தமுற வைத்திருக்கிறது. அப்புறம் சாலையில் சென்றுகொண்டிரூக்கும் போது யாரோ ஒரு சிறு  குழந்தையின் இறப்பு ஊர்வலத்தைக் காண்கையில் மனம் பதறியிருக்கிறோம்.


   இப்படி நமக்கு தொடர்பற்ற உயிர்களின் இறப்பில்  நாம்  ஏன் மன வருத்தம் கொள்கிறோம்? எவ்வித தற்காப்பும் பெற்றிராத  எளிய உயிர்கள், தன்னைக் காத்துக்கொள்ள இயலாத இளம் உயிர்கள் நமக்கு எவ்வித தொடர்பும் இல்லாத போதும்  அதன்மேல் நமக்கு ஒரு பாசம் பிறக்கிறது. ஒரு தாயன்பு ஊற்றெடுக்கிறது. அந்த நிலையில் அவற்றின் பாதுகாப்பு நம் கையில் விடப்பட்டதாக நாம் உணர்கிறோம். தன்னைத் தற்காத்துக்கொள்ளும் நோக்கற்ற அவற்றின் கள்ளமின்மை நமக்கு அவற்றின்பால் ஒரு பொருப்பை தோற்றுவிக்கிறது. அவற்றை நம் கையில் இறைவன் ஒப்படைத்துவிட்டிருப்பதாக  உணர்கிறோம். அவற்றுக்கு துன்பம் வருகையில் ஓடோடி அவற்றின் துயர் துடைக்க முனைகிறோம். அவை இறந்து போகையில் அந்த கள்ளமின்மை, அதன்மூலம்  அது கொண்டிருந்த  அழகை , என்றும் மாறாது அவை பெற்றிருந்த  புத்துணர்வை நாம் இனி காண முடியாமல் இழந்துபோவதின் வலி நம் மனதில் நிறைகிறது. 
  

அசோகசுந்தரி தன் கள்ளமின்மையின் காரணமாக ஒரு பட்டாம்பூச்சியென குருநகரிவாசிகளுக்கு தோன்றினாள். அவளின் விளையாட்டுக்கள், சிரு விருப்புக்கள், செல்ல ஊடல்கள்,  சிணுங்கல்கள், சிரிப்புகள், எல்லார் மனதையும் கவர்ந்து நாட்டின் ஒரு செல்லகுழந்தையென ஆகியிருந்தாள்.  அவளின் இறப்பு அவர்களை மனதை மிகவும் வருத்தியிருப்பதை நம்மல் புரிந்துகொள்ள முடிகிறது. அவர்களுடன் சேர்ந்து வெண்முரசின் வாசகர்களையும் வருத்தத்தில் ஆழ்ந்திய நிகழ்வாக இந்தப் பகுதி ஆகியிருக்கிறது.  அசோகசுந்தரி எனும் பாத்திரத்தை  ஒரு அன்னையென படைத்து,   ஊழென  அவள் வாழ்வை நிகழ்த்தி அதில் ஒரு புயற்காற்றை உருவாக்கி அவளை உதிரவைத்து இதை எழுதிப்போகும்   எழுத்தாளரின் உள்ளம் எப்படிப்பட்ட பெருஞ்சுமையை உள்ளத்தில் உணர்ந்து அதன் பெருவலியை  எதிர்கொண்டிருக்கும்  என வியக்கிறேன். வெண்முரசு பொருட்டு அவர் உள்ளம் கொள்ளும் இந்த வதைகளுக்கு இலக்கிய உலகம் என்றென்றும் நன்றியுடையதாக இருக்கும் என்பது உறுதி.



தண்டபாணி துரைவேல்