Sunday, March 5, 2017

பழி



அன்புடன் ஆசிரியருக்கு

"உன் பழி இனி இக்குடியில் என்றும் தொடரட்டும்" என்கிறாள். 

ஊர்வசியைப் பிரிந்த புரூரவஸின் அதே வேதனையை மைந்தனின் பிரிவுத் துயரால் அடைகிறான் ஆயுஸ் என்ற எண்ணம் எழுந்து கொண்டிருக்கும் போதே "பத்மரே" என அவன் சொல்வது துடிக்கச் செய்துவிட்டது. அவன் புரூரவஸாக நின்று நடித்துக் கொண்டிருக்கிறானா? புரூரவஸ் யாரை நடித்தான்?

ஆயுஸை நடிப்பவர்களே புருவும் பீஷ்மரும் கர்ணனுமா? அவள் சொன்ன பழி சரடு கட்டித் தொடருவதை இன்றைய அத்தியாயம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. குருகுலத்தின் தோற்றம் வளர்ச்சி யாவும் இதற்கு முந்தைய வெண்முரசு நாவல்களில் விரிவாகவே சொல்லப்பட்டுவிட்டது. புரூரவஸும் ஆயுஸும் பல தந்தை தனையர்களை நினைவுறுத்துகின்றனர். யயாதி புருவிற்கு அளித்ததை சந்தனு பீஷ்மருக்கு அளித்ததைத் தான் திருதராஷ்டிரர் துரியனுக்கு அளிக்கிறாரா?

அக்களத்தில் நிகழும் ஒவ்வொன்றும் ஏற்கனவே நடிக்கப்பட்டு விட்டதா? 

சம்வரணன் குரு பிரசீவாணன் ஹஸ்தி என எல்லோரும் வெவ்வேறு வடிவில் இப்போது துலக்கம் பெறுகின்றனர்.

ஊர்வசி தொடங்கி இந்துமதி வழியே கங்காதேவி சுனந்தையில் நீண்டு அம்பை வழியே திரௌபதியை வந்தடையும் அணையா அழல் மற்றொரு புறம் நீள்கிறது இன்னொரு சரடு.

மிகப்பெரிய வலையில் சிக்கிய கிளர்ச்சியையும் பதற்றத்தையும் ஆயுஸின் இறப்பு அளித்துவிட்டது.

அன்புடன்

சுரேஷ் பிரதீப்