Saturday, March 18, 2017

உள்ளிருந்து உயிர் குடிக்கும் ஒட்டுண்ணி ( மாமலர் - 40)



     சில நாட்களுக்கு முன் ஒரு இணையக் காணொளி ஒன்றை கண்டேன்ஒரு பூச்சி ஒன்றின் உள்ளே ஒரு ஒட்டுண்ணி புகுந்திருக்கும். அந்தப் பூச்சியின் உள்ளிருந்தே அப்பூச்சியின் உயிர்ச்சத்துக்களை உண்டு உடல் வளர்த்துக்கொண்டிருக்கும். அந்தப் பூச்சி  உயிரோடு எப்பவும் போல் இருந்துகொண்டிருக்கும்பின்னர் ஒரு நாள் அந்த ஒட்டுண்ணி ஒரு நீண்ட புழுவாக வளர்ந்து அந்த பூச்சியின் உடலைத் துளையிட்டு வெளி  வரும்அப்போதுதான்  அந்தப் பூச்சி இறந்துபோகும்அதைப் பார்க்க சற்று மனதிடம் வேண்டும். அதைப்போன்று பல ஒட்டுண்ணிகள் இருப்பதை கீழ்வரும் தொடர்பில் காணலாம். http://www.therichest.com/rich-list/most-shocking/10-of-natures-nastiest-animal-parasites/ .   மனித உடல்களில் வாழும் ஒட்டுண்ணிகளும் இருக்கின்றனஅதன் மூலம் பலர்  உடல் பாதிப்புகளை அடைவதும் உண்டு.
  
ஆனால் நம்மை பெரிதும் பாதிப்பது நம் உள்ளத்தில் புகுந்து வாழும் ஒட்டுண்ணிகளாகும்அதில் சில, வஞ்சம், நெறிமீறிய காமம், சோம்பல் போன்றவை . இவை நம் உள்ளத்தின் வலுவை, அமைதியை, ஊக்கத்தை உண்டு வாழ்ந்து நமக்கு கேடு விளைவிப்பவைமெல்ல மெல்ல வளர்ந்து ஒருநாள் நம் உளக்கட்டுப்பாட்டை அழித்து வெளிவந்து நமக்கு சமூகத்தில் பெரிய இழப்பை, அவப்பெயரை உண்டாக்கி தருபவை.
  

தீய குணங்கள் மட்டுமல்லாமல் நம் உள்ளத்தில் ஒட்டுண்ணியாக இருந்துகொண்டு இருக்கும் மற்றொன்று குற்ற உணர்வு ஆகும்நாம் செய்யும் ஒவ்வொரு தவறும் குற்ற உணர்வை உருவாக்குகிறது. அது நம்முள் அவ்வளவு  எளிதாக அழிந்துவிடுவதில்லை. அது நம்மில் இருந்துகொண்டு உறுத்தியவண்ணம் இருக்கிறது.   குற்ற உணர்வு என்பது நல்லதுதானே என்று தோன்றலாம். அதன் காரணமாகவாவது அடுத்து அதே போன்ற குற்றத்தை செய்யாதிருக்க வழி வகுக்கும் என்பதும் சரியெனத் தோன்றுகிறது. ஆம் அது உண்மைதான். ஆனால் நீடித்திருக்கும் குற்ற உணர்வு ஒரு தொண்டையில் சிக்கிய முள்ளென உறுத்திக்கொண்டே இருக்கிறது. அப்படியே நம் ஆழ் மனதிலும் இறங்கி நாமறியாமலேயேநம் சிந்தனையில், நம் பேச்சில், நடத்தையில்,   மாறுதல்களை ஏற்படுத்துகிறது. அதில் இருந்து தப்பிக்க  அந்த தவறுக்கு தகுந்த நபரிடம் மன்னிப்பு கேட்டு அதற்கான  பிராயச்சித்தம் செய்ய வேண்டும்பாவ மன்னிப்பு கேட்பது பரலோகத்திற்கு செல்வதற்கான முக்கியக் கடமையாக  மதங்கள் வைத்திருக்கின்றன. பரலோகத்தைப்பற்றி நமக்கு அவ்வளவாகத் தெரியாதுஆனால் நம் அகலோகம் நலமாக அமைதியாக எவ்வித உறுத்தலுமின்றி இருக்க  குற்ற உணர்வுகளிலிருந்து விடுபடுவது மிக இன்றியமையாததாக இருக்கிறது.    அப்படி  தகுந்த பிராயசித்தம் செய்து அந்த உறுத்தலில் இருந்து விடுபடவில்லை என்றால் அது மனதுக்கு நிம்மதியின்மையை தருகிறது.   ஒரு சிலர் அது ஒன்றும் தவறல்ல என்பதாக தனக்குத் தானே கூறிக்கொண்டு, அந்தத் தவறை  மேலும் தொடர ஆரம்பிக்கின்றனர். ஒரு சிலரை  தம்மைத்  தாமே தாழ்வாகக்  கருத வைக்கிறது. அதன்காரணமாக நம் உளநிலையில் சிக்கல் பிறக்கிறது. அந்தச் சிக்கல் சிலருக்கு ஒரு மன நோயாக மாறிவிடுகிறது.
  

விபுலை, வித்யுதை இருவரும் ஒரு குழந்தையை தாம் கொல்லவில்லை என்று வெளியில் சொல்லிக்கொள்ளலாம். ஆனால் அவர்கள் உள்ளம் அறியும் ஒரு குழந்தை கொல்லப்படுவது தங்கள் மூலமாக  நடைபெற்றது, மேலும் அந்தக் கொடுஞ்செயலுக்கு எதிராக தாம் ஒரு சொல்லைக்கூட எழுப்பவில்லை என்பது. குழந்தைப்பேறற்ற  அவர்கள் உள்ளத்தில் அந்தக் குற்ற உணர்வு மிக ஆழப் பதிந்திருக்கும். அது அவர்கள் ஆழ்மனதில் அழியாது இருந்துகொண்டே இருக்கிறது. அதன் காரணமாக அவர்கள் இருவரும் உளப்பிறழ்வுகொல்கிறார்கள். அந்த குற்ற உணர்வு  ஒரு ஒட்டுண்ணிபோல வளர்ந்து அவர்கள் சிந்தையை அரித்து அவர்கள் உள்ளத்தை சேதப்படுத்தி பின்னர் அவர்களையும் கொன்றுவிடுகிறதுஒரு புராணக் கதையென இருக்க வேண்டிய ஒன்றை , உளவியல் கூறுகளை அற்புதமாக  வெளிப்படுத்தும் கட்டுரையாக வெண்முரசு விரித்துரைக்கிறது
தண்டபாணி துரைவேல்