Saturday, October 13, 2018

இரண்டாவது தாழ்ச்சி



இனிய ஜெயம் 

ஏன் பால்கிகரை கண்டதும் பீஷ்மரின் வில் தாழ்ந்தது ? பொதுவாக புனைவில்  சில மர்ம தருணங்களை ,அந்த மர்மத்தின் ஆழம் எவ்வகையில் என் ஆழுள்ளத்தை தைக்கிறதோ அவ்வகையிலேயே அதை நீடிக்கட்டும் என விட்டுவிடுவேன் .  புனைவு என்பது விடுகதை போட்டு விடை கண்டு பிடிக்கும் விளையாட்டா என்ன ?

இருப்பினும் சுதசோமன் பார்வையில் நின்று நோக்கினால் இது எத்தகையதொரு புதிர் ? அவனுக்கு இங்கே களம் படுவது கூட ஒரு பொருட்டாக இருக்காது ,இந்த ஏன் எனும் மர்மத்துக்கு வெளிச்சம் கிடைப்பது முன் களம் படுவது அவனுக்கு ஒரு பொருட்டாகவே இருக்காது .

முதல் கனல் நாவலில் பால்கிகர் சிகண்டி வசம் சொல்வார் 

ஆடியின் ஆழம் கண்டவன் செயல்கள் நின்றுவிடும் .

ஆம் அக்கணம் பீஷ்மர் ஆடியின் ஆழத்தை கண்ட கணம்    .ஆடியின் ஆழத்தில் என்ன தெரியும் ? அதைத்தான் அன்று பீஷ்மரை வென்று மீண்ட கணம் முதல் இருபது ஆண்டுகளாக குகைக்குள் கிடந்தது பால்கிகர் பார்த்துக் கொண்டிருக்கிறார் .அன்று அவர் ஆடியின் ஆழத்தில் காணும் பீமன் அன்று பிறக்கவே இல்லை .  நூறு முறை பிரதிபலிக்கப்பட்ட பால்கிகர் ,பீமனாக பீஷ்மராக ....
....
அன்று இதே குருஷேத்திர நிலத்தில்தான் பால்கிகரும் பீஷ்மரும் துவந்த யுத்தம் செய்கிறார்கள் . பால்கிகரின் விழிகளின் ஆழத்துக்குள் விழுந்த அக் கணம் பீஷ்மர் வீழ்கிறார் .

பீஷ்மர் விழி திருப்பி வில் தாழ்த்துவதன்றி வேறு என்ன செய்வார் ? இன்று களத்தில் ருத்ரமூர்த்தியாக பீஷ்மர் விஸ்வரூபம் கொண்டு தருக்கி நிற்கலாம் ...எல்லாம் பால்கிகர் விட்டு சென்ற எச்சம் . அன்றே துவந்த யுத்த நெறியின் படி தோற்ற பீஷ்மரை பால்கிகர் கொன்றிருக்க வேண்டும் .  அவர்  இட்ட எச்சம்தான் இன்றைய பீஷ்மர் .

சரிதான் அன்று பால்கிகர் ஏன் பீஷ்மரை கொல்லவில்லை  ? பீஷ்மர் எதனால் பீமனை கொல்லவில்லையோ அதே காரணம் கொண்டுதான் .  சூழச்சூழ பெருகி நிற்கும் அடிகளின் இடையே சிக்கிய பிம்பங்கள் பீஷ்மரும் பீமனும் பால்கிகரும் .

ஆடியின் ஆழம் அறிந்தவன் செயல்கள் நின்று விடுகின்றன . அனைத்தும் கேலிக் கூத்து என்றாகி விடும் .  அன்று பால்கிகர் சொன்னது : )

கடலூர் சீனு