Monday, October 22, 2018

போரின் முகம்



இப்படி போரின் அனைத்து முகங்களும் தெரிய எழுத்து படிப்பது புதிதாக ஆக உள்ளது. ஒரு பக்கம் போரின் அனைத்து logistics பகுதிகள் ஒவ்வொரு நாட்களின் மருத்துவ அழுத்தங்கள், இறப்புகளின் எரிப்புகள், வெற்றி தோல்வி கண்ட இருபக்கமும் குவியும் இறப்புகள் அவற்றின் வலிகள், சோர்வுகள், மீண்டும் எழுந்து ஒடும் விசைகள், எவ்வளவு யோசித்தாலும் மனதில் ஓட்டி பார்க்க முடியா விற்களின் அம்புகளின் வேகம், எந்த முகவரியும் இன்றி சாகும் ஆயிரம் ஆயிரம் பெயர் தெரியா வீரர்கள் வாழ்வு. முட்டி முட்டி ஊழின் நாயகர்களுக்கு தோதாக முடியும் அவர்களின் அந்த அந்த நாளின் நீட்சிகள் – மேலும் ஒரு நாள் போரிட்டு வாழ..... ஒவ்வொரு நாளும் மரணங்களும் காயங்களும் படித்து முடிக்கும் போது கையில் பிசுபிசுப்பு, கவிச்சி வாடை. இப்படி அணுஅணுவாக, விரிவாக, மனம் மாறும் துல்லியத்தை, அசெளனிகளின் பிரமாண்டத்தை , படைகளின், நாளின் தொடக்கத்தை, நாள் நகரும் திசையை, முடிவைவேறு எந்த கலை வடிவத்திலும் கொணர்தல் மிக கஷ்டம். திரைபடம் எடுத்தால் கூட.. எழுத்தால் மட்டுமே விரியும் உலகம்.
வதையாகி போகின்றன படிக்கையில். எப்படித்தான் இவ்வளவு வருடங்களின் உருவாக்கங்களை கொன்று சென்றபடி செல்கிறீர்களோ? பேப்பரி எழுதி வைத்துகொண்டு டிக் அடித்து கொண்டே சென்றால் கூட அனைவரையும் தினமும் குறைத்து கொண்டு வருவது சரியான எமதர்ம வேலை.
ஆமாம். எங்கே போனார்கள் பாடி வீட்டில் தங்கியாதாக சொன்ன திரெளபதியும் குந்தி தேவியும்? சஞ்சயனை கொண்டு போர் வர்ணனை கேட்டு இருந்த திருதாஷ்டிரர், முதல் எட்டு மகன்களை மடிந்த கதை கேட்டு வஞ்சத்தை வெளியே வடியவிடவில்லையா? அங்கே பெற்ற அன்னை காந்தாரி வரை செய்தி செல்கிறதா? 
வெறுப்பும் துயரும் தனிமையும் கசப்பும் வருகிறது இம்முடிவின் ஒவ்வொரு துளியை இப்படி  அருகில் இருந்து பார்கையில். என்றும் மாறாத ரத்தத்தின் நிறம் கண்டும், காலத்தின் ஊழின் முன் ஒன்றும் செய்ய இயலா கையாலாகத தன்மை பார்த்தபடியும் இந்த போரின் நாட்கள்.
லிங்கராஜ்