Sunday, October 7, 2018

செல்திசை



அன்புநிறை ஜெ,

நலமாக இருக்கிறீர்களா. ஒரு மாதம் முன்பே எழுதத் தொடங்கிய கடிதம். பின்தொடரும் நிழலின் குரலும் திசைதேர் வெள்ளமும் என இரு நிகர் பாதைகளில் பயணித்துச் செல்ல எல்லைகள் அழிந்து இரு நூலும் பெரும்பாலும் ஒற்றைப் புள்ளியில் சந்தித்துக்கொண்டது.  பெருங்கனவுகளின் வீழ்ச்சி தரும் வியர்த்தமும் ஆயாசமும் , ஆற்றாது அழுத கண்ணீரின் தகிப்பும், எது நிகழினும், 'போர் புரிக,செயலாற்றுக' என விதிக்கப்பட்ட மானுடனின் வாழ்வும் என வாசிக்க இன்னும் மனதின் கொந்தளிப்பு அடங்கவில்லை.

இந்த பத்தொன்பதாவது நாவலின் பெயர் திசைதேர் வெள்ளம் என்றும் பீஷ்மரின் வீழ்ச்சிவரை இருக்கும் என்ற பதிவைப் பார்த்ததுமே மனது வெள்ளம் குறித்த, பேரழிவு குறித்த சித்திரங்களைப் பற்றிக் கொண்டுவிட்டது. கேரள வெள்ளம் குறித்த செய்திகளும் காட்சிகளும் வேறு. அத்தனை வேலைகளுக்கும் அடியில் அச்சொல் அடிநாதமாக ஓடிக் கொண்டுமிருந்தது.

நதி தனக்கான செல்திசையைத் தானே வகுத்துக்கொள்வது, அதன்படி தானே வகுத்த கரைகளுள் பெரும்பான்மையும் ஒழுகுவது. பெருவெள்ளமோ வகுத்த கரைகளை உடைத்து மீறுவது, தன்விசையாலேயே மேலும் மேலுமென விசைகூட்டி தடைகளைத் தகர்த்து பாதை இதுவென நதியைத் தடம்புரட்டி புது திசை கண்டடைவது. இப்போர் வரை தான் வகுத்த நெறிகளுள் வாழ்ந்த பீஷ்மர் தேரும் திசையும் அவர் நிகழ்த்தும் ஊழியொத்த அழிவுகளும் என எண்ணிக் கொண்டேன்.

இன்றைய வெம்போரின் ஊற்றுக்கண் முதற்கனல் தொடங்கி, அல்லது தேவயானி சர்மிஷ்டை தொடங்கி, அல்லது கத்ரு வினதை தொடங்கி, எங்கிருந்தோ துளிர்த்த முதலிரு முரண் விசைகள் இன்று பேருருக் கொண்டு களம் காண்கின்றன. ஒவ்வொரு இரவும் பொருதும் எண்ணிறந்த தெய்வங்களின் கனவுகளுள் பாண்டவரும் கௌரவரும் மோதும் களம் ஒரு கனவென நிகழ்கிறது போலும்.


தழலை அன்னையெனத் தஞ்சம் புகுந்த உசகன் சந்தனுவெனப் பிறந்து நீரை விழைந்து கங்கையை மணக்கிறான். அவள் நீர் உருக்கொண்ட எரி. நீரின் மைந்தனை நெருப்பின் மகளன்றி யார் அணையக் கூடும். தாட்சாயணியென இருபுறமும் துறக்கப்பட்டவளின் தழலுக்கு அடியில் அவனைக் குளிர்விக்கும் ஈரமென அம்பை தன் கண்ணீரோடு காத்திருக்கிறாள்.

இளமையில் வில்லின் வல்லமையால் கங்கையை அணையிட முயன்றவன் இன்று அதே வில் கொண்டு நெருப்பைத் தணிக்க முயல்கிறான்.  

தன்விசையே செல்திசையெனக் கொண்டு கட்டுடைத்து செருகளத்தில் பெருக்கெடுத்தோடும் நதி தான் வகுப்பதே பாதையென மயங்கும் கரைகாணா தருணங்கள் இப்போது நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. ஊழிப்பெருவெள்ளமும்  சென்றடைந்தாக வேண்டிய பெருநீலத்தில், தன்கால் சுவைக்கும் குழந்தை காத்திருக்கிறது; எத்திசை தேர்ந்தாலும் கடலணையும் வழியை எந்நதியும் தவறவிடுவதில்லை எனப் பொங்கி வரும் நீரைக்கண்டு சிரிக்கிறது.

மிக்க அன்புடன்,
சுபா