Saturday, October 20, 2018

சாத்யகி கொள்ளும் உணர்ச்சிநிலைகள்




அன்புள்ள ஜெ

அசங்கனின் இறப்புக்குப்பின் சாத்யகி கொள்ளும் வெவ்வேறு உணர்ச்சிநிலைகள், தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும் அவனுடைய உச்சங்கள் ஆச்சரியப்படுத்துகின்றன. அதற்கு எந்த லாஜிக்கும் இல்லை. ஆனால் அப்படித்தான் என்பதை நம்பமுடிகிறது. கடமையைச்செய்ய மீண்டும் அவன் போருக்குச் செல்கிறான். அங்கே மேலும் மேலும் வெறிகொண்டு போர் செய்கிறான். ஆனால் உண்மையில் அவன் சாகத்தான் விரும்புகிறான். சாகத்துணிந்தமையாலேயே அவனுக்கு மிகப்பெரிய விடுதலை கிடைக்கிறது. அவன் அங்கே சிரித்துக்கொண்டாடி போர் செய்வதும் அவன் முகத்தில் இருக்கும் களியாட்டமும் நினைத்தால் மெய்சிலிர்ப்பு அடையவைக்கின்றன. அந்தக்காட்சிகள் வழியாகவே மனம் சென்றுகொண்டிருக்கிறது. அவன் தன் மகனின் கவசத்தைக் கண்டதும் அப்படியே அறுந்து மண்ணில் வீழ்ந்துவிடுகிறான். ஓர் அலைபோல துக்கம் வந்து தாக்குகிறது. சாவுத்துக்கத்தை அறிந்தவர்களுக்கு அது தெரியும். சாவுபற்றிய ஞாபகம் ஒரு அலைமாதிரித்தான் வந்து அடித்து தூக்கிக் கொண்டுசெல்லும். கொஞ்சம் விலகி ஆறுதல் வரும். அப்போது நாம் கற்பனைகளிலே திளைப்போம். தூக்கம் வரும். ஆனால் அடுத்த அலை வந்து அறையும். சாத்யகி அந்த அலைகளில் கிடந்து அலைமோதுகிறான். அந்த கொந்தளிப்பை என்னால் மிகவும் நுணுக்கமாகப்புரிந்துகொள்ள முடிகிறது

எஸ்.கோவிந்தராஜன்