Wednesday, October 24, 2018

சாத்யகி



ஜெ, முதல் முறையாக அசங்கனின் மரணத்தின் போது இளைய யாதவரை வெறுத்தேன். சாத்யகி கிருஷ்ணனை நோக்கி அம்பை தொடுத்த போது நான் உள்ளூற ஒரு அமைதியை உணர்ந்தேன். உண்மையில் அதை முதல் நாளே கற்பனை செய்திருந்தேன் என அது நிகழ்ந்த போதே உணர்ந்தேன். ஆனால் கிருஷ்ணன் அவன் பிள்ளைகளை போருக்கு அழைத்து வரச் சொல்லவில்லை. 

ஆனால், இங்கு நிகழும் அனைத்துக்கும் கிருஷ்ணனே கூட ஒரு நிமித்தம்தான், இங்கு அனைவரும் வந்து சேர அவரவருக்கு ஒரு தனிக்காரணமும், பொது ஊழும் இருக்கிறது. அப்படியெனில் ஏன் அனைவரும் கிருஷ்ணனையே காரணமாகக் கருதுகிறோம்? 

அபிமன்யூவோ பிற பாண்டவர்களோ களம்படுவதில் ஒன்றுமில்லை. அவர்கள் பயிற்சி பெற்றவர்கள். வென்றால் எதையேனும் அடையக் கூடியவர்கள். சாத்யகியின் பிள்ளைகள் தந்தையின் சொல்லுக்காக நின்று இறக்கிறார்கள். இங்கு நிகழும் எதிலும் அவர்களுக்கு எந்த பெறுபலன்களும் இல்லை. போர்க்களத்தில் சினி ஆடை நுனியை சரி செய்து கொண்டே இருப்பது துயரமான சித்திரமாக இருந்தது. ஆனால் எங்கும் போரில் அதிகம் அழிவது அதில் சம்பந்தமே இல்லாத சிறு பிள்ளைகள்தான். Alan Kurdi - யின் புகைப்படம் நினைவுக்கு வந்தது. 

அது உருவாக்கும் நிலைகுலைவால் தற்கொலை செய்து கொள்ளவே சாத்யகி பூரிசிரவஸிடம் சென்று நிற்கின்றான். அது நிகழாத போது கிருஷ்ணனை கொல்ல முனைகிறான். ஏனெனில், இங்கு கொலைப்படும் அனைவரும் அவனே எனில், அவனைக் கொல்வதே நம் ஒவ்வொருவருடைய தற்கொலையும் ஆகும். சினி இறக்கும் போது உள்ளூற நாம் நம்மை தண்டித்துக் கொள்ள விழைகிறோம், அது கிருஷ்ணனை கொல்வதால்தான் சாத்தியம். கம்சனும் சிசுபாலனும் அவனுடைய ஒரு பகுதியாக ஆவதைப் போலவேதான் அவனைக் கொல்வதால் நாம் இறப்பதும்.   



ஏ வி.மணிகண்டன்