Sunday, October 4, 2015

எண்ணங்களை கடத்தல்



கதைகளின் வழியாக சுபகை உலூபியாகின்றாள். அதே கதையின் வழியாக சுஜயன் அர்ஜுனன் ஆகமுடியவில்லை, ஆகியிருந்தால் எப்படி இருக்கும். அது ஒரு வளர்ச்சி, குரோதத்தை தாண்டிச்செல்ல வழி செய்து இருக்கும் ஆனால் தாண்டிச்செல்லமுடியாததால் குரோதத்தில் விழுகின்றான்.  சுஜயன் சுபகையுடன் உள்மனத்தொடர்புக்கொண்டு உள்ளான் ஆனால் தன்னுடன் வெளிமனத்தொடர்பில் இருக்கிறான். அந்த இருமனங்கள் இடையில் உள்ள சுவரை அழிக்கும்வரை அவன் ஒரு குழந்தை மட்டும்.  

கதையின் வழியாக சுபகை உள்மனம் உலூபியாவதை அவன் உள்மனம் எளிதில் அறிகின்றது.  துயிலும்போதும் அவன் உள்மனத்தில் சுபகையுடன் மிக நெருக்கமாக உள்ளான். சுபகையை முழுவதும் உடல் என்று வகுத்து வைத்து உள்ளது அவன் உள்மனம். தன்னையும் உடலாக மட்டுமே தொடர்புப்படுத்தி வைத்து உள்ளான். மனமாக உணர்ந்தாள், சுபகை உலூபியாகும் அந்த கணத்தில் இவன் எடுக்கும் உடல் என்னவாக இருக்கும்? கேள்வித்தேவை இல்லை இங்கு. அது முடியாதபோது அர்ஜுனன் இடம் குரோதம் கொள்ளவே செய்கிறது. அவன் ஏழாம் உலகத்திலேயே நிற்கிறான். சுபகை உலூபியாய் தன்னை உணர்ந்து அதன் இன்பத்தை நுகர்கின்றாள். காமம், பேராசை  என்ற உலகங்களில் அவள் நீந்துகின்றாள். 

கதைகளின் வழியாக மாலனி உள்மனத்தையும் தாண்டிச்செல்கிறாள். குரோதம் இல்லை, காமம் இல்லை, பேராசை இல்லை, அதையும் தாண்டி அர்ஜுனன் எடுக்கும் ஆண் பெண் உடல்புனைவுகளில் கனிந்து, அர்ஜுனன் செய்யும் சித்துக்களில் திளைத்து அர்ஜுனனை அர்ஜுனனாக மட்டும் காண்கிறாள். அவளால் எளிதில் அடுத்தக்கதைக்கு செல்லமுடிகிறது. இந்த இடத்தில் வைத்து சுஜயன், சுபகை, மாலினி மூவரையும் பார்த்தால் அவர்களின் மனம் எந்த எந்த உலகத்தில் இயங்குகின்றது என்பது தெரிகிறது. அவர்களின் மனம் இயங்கும் தன்மைக்கு ஏற்ப அவர்கள் உடல் உள்ளம்படும்பாடு விளங்குகின்றது. தனது நிர்வாணத்தை சுஜயன் பார்த்தான் என்ற தவிப்பு சுபகை இடம். அவள் அர்ஜுனன் உடன் நிர்வாணமாக இருந்தாள் என்ற  கோபம் சுஜயன் இடம். வேடிக்கை மாலினி இடம்.

ஒரு எண்ணத்தில் நாம் நம்மை எப்படி கட்டிவைத்து உள்ளோமோ அதையே வாழ்க்கையின் அந்த கணத்தில் பிரதிபளிக்கின்றோம். ஒவ்வொரு எண்ணத்தையும் கண்டு அது எந்த இடத்தில் உள்ளது என்ற நிலையை தெளிந்து கடந்துச்செல்லும்போது வாழ்க்கை ஒரு கதை மட்டும். எண்ணங்களில் மூழ்குபவன் சுஜயன் ஆகிறான். எண்ணங்களில் நீந்துபவள் சுபகையாகிறாள். எண்ணங்களை காண்பவள் மாலினியாகிறாள்.
ஒரு கதை, ஒரே கணம் ஆனால் மூன்று வாழக்கை.  மனதில் அந்த கதை,அ அதனால் உருவாகும் எண்ணம் துன்பப்படுத்துகிறதா? இன்பம் கொள்ளவைக்கிறதா? தாண்டிச்செல்லவைக்கிறதா? என்பதை மூன்று பாத்திரங்களும் வாழ்ந்துக்காட்டுகின்றன.

மேலே காட்டும் மூன்று எண்ணங்களின் உலகவாழ்க்கையை மனிதர்கள் எளிதில் அடைந்துவிடமுடியும். சிறு சிறு முயற்சியே அதற்குபோதும். ஆனால், அர்ஜுனன் மனம் செல்லும் உயரம் மிகபெரியது “தனிமையில் பிறரை எண்ணி ஏங்காதிருக்கவும் பிறருடன் இருக்கையில் உள்ளத்தில் தனிமை கொள்ளாதிருக்கவும் பயின்றதே அவன் கற்ற கலைகளின் உச்சம் எனப்படுகிறது.”-காண்டீபம்-18. இந்த இடத்தை அடைவது என்பது தவத்தால் அன்றி வேறு எதாலும் அமைவதில்லை. தன்னை கர்மயோகியாக ஆக்கிக்கொள்பவனுக்கே இது சாத்தியம்.

ஏழு உலகம் தாண்டி மனிதன் பயணிப்பது இந்த மனமற்ற நிலையில் நிற்கத்தான். எண்ணங்களை கடப்பவனுக்கு இது வாய்க்கிறது. கர்மயோகி எண்ணத்தை நீந்தி கடக்கிறான். ஞானயோகி எண்ணத்தின் ஊற்றிலேயே காலைவைத்து அமுக்குகிறான். 

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.

கதையின் தேவதை

அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

பக்கத்துவீட்டு அக்கா “இந்த கதையை படிச்சி இருக்கிறயா” என்று அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் கொடுத்தார். பொன்னியின் செல்வனை கையில்தொடுவதே அதுதான் முதல்முறை.  முழுவதையும் படித்து முடித்தப்பின்பு “நான் நானில்லை“ என்று உணர்ந்தேன்.

காட்டுமன்னார்குடிக்கு அருகில் உள்ள வயலில் இருந்து வைக்கோல் ஏற்றிச்செல்லும் வைக்கோல்வண்டியின் மேல் ஏறிபடுத்துக்கொண்டு வடலூர் அருகில் உள்ள வீட்டுக்கு வீராணம் ஏரிக்கரையில் பயணிக்கின்றேன். அப்பாவும், மாமாவும் வண்டிக்கு பின்னால் நடந்துவருகிறார்கள். வானத்தில் பாதிநிலா, இடதுகைப்புறம், குளிரை அலைகரங்களில் அள்ளி அள்ளிவந்து கொட்டிப்போகும் வீரணம், வலப்புறம் மரங்கள் ஊர்கள் கோயில்கள் என வானத்தில் மிதுந்துவரும் நிழல்களாய் இருக்கும் நிஜங்கள். நான் வைக்கோல் வண்டிமீதா பயணிக்கின்றேன்?, ஆயிரம் ஆண்டுக்கு முன்னால் வந்தியதேவன் பயணித்த குதிரையின்மீது பயணிக்கிறேன்.

கதைதேவதை எத்தனை பெரியவள், இனிமையானவள் என்பதை அன்று அறிந்தேன். எத்தனையோ முறை பொன்னியின் செல்வன் படித்துவிட்டேன். எத்தனையோ முறை வீரணம் கரையில் பயணித்துவிட்டேன். ஒருமாலைப்பொழுதில் அலையடிக்கும் வீராணத்தைப்பார்த்தப்படி உட்கார்ந்து பொன்னியின்செல்வன் படிக்கும் ஆசைமட்டும் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. அது ஒரு உலகம், மாபெரும் உலகம், நான் இருக்கும் இந்த சின்னஞ்சிறு முட்டை உலகத்தை உடைத்துக்கொண்டு அங்கு போக இந்த உலகம் விடுவதில்லை. இந்த சின்ன முட்டை உலகத்தில் இன்னும் இன்னும் என்று நெருக்கி நெருக்கி அழுத்தி வைக்கப்படும் இச்சைகளின் வாழ்க்கையியன் பருப்பொருள்களால் மறைந்து நான்  எங்கு இருக்கிறேன் என்று என்னாலும் என்னைக் காணமுடியாது.

எத்தனை எத்தனை இடநெருக்கடியில் இருந்தால் என்ன?  எவ்வளவு ஆழத்தில் கிடந்தால் என்ன? எனது சின்னஞ்சிறு உலகின் முட்டையின்தோல் எந்த எஃகால் வடிக்கப்பட்டு இருந்தால் என்ன? கதைகளின் தேவதை தனது உலகுக்கு நொடியில் வெண்பட்டு சிறிகில் ஏற்றிக்கொண்டுச்சென்றுவிடுகிறாள்.

சில ஆண்டுக்கு முன்னால் ஒருநாள் பைக்கில் ரங்கம்மாள் உடல் வீராணம் ஏரியில் பறந்துக்கொண்டு இருந்தபோது “என்ன பேச்சையே காணும், எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்” என்றாள்.

”ஆயிரம் ஆண்டுக்கு முன்னால் பயணித்த உலகில்”  

 ”யார்கூட”

“இம்” என்று சற்றே கழுத்தை திரும்பினேன். தோளைப்ற்றி கழுத்தை நீட்டி முகம்காட்டி சிரிக்கிறாள் என்குந்தவைதேவி.  வீரணம் ஏரிக்கரையில் எங்களை சுமந்து ஓடிக்கொண்டு இருக்கிறது இரும்புக்குதிரை.

இப்பொழுது எல்லாம் கங்கைகரையில் உட்கார்ந்து பிரயாகைப்படிக்கவேண்டும் என்று ஆசை வருகிறது. வெண்முரசுப்படித்தப்பின்பு வீரணம் சுண்டுவிரல் முனையில் முத்தாகி நிற்கிறது.  நான் அங்கு பெண்ணாகி உலவுகின்றேன். கந்தனே கண்ணனாய், கண்ணனே கந்தனாய். 

பெரியது கேட்கும் முருகபெருமானிடம் தொண்டர் உள்ளம் என்று அன்னை ஓளவை சொல்வார். கதைகளின் தெய்வமாகிய புராணிகை பெரியவள்தான். அவளைவிடவும் பெரியது கதைகேட்கும் இதயங்கள்தான் என்று இன்று உணர்கின்றேன்.

புராணிகையின் வயிற்றில் தோன்றியவன் பிரம்மன், கனிந்த முலைகளில் தோன்றியவன் விஷ்ணு, கண்களில் தோன்றியவன் சிவன் என்று  சொல்லும் இடத்தில் புடவியாகி நிற்கும் கதையின்  பிரபஞ்சவடிவத்தைக் கண்டேன்டேன். கதையே மாயை, கதையே பரபிரம்மம். அவளே சக்தி, அவளே சிவம், அவளே உருவம், அவளே அருவம். அவள் உள்ளும் புறமும் இருக்கிறாள்.
காலம் காலமாய் கேட்டுவரும் கதையின் உடலை, உயிரை, ஆன்மாவை  அதன் விஸ்வரூபதரிசனத்தை இன்று கண்டேன்.  நன்றி ஜெ.

சுஜயன் சுபகையை உலூபியாகக்கண்டதுபோல், கதைகளின் வழியாக நாம் கதையைக்காணவில்லை, வாழ்க்கையை காண்கின்றோம். கதைகள் குரோதத்தை ஏற்படுத்துவதுபோல் எதிரிக்கூட ஏற்படுத்துவதில்லை. அந்த குரோதமே ஏழாம்  உலகத்தை உருவாக்குகிறது. அந்த ஏழாம் உலகத்தை தாண்டி காமத்தில், பேராகையில், அன்பில், மெய்யறிதலில், அறிதலுக்கு அப்பால் உள்ள மெய்மையில் கதைத்தேவதைத்தள்ளிவிடுகின்றாள். கதை தேவதை ஏழு உலகத்தையும் காட்டி ஏழு உலகத்திற்கும் அழைத்துக்செல்லும் இறைவியாவாள்.  

கதை தேவதையை அறியந்தவருக்கு ஏழு உலகம் இருக்கிறது. அவர்கள் மட்டும் அந்த அந்த கணத்தில் அவர்களின் உலகத்தில் இருக்கிறார்கள்.  .கதையை அறியாதவருக்கு ஏழு உலகம் இல்லை என்பது அப்புறம், அவர்கள் இருக்கும் உலகம்கூட அவர்களது இல்லை. 


அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.

Saturday, October 3, 2015

அரவான்

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,
வணக்கம்.
இன்றைய 'காண்டீபத்தில்' அவன் பெயர் அரவான் என்று படித்தபோது உண்மையில் அரவம் தீண்டியது போல்தான் இருந்தது.அரவானுக்கு தங்கள்
வெண் முரசில் கிடைத்தது போன்ற அறிமுகம்!! ("Super Entry "!!) வேறு யாருக்கும் கிடைக்கவில்லை என உறுதிபட கூறலாம்.அதற்கு முன் பகுதியில் எழுதி இருப்பதை எல்லாம் படித்து படித்து மாய்ந்து போய்கிறேன்.

"“நாகம் இரண்டின்மை. இரண்டுமானது. அதன் வால் ஆண்மை, சிவக்கத்திறந்த வாயோ பெண்மை. தன் வாலை தான் விழுங்கி தன்னுள் முழுமை கொள்கிறது. முற்றுச் சுழல். சுழிமைய வெறுமை. உண்டு தீரா விருந்து. தன்னை உண்பதைப்போல் தீராச் சுவை என்ன? தன்னுள் தான் நுழைந்து நிறைக்கும் வெளி என்ன? தன்னுள் நிறையும் வெளியை தானன்றி எது நிறைக்க ஒண்ணும்?”
இவனை  மகாபாரதப்போர் ஆரம்பத்தில் 'களப்பலி' ஆக்கப்  போகிறீர்களா அல்லது இவனையும்  சில நாள் யுத்தத்தில் பங்கு கொள்ள செய்ய போகிறீர்களா என்பதை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.
அன்புடன்,
அ .சேஷகிரி.

காமத்தில் பிணைந்து கொள்ளும் நாகங்கள்:


   கடவுள் தான் படைத்த உயிரினங்களுக்கு கொடுத்துள்ள பெரும் பரிசுகளில் முதன்மையானது காம இன்பம். காமத்தை பல்வேறு வகைகளில் உயிரினங்கள் அனுபவிக்கின்றன. பூக்களை மலரவைத்து மகரந்தத்தை கொணர்ந்து  சேர்க்கும் வண்டுக்களின் மூலம் உறவு கொள்ளும் தாவரங்கள் அப்போது இன்பத்தை நுகர வில்லை என நாம் சொல்ல முடியுமா? விலங்கினங்கள், தாவரங்களுக்கு இல்லாத,  தம் புலன்களின் மூலம் காமத்தை இன்னும் பெரிதாக அனுபவிக்கின்றன. பார்த்து கேட்டு முகர்ந்து சுவைத்து என அவை ஈடுபடுவது  எல்லாம் காமத்தின் முன் விளையாடல்களுக்கு மட்டுமே. காம நுகர்வின் போதான உச்ச  இன்பம் தொடுகை உணர்வின்  வழியே மட்டுமே அனுபவிக்கப்படுகிறது.


  புணர்வின்போது தொடுகையின் இன்பம் என்பது கிட்டத்தட்ட அனைத்து விலங்கினங்களுக்கும் தங்கள் பிறப்புறுப்பில் மட்டுமே நிகழ்கின்றது. பெரிய யானையாக இருந்தாலும்  சிறு சுண்டெலியாக இருந்தாலும் அப்படித்தான் இருக்கிறது. அணைத்தல் என்பதுகூட இல்லை. அதுவும் பெண் விலங்குகள் ஆணை அப்போது வேறு இடங்களில் தொடுகிறதா எனக்கூட தெரியவில்லை. பெரும்பாலும் பெண் விலங்குகள் வன்புணர்வு செய்யப்பட்டவை போன்றே காட்டிக்கொள்கின்றன.


   ஆனால் அதற்கு முற்றிலும் விதிவிலக்கானது நாகங்களின் கூடல். அவை தன்காமத்தை முழுதுடலிலும் அடைகின்றன. ஆயிரம் கால் பூச்சிகளில் நிகழ்வது போன்றது அல்ல அது. ஒரு பூச்சியின் மேல் ஒரு பூச்சி அமர்ந்திருக்கும் என்றாலும் அது தழுவல் இல்லை. கீழிருக்கும் பெண்பூச்சி ஆண்பூச்சியை அணைக்கிறதா என்ன? ஆனால் நாகம் தன் முழுதுடலாலும் தன் இணையை தழுவிக்கொள்கிறது. தன் முழுதுடலையும் தன் இணையுடலுடன் ஐக்கியப்படுத்திகொள்ள வேண்டும் என்ற பேராவலை அவற்றின் பிணைவில் காண்கிறோம். தன் முழு உடலிலும் காமத்தை விரித்து அனுபவிக்கின்றன. காம நுகர்வில் அதிகபட்ச தொடுகை நாகங்களுக்கிடையேதான் நடைபெறுகிறது. 


   மனிதன் குரங்கிலிருந்து வந்தவன். குரங்குகள் கட்டித்தழுவவதில்லை. ஆனால் மனிதன் சிந்தனைத் திறன் கொண்டவன். அவன் தன் இன்பங்களை பெருக்கிக்கொள்பவன்.  விதவிதமான வண்ண ஒளிகளின் மூலம் தன் காட்சி இன்பத்தையும், பல்வேறு இசைகளை உருவாக்கி செவி இன்பத்தையும்,  உணவுகளில் பலவித சுவைகளை சேர்ந்த்து நாவின்பத்தையும் பெருக்கிக்கொண்டான்.  அவனுக்கு அதிகபட்ச இன்பத்தை தரும் காம இன்பத்தை பெருக்காமல் விடுவானா? காம முன்விளையாடல்களில் அவன் இன்பத்தை பலவாறு அடைந்தாலும், இறுதியாக இணையுடன் கூடுகையில் அவன் வெறும் உடலாக தொடுகை உணர்வோடு மட்டும் நிற்கிறான்.   அப்போது அவன் தழுவுதல் என்பதன் மூலம் தொடுகை இன்பத்தை பெருக்கிக்கொள்கிறான். அப்போது அவன் மற்ற விலங்குகள் போல் இல்லாமல் தன் தொடுகை இன்பத்தை பிறப்புறுப்பு மட்டும் என்பதல்லாமல் உடல் முழுதுமாக உணர்கிறான். பிறப்புறுப்பில் அவ்வின்பம் இறுதியில் குவிகிறது.


   இன்று வெண்முரசில்,  தழுவுதலில் நாகங்களை நினைவு கூர்ந்திருப்பது நான் புதிதாய் அறிந்தது என்றாலும்  படித்தபின் அதன் பொருத்தத்தை உடன் உணர்ந்துகொண்டேன். தழுவுதலின் இன்பத்தை மனிதனை விட அறிந்த ஒரே விலங்கினம் பாம்பு அல்லவா? கூடுகையில் மனிதன் இரு கைகள் இரு கால்கள், எஞ்சியுள்ள தலை அமைந்த உடல் என ஐந்து நாகங்களாக எழுந்து இணையின் உடலில் எழும் அவ்வாறான  ஐந்து நாகங்களை ஒன்றை ஒன்று தழுவி பிணைந்து காணும் தொடுகை இன்பம் மிகப்பெரிது. அதனால்தான் மற்ற விலங்குகளைப்போல் அல்லாமல் மனிதன் தன் இணையுடன்  கூடி முயங்க, குறிப்பிட்ட பருவகாலங்கள், குறிப்பிட்ட கால நேரங்கள்,  கரு உருவாவதற்கான சரியான நேரம் என எதையும் கணக்கில்  எடுப்பதில்லை. இதற்காகவெல்லாம்  அவன் தான் காத்திருக்க இயலாதவனாக இருக்கிறான்.
   

 இருவர் கூடுகையில் இன்பத்தை அதிகம் துய்ப்பது பெண்ணல்லவா?  கூடலுக்கு முன் கர்வத்துடன் ஒரு வித விலகலுடன் இருக்கும்  பெண் கூடலின்போது  தன் அகங்காரத்தை முற்றிலும் விட்டு, தன்னை ஒரு உணவென தன் இணைக்கு முழுமையாக  சமர்ப்பிக்கின்றாள். அதனால் அவள் மனம் இன்பம் முழுதையும் கிரகித்துக்கொள்கிறது என நினக்கிறேன். கூடுகையில் தன் அகங்காரத்தை முழுதும் குறைத்துக்கொள்ள ஆணென நினைப்பிருக்கும் ஒருவனால் முடிவதில்லை. ஆண் அப்போது  தன்னை இரை எடுக்கும் விலங்காக கருதி செயல்படுகிறான். அதில் இருக்கும் ஒரு ஆணவம் அவன் முழு இன்பத்தை உணர விடாமல் தடுக்கிறது. அர்ச்சுனன் இதற்கு முன் பல பெண்களுடன் கூடியிருந்தாலும், இன்றுதான் தான் ஆண் என்ற எண்ணத்தை விட்டு உலூபியிடம் கூடுகிறான். அதற்கு அவன் அருந்தியிருக்கும் நாக நஞ்சு கலந்த பானம், அவன் தன் பாதுக்காப்பு அரண்களை எல்லாம் விடுத்து இருத்தல், அல்லது அவன் கண்ட எழுவரின் உயிர் சமர்ப்பனம் என்ற நிகழ்வு போன்ற ஏதாவது  காரணமாக இருக்கலாம். அதனால் அவன் இன்று முழுமையான கூடலின் இன்பத்தை அறிகிறான்.  மீண்டும் இந்த முழுமை இன்பத்தை பெற தன் ஆண்தன்மையை இழந்து பெண்ணாக வேண்டியிருக்குமோ என நினைக்கிறான்.

தண்டபாணி துரைவேல்

Friday, October 2, 2015

நெளிதல்

அலையுலகு என்கிற தலைப்பிற்கு முற்றிலும் அர்த்தம் கொடுக்கும் பகுதி இன்று . இது துரோணர்  கிருபி ஒரு குகையில் இணைவதை நினைவூட்டியது , அது சிஷ்யனுக்கும் தொடர்கிறது. 

//என் உடல் முற்றிலும் அரவென ஆகவில்லை. இயல்பான மூச்சுடன் நீரில் மீனென அவள் செல்லும்போது களைத்தும் உயிர்த்தும் நான் இடர்கொள்கிறேன்.// தன்னிலையில் சொல்லப் படும் வாக்கியம் முதல் முறையாக வெண் முரசில் வருகிறது என எனக்குத் தோன்றுகிறது. 

கிருஷ்?னன்

தன்னையறிதல்

ஜெ,

இன்றைய காண்டீபம் [அர்ஜுனனின் புற்றில்லப்புகுதல் ]எழுத்துக்கலையின் உச்சம்.  நேற்றுதான் நித்யா ‘சரூபசித்தி’ பற்றி சொன்னதை படித்துக்கொண்டிருந்தேன். அர்ஜுனனும் உலூபியும் தன்னையறியும்போது வாசகனும் தன்னையறிகிறான்.  

இன்னொரு coincidence:
நித்யாவின் மாணவி Deb எழுதிய கவிதையை - இன்று பகிர்ந்திருக்கிறார் Scott Teitsworth :)

Moving Through the Desert

The snake winds his body

over rocky ground,

sand pulling

on shedding skin,

scraping off the slough

of old desire,

the life now too small,

and unable to breathe

he winds and pulls,

pushing forward,

moving into open breath,

out of constriction,

leaving behind

that last moment,

the tightness,

into this touch,

the limitless air.
சீனிவாசன்