Sunday, October 4, 2015

கதையின் தேவதை

அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

பக்கத்துவீட்டு அக்கா “இந்த கதையை படிச்சி இருக்கிறயா” என்று அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் கொடுத்தார். பொன்னியின் செல்வனை கையில்தொடுவதே அதுதான் முதல்முறை.  முழுவதையும் படித்து முடித்தப்பின்பு “நான் நானில்லை“ என்று உணர்ந்தேன்.

காட்டுமன்னார்குடிக்கு அருகில் உள்ள வயலில் இருந்து வைக்கோல் ஏற்றிச்செல்லும் வைக்கோல்வண்டியின் மேல் ஏறிபடுத்துக்கொண்டு வடலூர் அருகில் உள்ள வீட்டுக்கு வீராணம் ஏரிக்கரையில் பயணிக்கின்றேன். அப்பாவும், மாமாவும் வண்டிக்கு பின்னால் நடந்துவருகிறார்கள். வானத்தில் பாதிநிலா, இடதுகைப்புறம், குளிரை அலைகரங்களில் அள்ளி அள்ளிவந்து கொட்டிப்போகும் வீரணம், வலப்புறம் மரங்கள் ஊர்கள் கோயில்கள் என வானத்தில் மிதுந்துவரும் நிழல்களாய் இருக்கும் நிஜங்கள். நான் வைக்கோல் வண்டிமீதா பயணிக்கின்றேன்?, ஆயிரம் ஆண்டுக்கு முன்னால் வந்தியதேவன் பயணித்த குதிரையின்மீது பயணிக்கிறேன்.

கதைதேவதை எத்தனை பெரியவள், இனிமையானவள் என்பதை அன்று அறிந்தேன். எத்தனையோ முறை பொன்னியின் செல்வன் படித்துவிட்டேன். எத்தனையோ முறை வீரணம் கரையில் பயணித்துவிட்டேன். ஒருமாலைப்பொழுதில் அலையடிக்கும் வீராணத்தைப்பார்த்தப்படி உட்கார்ந்து பொன்னியின்செல்வன் படிக்கும் ஆசைமட்டும் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. அது ஒரு உலகம், மாபெரும் உலகம், நான் இருக்கும் இந்த சின்னஞ்சிறு முட்டை உலகத்தை உடைத்துக்கொண்டு அங்கு போக இந்த உலகம் விடுவதில்லை. இந்த சின்ன முட்டை உலகத்தில் இன்னும் இன்னும் என்று நெருக்கி நெருக்கி அழுத்தி வைக்கப்படும் இச்சைகளின் வாழ்க்கையியன் பருப்பொருள்களால் மறைந்து நான்  எங்கு இருக்கிறேன் என்று என்னாலும் என்னைக் காணமுடியாது.

எத்தனை எத்தனை இடநெருக்கடியில் இருந்தால் என்ன?  எவ்வளவு ஆழத்தில் கிடந்தால் என்ன? எனது சின்னஞ்சிறு உலகின் முட்டையின்தோல் எந்த எஃகால் வடிக்கப்பட்டு இருந்தால் என்ன? கதைகளின் தேவதை தனது உலகுக்கு நொடியில் வெண்பட்டு சிறிகில் ஏற்றிக்கொண்டுச்சென்றுவிடுகிறாள்.

சில ஆண்டுக்கு முன்னால் ஒருநாள் பைக்கில் ரங்கம்மாள் உடல் வீராணம் ஏரியில் பறந்துக்கொண்டு இருந்தபோது “என்ன பேச்சையே காணும், எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்” என்றாள்.

”ஆயிரம் ஆண்டுக்கு முன்னால் பயணித்த உலகில்”  

 ”யார்கூட”

“இம்” என்று சற்றே கழுத்தை திரும்பினேன். தோளைப்ற்றி கழுத்தை நீட்டி முகம்காட்டி சிரிக்கிறாள் என்குந்தவைதேவி.  வீரணம் ஏரிக்கரையில் எங்களை சுமந்து ஓடிக்கொண்டு இருக்கிறது இரும்புக்குதிரை.

இப்பொழுது எல்லாம் கங்கைகரையில் உட்கார்ந்து பிரயாகைப்படிக்கவேண்டும் என்று ஆசை வருகிறது. வெண்முரசுப்படித்தப்பின்பு வீரணம் சுண்டுவிரல் முனையில் முத்தாகி நிற்கிறது.  நான் அங்கு பெண்ணாகி உலவுகின்றேன். கந்தனே கண்ணனாய், கண்ணனே கந்தனாய். 

பெரியது கேட்கும் முருகபெருமானிடம் தொண்டர் உள்ளம் என்று அன்னை ஓளவை சொல்வார். கதைகளின் தெய்வமாகிய புராணிகை பெரியவள்தான். அவளைவிடவும் பெரியது கதைகேட்கும் இதயங்கள்தான் என்று இன்று உணர்கின்றேன்.

புராணிகையின் வயிற்றில் தோன்றியவன் பிரம்மன், கனிந்த முலைகளில் தோன்றியவன் விஷ்ணு, கண்களில் தோன்றியவன் சிவன் என்று  சொல்லும் இடத்தில் புடவியாகி நிற்கும் கதையின்  பிரபஞ்சவடிவத்தைக் கண்டேன்டேன். கதையே மாயை, கதையே பரபிரம்மம். அவளே சக்தி, அவளே சிவம், அவளே உருவம், அவளே அருவம். அவள் உள்ளும் புறமும் இருக்கிறாள்.
காலம் காலமாய் கேட்டுவரும் கதையின் உடலை, உயிரை, ஆன்மாவை  அதன் விஸ்வரூபதரிசனத்தை இன்று கண்டேன்.  நன்றி ஜெ.

சுஜயன் சுபகையை உலூபியாகக்கண்டதுபோல், கதைகளின் வழியாக நாம் கதையைக்காணவில்லை, வாழ்க்கையை காண்கின்றோம். கதைகள் குரோதத்தை ஏற்படுத்துவதுபோல் எதிரிக்கூட ஏற்படுத்துவதில்லை. அந்த குரோதமே ஏழாம்  உலகத்தை உருவாக்குகிறது. அந்த ஏழாம் உலகத்தை தாண்டி காமத்தில், பேராகையில், அன்பில், மெய்யறிதலில், அறிதலுக்கு அப்பால் உள்ள மெய்மையில் கதைத்தேவதைத்தள்ளிவிடுகின்றாள். கதை தேவதை ஏழு உலகத்தையும் காட்டி ஏழு உலகத்திற்கும் அழைத்துக்செல்லும் இறைவியாவாள்.  

கதை தேவதையை அறியந்தவருக்கு ஏழு உலகம் இருக்கிறது. அவர்கள் மட்டும் அந்த அந்த கணத்தில் அவர்களின் உலகத்தில் இருக்கிறார்கள்.  .கதையை அறியாதவருக்கு ஏழு உலகம் இல்லை என்பது அப்புறம், அவர்கள் இருக்கும் உலகம்கூட அவர்களது இல்லை. 


அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.