Saturday, October 3, 2015

காமத்தில் பிணைந்து கொள்ளும் நாகங்கள்:


   கடவுள் தான் படைத்த உயிரினங்களுக்கு கொடுத்துள்ள பெரும் பரிசுகளில் முதன்மையானது காம இன்பம். காமத்தை பல்வேறு வகைகளில் உயிரினங்கள் அனுபவிக்கின்றன. பூக்களை மலரவைத்து மகரந்தத்தை கொணர்ந்து  சேர்க்கும் வண்டுக்களின் மூலம் உறவு கொள்ளும் தாவரங்கள் அப்போது இன்பத்தை நுகர வில்லை என நாம் சொல்ல முடியுமா? விலங்கினங்கள், தாவரங்களுக்கு இல்லாத,  தம் புலன்களின் மூலம் காமத்தை இன்னும் பெரிதாக அனுபவிக்கின்றன. பார்த்து கேட்டு முகர்ந்து சுவைத்து என அவை ஈடுபடுவது  எல்லாம் காமத்தின் முன் விளையாடல்களுக்கு மட்டுமே. காம நுகர்வின் போதான உச்ச  இன்பம் தொடுகை உணர்வின்  வழியே மட்டுமே அனுபவிக்கப்படுகிறது.


  புணர்வின்போது தொடுகையின் இன்பம் என்பது கிட்டத்தட்ட அனைத்து விலங்கினங்களுக்கும் தங்கள் பிறப்புறுப்பில் மட்டுமே நிகழ்கின்றது. பெரிய யானையாக இருந்தாலும்  சிறு சுண்டெலியாக இருந்தாலும் அப்படித்தான் இருக்கிறது. அணைத்தல் என்பதுகூட இல்லை. அதுவும் பெண் விலங்குகள் ஆணை அப்போது வேறு இடங்களில் தொடுகிறதா எனக்கூட தெரியவில்லை. பெரும்பாலும் பெண் விலங்குகள் வன்புணர்வு செய்யப்பட்டவை போன்றே காட்டிக்கொள்கின்றன.


   ஆனால் அதற்கு முற்றிலும் விதிவிலக்கானது நாகங்களின் கூடல். அவை தன்காமத்தை முழுதுடலிலும் அடைகின்றன. ஆயிரம் கால் பூச்சிகளில் நிகழ்வது போன்றது அல்ல அது. ஒரு பூச்சியின் மேல் ஒரு பூச்சி அமர்ந்திருக்கும் என்றாலும் அது தழுவல் இல்லை. கீழிருக்கும் பெண்பூச்சி ஆண்பூச்சியை அணைக்கிறதா என்ன? ஆனால் நாகம் தன் முழுதுடலாலும் தன் இணையை தழுவிக்கொள்கிறது. தன் முழுதுடலையும் தன் இணையுடலுடன் ஐக்கியப்படுத்திகொள்ள வேண்டும் என்ற பேராவலை அவற்றின் பிணைவில் காண்கிறோம். தன் முழு உடலிலும் காமத்தை விரித்து அனுபவிக்கின்றன. காம நுகர்வில் அதிகபட்ச தொடுகை நாகங்களுக்கிடையேதான் நடைபெறுகிறது. 


   மனிதன் குரங்கிலிருந்து வந்தவன். குரங்குகள் கட்டித்தழுவவதில்லை. ஆனால் மனிதன் சிந்தனைத் திறன் கொண்டவன். அவன் தன் இன்பங்களை பெருக்கிக்கொள்பவன்.  விதவிதமான வண்ண ஒளிகளின் மூலம் தன் காட்சி இன்பத்தையும், பல்வேறு இசைகளை உருவாக்கி செவி இன்பத்தையும்,  உணவுகளில் பலவித சுவைகளை சேர்ந்த்து நாவின்பத்தையும் பெருக்கிக்கொண்டான்.  அவனுக்கு அதிகபட்ச இன்பத்தை தரும் காம இன்பத்தை பெருக்காமல் விடுவானா? காம முன்விளையாடல்களில் அவன் இன்பத்தை பலவாறு அடைந்தாலும், இறுதியாக இணையுடன் கூடுகையில் அவன் வெறும் உடலாக தொடுகை உணர்வோடு மட்டும் நிற்கிறான்.   அப்போது அவன் தழுவுதல் என்பதன் மூலம் தொடுகை இன்பத்தை பெருக்கிக்கொள்கிறான். அப்போது அவன் மற்ற விலங்குகள் போல் இல்லாமல் தன் தொடுகை இன்பத்தை பிறப்புறுப்பு மட்டும் என்பதல்லாமல் உடல் முழுதுமாக உணர்கிறான். பிறப்புறுப்பில் அவ்வின்பம் இறுதியில் குவிகிறது.


   இன்று வெண்முரசில்,  தழுவுதலில் நாகங்களை நினைவு கூர்ந்திருப்பது நான் புதிதாய் அறிந்தது என்றாலும்  படித்தபின் அதன் பொருத்தத்தை உடன் உணர்ந்துகொண்டேன். தழுவுதலின் இன்பத்தை மனிதனை விட அறிந்த ஒரே விலங்கினம் பாம்பு அல்லவா? கூடுகையில் மனிதன் இரு கைகள் இரு கால்கள், எஞ்சியுள்ள தலை அமைந்த உடல் என ஐந்து நாகங்களாக எழுந்து இணையின் உடலில் எழும் அவ்வாறான  ஐந்து நாகங்களை ஒன்றை ஒன்று தழுவி பிணைந்து காணும் தொடுகை இன்பம் மிகப்பெரிது. அதனால்தான் மற்ற விலங்குகளைப்போல் அல்லாமல் மனிதன் தன் இணையுடன்  கூடி முயங்க, குறிப்பிட்ட பருவகாலங்கள், குறிப்பிட்ட கால நேரங்கள்,  கரு உருவாவதற்கான சரியான நேரம் என எதையும் கணக்கில்  எடுப்பதில்லை. இதற்காகவெல்லாம்  அவன் தான் காத்திருக்க இயலாதவனாக இருக்கிறான்.
   

 இருவர் கூடுகையில் இன்பத்தை அதிகம் துய்ப்பது பெண்ணல்லவா?  கூடலுக்கு முன் கர்வத்துடன் ஒரு வித விலகலுடன் இருக்கும்  பெண் கூடலின்போது  தன் அகங்காரத்தை முற்றிலும் விட்டு, தன்னை ஒரு உணவென தன் இணைக்கு முழுமையாக  சமர்ப்பிக்கின்றாள். அதனால் அவள் மனம் இன்பம் முழுதையும் கிரகித்துக்கொள்கிறது என நினக்கிறேன். கூடுகையில் தன் அகங்காரத்தை முழுதும் குறைத்துக்கொள்ள ஆணென நினைப்பிருக்கும் ஒருவனால் முடிவதில்லை. ஆண் அப்போது  தன்னை இரை எடுக்கும் விலங்காக கருதி செயல்படுகிறான். அதில் இருக்கும் ஒரு ஆணவம் அவன் முழு இன்பத்தை உணர விடாமல் தடுக்கிறது. அர்ச்சுனன் இதற்கு முன் பல பெண்களுடன் கூடியிருந்தாலும், இன்றுதான் தான் ஆண் என்ற எண்ணத்தை விட்டு உலூபியிடம் கூடுகிறான். அதற்கு அவன் அருந்தியிருக்கும் நாக நஞ்சு கலந்த பானம், அவன் தன் பாதுக்காப்பு அரண்களை எல்லாம் விடுத்து இருத்தல், அல்லது அவன் கண்ட எழுவரின் உயிர் சமர்ப்பனம் என்ற நிகழ்வு போன்ற ஏதாவது  காரணமாக இருக்கலாம். அதனால் அவன் இன்று முழுமையான கூடலின் இன்பத்தை அறிகிறான்.  மீண்டும் இந்த முழுமை இன்பத்தை பெற தன் ஆண்தன்மையை இழந்து பெண்ணாக வேண்டியிருக்குமோ என நினைக்கிறான்.

தண்டபாணி துரைவேல்