Wednesday, August 8, 2018

கதை




அன்புள்ள ஜெ

தருமர் மூத்தவர்களிடம் ஆசி பெற்றது துரியன் சகாதேவனிடம் நேரம் குறித்தது ஆகியவை எல்லாமே நாம் அறிந்த கதைகள்தான். அவற்றை ஒன்றுடன் ஒன்று முடைந்து ஒரே கதையாக்கி ஒன்றில் இருந்து இன்னொன்று ஒன்றின் விளைவாக ஒன்று என்னும் வண்ணம் எழுந்து வருவதாகக் காட்டியிருப்பது இந்நாவலை துப்பறியும் நாவல்களுக்குரிய வேகத்துடன் வாசிக்கவைக்கிறது. வாசிக்க வாசிக்க கதை விரிந்துகொண்டே செல்கிறது. ஒவ்வொருவரும் இன்னொருவர் மீது கொண்டிருக்கும் அன்பும் கசப்பும் இந்தத்தருணத்தில்தான் தெளிவடைகிறது எனத் தோன்றுகிறது

விஜயகுமார்

ஆசி




அன்புள்ள ஜெ


யுதிஷ்டிரர் பீஷ்மர் துரோணர் ஆகியோரைச் சந்தித்து ஆசிபெறும் காட்சி புதுமையாகவும் கூர்மையாகவும அமைந்திருந்தது. உங்களை எப்படிக் கொல்வது என அவர்களிடமே கேட்டுத்தெரிந்துகொண்டார் என்பது கதைக்கு சரியாக இருந்தாலும் பொருந்தாமலும் உள்ளது. அது அவர்கள் துரியோதனனுக்கு விசுவாசமாக இல்லை என்பதையே காட்டும். அதோடு அந்தச்செய்தி துரியோதனனுக்குத் தெரிந்தால் என்ன நினைப்பான் என்பதும் முக்கியமான கேள்வி. இதில் அவர்கள் அச்செய்தியைத்தான் சொல்கிறார்கள். ஆனால் பூடகமாகச் சொல்கிறார்கள். அந்த வரிகள் கவித்துவமாகவும் அமைந்துள்ளன.

அருண்

சந்திப்பு




அன்புள்ள ஜெ

சல்யரை யுதிஷ்டிரர் சந்திக்கும் காட்சி மிகநுட்பமாக உள்ளது. சல்யரிடம் கர்ணனை அவமதித்து எங்களுக்கு உதவுக என்று அவர் கேட்டதாக மகாபாரதத்தில் உள்ளது. அது அவருடைய ஆளுமையையே சின்னதாக ஆக்கிவிடுகிறது. இப்போது அவர் அப்படிச் செய்தது  மிகச்சரியாக நியாயப்படுத்தப்பட்டுள்ளது. அவன் பாண்டவர்களைக் கொல்லக்கூடாது என்ற பயமே சல்யரை அப்படிச் செய்யவைத்தது என்னும்போது அவருடைய குணாதிசயம் மேலே செல்கிறது. அதோடு அவருக்கும் கர்ணனுக்குமான அந்த மர்மமான உறவும் அங்கே அர்த்தமாகிறது. அந்த உரையாடலே ஊசிமுனை போல அமைந்திருக்கிறது.

எஸ். சங்கர்

அறம்





அன்புள்ள ஜெ சார்

துரோணரும் பீஷ்மரும் தங்கள் இறப்பைப்பற்றி யுதிஷ்டிரருக்குச் சொல்லும் இடம் முக்கியமானது. அவர்கள் பூடகமாக தங்கள் முடிவைத் தாங்களே சொல்லிவிடுகிறார்கள். அதோடு அவர்கள் அறம் வாழ்க என்று மட்டும்தான் சொல்கிறார்கள். காந்தாரி சொன்ன அந்த வரியை தொடர்ச்சியாகக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கும் இடம் மிக அழகாக உள்ளது. அறம் பயின்ற எனக்குத் தெரியாத்து கண்களை மூடி வீட்டில் இருக்கும் காந்தாரிக்குத்தெரியும் என்று பீஷ்மர் சொல்லுமிடத்தில் பெரிய பரவசம் ஏற்பட்டது  எனக்கு.

மாதவன்

Tuesday, August 7, 2018

போருக்கு முன்...




ஒரு போருக்குமுன்னால் என்னென்ன ஏற்பாடுகள் நிகழும் என்று விரிவாகச் சொல்லிவந்த நாவல் இப்போது போருக்கு முன்னால் என்னென்ன கவனச்சிதாறல்களும் குழப்பங்களும் நிகழும் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறது. அது உண்மை. ஒவ்வொருவரும் ஒவ்வொருவகையான குழப்பத்தில் சிக்கியிருக்கிறார்கள்.  அவை உருவாக்கும் சிக்கல்கள் வழியாக போருக்கு முன்னால் இரு படைகளும் குட்டையில் நீர் சுழிப்பதுபோல கலங்கிக்கொண்டே இருக்கிறார்கள். அந்தக் கலக்கம் எரிச்சல் எல்லாமே மிக நம்பகமாக இருக்கின்றன. இப்படித்தான் இருக்கும் என்று தோன்றுகின்றன

ராகவ்

யுதிஷ்டிரர்




யுதிஷ்டிரர் போர்க்களத்தில் மறுபக்கம் சென்று பீஷ்மர் துரோணர் ஆகியோரை வணங்கி திரும்பிவருவதாகத்தான் மகாபாரதத்தில் உள்ளது.  அது ஒரு சிறிய செய்தியாகவே சொல்லப்படுகிறது. அப்போது இரு சாராரும் யுதிஷ்டிரரை கோழை, அடிபணியப்போகிறான் என்று வசைபாடுவதாகவும் உள்ளது. அந்த வசைபாடல் மகாபாரதம் உருவாக்கும் ஒரு பெருமையான சித்திரிப்புக்கு எதிரானதாகவே எனக்குப்பட்டது. அதுகூட இடைச்செருகலாக இருக்கலாம் என நினைத்தேன். ஏனென்றால் பாண்டவர்கள் யுதிஷ்டிரரை அப்படி கேவலமாக பேசுவார்களா என்ன? இத்தகைய சின்னச்சின்ன பிசிறுகளை புனைவுகளால் அழகாக ஒருங்கிணைத்து மேலும் கிராண்ட் ஆன ஒரு கதைசொல்லும் முறையை கடைப்பிடித்து வெண்முரசு எழுதப்பட்டுள்ளது. இப்போது யுதிஷ்டிரர் செல்வதும் அவர்கள் அவரை வரவேற்பதும் மிக அற்புதமான சித்திரிப்புகளாக உள்ளன

நரேன்