Wednesday, November 2, 2016

இருளின் மடியில் ஒளிரும் மீன்கள்





யோகியர் அறியும் இருள்:

கிராதத்தின் முதல் பகுதியான கரிபிளந்தெழல் ஒரு யோகியையும், கனவிலாடுபவனையும் இணைத்துத் துவங்கியிருக்கிறது. வைசம்பாயனன் அந்த யோக இருளை யானைகளாகக் காணுமிடம் மிக முக்கியமானது. விழியறியும் இருள் சிறுதிரை. உணர்வறியும் இருள் பெருந்திரை. எண்ணம் அறியும் இருள் இயலாத்திரை.” என்கிறார் பிச்சாண்டவர். நம் மனமும் மூவடுக்குக் கொண்டதே. நனவுள்ளம், கனவுள்ளம், ஆழுள்ளம் ஜாக்ரத், ஸ்வப்னம், சுஷுப்தி. நனவுள்ளம் அறியும் இருள் விழியறிவது. அவ்விருளில் வழி தேற, தொலைந்தால் மீண்டு வர வேதங்கள் துவங்கி பல விளக்குக்கள் உள்ளன.

கனவுள்ளம் அறியும் இருள் உணர்வறிவது. உணர்வால் அறிந்த இருளில் தொலையாமல் வர கனவுகளைத் தொடர்ந்து செல்லும், அவ்வாறு செல்லும் போதே அது கனவு என்பதை உணர்ந்து கொள்ளும் ஒரு தன்னுணர்வே துணை. இந்த தன்னுணர்வும் ஒரு தேர்ந்த குருவின் வழிகாட்டலால் மட்டுமே வழித்துனையாகத் தொடர்ந்து வரும். இல்லாவிட்டால் அவ்வப்போது வந்து வந்து செல்லும். அது மிகப் பெரிய துயர், கனவிற்கும் நிஜத்திற்கும் ஊடாடும் போராட்டம், பிறழ்வு நிலையில் தான் சென்று முடியும். மிகச் சரியாக அன்னை தன் புடவை மறைப்பில் இருந்து அவ்வப்போது எடுத்துக் காட்டும் பொம்மை எனச் சொல்கிறது வெண்முரசு. அந்த தன்னுணர்வே அவ்விருளில் இருந்து வழி காட்டும் நிலவு.

ஆழுள்ளம் அறியும் இருள் எண்ணத்தால் அறிவது. எண்ணம் ஓர் மனதில் எவ்வாறு தோன்றுகிறது என்பதை அறிய இயலாது. நம் எண்ணங்கள் நம்மிடம் வந்து சேர்ந்தவை, அவை குவிந்திருக்கும் ஓர் கூட்டுப் பெருமனமொன்றில் இருந்து தோன்றுபவை. எனவே விளக்க இயலாதவை. ஆனால் தொடர்ந்து சென்றால் நம்மை நமக்கே காட்டும் தன்மை கொண்டவை. அந்த ஆழ்மனம் அறியும் எண்ணங்களின் இருளில் தொலைந்தால் மீள இயலாது. அங்கேயும் தொலையாது வழியறிய இதே தேர்ந்த ஞான குருவின் தொடர்ச்சியான வழிகாட்டலுடன் கூடிய தன்னுணர்வே துணை. ஒரு வகையில் இந்த மூன்றாம் அடுக்கு வரை தொடர்ந்து வரும் தன்னுணர்வே ஒருவரின் தனி அடையாளம் எனலாம். இதுவே தான் யார் என்ற அறிதல். இதன் ஒரு பிரதிபலிப்பே இரண்டாம் அடுக்கின் தன்னுணர்வு. அவ்வடுக்கின் பிரமாதமான நிறப்பிரிகையே முதலடுக்கான நனவுள்ளம் அறியும் நான் என்ற உணர்வு. இருளில் ஒளி தருவது நிலவு தானே. எனவே தான் எண்ணங்கள் அறியும் ஆழுள்ளத்தின் இருளில் வழிகாட்டும் தன்னுணர்வை ஒரு நிலவாகவும், உணர்வுகள் அறியும் இரண்டாம் அடுக்கான கனவுள்ளம் அறியும் இருளில் வழிகாட்டும் அதன் பிரதிபலிப்பான நீர்ப்பாவையை இரண்டாம் நிலவாகவும் யோகியர் அறிகிறார்கள்.

இந்த இரண்டாம் நிலவு வானில் எழ அந்த இருளுக்குச் சென்று சேரும் ஒரு அச்சமின்மை இருக்க வேண்டும். அந்த இருளையும் கண்டடைந்தவர்களே முழுமையை, மெய்மையை உணர்ந்தவர்கள். வைசம்பாயனன் காவியத்தில் வாழ்பவன், கனவுகளில் அலைபவன். அவனால் அந்த இரண்டாம் முற்றிருளுக்கோ, அது நிகழும் தளத்திற்கோ அச்சமின்றி செல்ல இயலவில்லை. அவனால் கனவுக்குள் மட்டுமே செல்ல முடிகிறது. எண்ணத்தை நேரடியாகச் சென்று தொட இயலவில்லை. மற்றொரு வகையில் அவனால் கனவுள்ளத்தின் பகுதியில் அனைத்துக் கற்பனைகளையும் செய்ய இயல்கிறது. ஆழுள்ளத்தின் ஆழமும், இருளும் அச்சமூட்டுகின்றன. அதன் இருப்பை உணரும் அவனால் அதனுள் நுழைந்து அறிய இயலவில்லை. எனவே தான் அவன் கண்ட யானைக்கு ஒரு தந்தமே இருந்தது. அவனுடைய இருளுக்கு ஒரு நிலவு மட்டுமே. அதுவும் நீர்ப்பாவையென அலையடிக்கும் ஒன்று. அவன் காவியத்தின் வழியாக ஆழுள்ளத்தின் இருளை அறிவான். அவனுக்கு ஆசிரியனாக அதே போன்ற ஒற்றை நிலவில் விழி திறந்து அப்பெருவெளியில் சஞ்சாரம் செய்யும் ஒரு காவிய கர்த்தனே அமைய இயலும். அவ்வாறு ஆழுள்ளம் கொள்ளும் இருள் வரை தன் கற்பனை சென்று தொடக்கூடிய ஒரு காவியத்தின் ஆசிரியன். அவரிடமே வைசம்பாயனன் சென்று சேருவான்.


அருணாச்சலம் மகராஜன்