Wednesday, November 2, 2016

அனல்



 

அன்புள்ள ஜெ.

வெண்முரசு கிராதம் படித்துவிட்டு அறிந்ததை எழுதுவது  நன்றாக இருக்கிறது. எதுவும் எழுதாமல் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்போல் உள்ளது. எழுதும்போது எழுத்தில் வருவது ஒன்றாகவும், எழுதாமல் இருக்கும்போது மனதில் தோன்றுவது ஒன்றாகவும் இருக்கிறது. பிரக்ஞாதேவி படுத்தும்பாடு இது என்று நினைக்கிறேன்.

அறியாமையே அறிவாக தெரியும் ஒரு நிலை உள்ளதுஅறியும்போதுதான் அறியாமையில் இருந்தோம் என்பது தெரிகிறது. அறியாமையை அறியும் தருணத்தில் அது அறிவாகிறது. அறிவு உதிக்கும்போது அறியாமை உதிர்கிறது. ஒன்றின் பின்பக்கமாய் மற்றதின் முன்பக்கம். ஒருபக்கத்தை மட்டும் முன்பக்கம் என்று கொண்டு மறுபக்கத்தை பின்பக்கம் என்று தவறவிடுபவனை தவறவிடுகிறாள் பிரக்ஞாதேவி.

விளக்கின் ஒளியில் விளக்கை காண்பதுபொல பிரக்ஞாதேவியின் அருள் இருந்தால்தான் அவள் தனது இருமுகத்தையும் காட்டுவாள் போலும்

விறகில் தீயினன் பாலில்படு நெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் 
உறவு கோல்நட்டு உணர்வுக் கயிற்றினால்
முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே-திருநாவுக்கரசர்.

சித்தம் என்னும் பாற்கடலில் அறிவென்னும் மத்தை நட்டு அன்பு என்னும் கயிற்றால் கடையக்கடைய ஆலகாலமும் அமுதமும் திரண்டுவருவதுபோல் இருமுகம் கொண்டு பிரக்ஞாதேவி வருகின்றாள்.

பிரக்ஞா அன்னையின் இருமுகத்தையும் ஒருமுகம் என கண்டவன் முனிவன். இருள்முகம்வேண்டி ஒளிமுகம் காண்பவன் அரக்கன். ஒளிமுகம்வேண்டி இருள்முகம் கண்டு அஞ்சுபவன் தேவன். ஒருமுகமும் காணமல் நீரின் ஆழத்தில் என ஓவியம் என்றும் எழுத்தென்றும்  மெய்மையை காண்பவன் மனிதன்.

முன்னால் வரும் அக்காவிற்கு அஞ்சி பின்னல்வரும் இளையவளை ஏற்று இன்பவாழ்வில் விழும் ஒரு கூட்டம் அது தன்னை தேவன் என்று மார்த்தட்டிக்கொள்ளும்.  பின்னால்வரும் இளையவளை காணும்போது விழிமூடி குருடாகி மூத்தவளை தாங்கி தன்னை அரக்கன் என அகங்காரம்  கொள்ளும் ஒருகூட்டம். முன்னவளை வெண்ணீறு அணிந்தவன் பிள்ளை என்று போற்றி, பின்னவளை விண்ணளந்தவன் மலர்மார்பில் உறையும் திருமகள் என்று போற்றி இருவரின் இயல்பில்விளையும் உண்மையை மட்டும் அறியும் ஒருதிருக்கூட்டம் அதுவே மெய்மையை அறிந்த ஞானக்கூட்டம், அந்த கூட்டத்தின் முன்பு பிரக்ஞாதேவி அருள்மழைபொழிகின்றாள். அவள் அருள்மழையில் நினைந்தவர் உதடுகளில் புன்னகையாய் மலர்கின்றாள் பிரக்ஞாதேவி. அந்த புன்னகைப்பூத்தவர் முனிவர்கள், அவர்கள் இதயத்தில் விண்ணளந்தவனும் தன்னை அளந்தவனும் கனியென கனிகின்றார்கள். சித்திக்கப்பெறுகின்றார்கள்.

மானிடர்கள் பிரக்ஞையே இல்லாமல் வாழ்கிறார்கள். பிரக்ஞாதேவி மானிடர் முன்பு சுழலும் வேகம் அத்தனை. தேவர்கள் பிரக்ஞை முழுவதும் பொன்பொருள்போகத்தில் இருக்கிறது அவர்கள் முன் இருள்முகம் வரும்போதெல்லாம் அஞ்சிவிலகிவிடுகிறார்கள். அரக்கர்கள் பிரக்ஞை கீழ்மறமும் கொடுமையும் மடமையும் கொண்டு இருக்கிறது அவர்கள் கண்களுக்கு இருள்முகம் மட்டுமே தெரிகிறது. முனிவர்கள் பிரக்ஞை இருளில் ஒளியறிகிறது. ஒளியில் உள்ள இருள் அறிகிறது. இரண்டையும் மையப்படுத்தி இராப்பகலற்ற நிலையில் நிற்கின்றார்கள். அதனால் அனைவர் முன்னும் சுழன்றுக்கொண்டே இருக்கும் பிரக்ஞாதேவி முனிவர்கள் முன் சுழலமுடியாமல் நின்றுவிடுகின்றாள். முனிவர்களின் புன்னகை ஒரு வெற்றிப்புன்னகை.    

பிரக்ஞாதேவியின் இருமுகத்தையும் ஒருமுகமாய் முனிந்த முனிவர்கள் காட்சி அற்புத ஓவியம்

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்