Saturday, October 6, 2018

வெண்முரசின் கட்டமைப்பு -கடிதம்


வெண்முரசின் கட்டமைப்பு


அன்புள்ள ஜெ

வெண்முரசின் கட்டமைப்பு பற்றி நாகராஜ் எழுதிய கடிதம் எனக்கு மிகமிக உதவியாக இருந்தது. நான் இதுவரைக்கும் கடிதம் எதுவும் எழுதியதில்லை. அனைத்தையும் தேடித்தேடி வாசிப்பதுடன் சரி. புரிந்துகொள்வதற்காக முயற்சி செய்துகொண்டே இருப்பேன். எனக்கு இந்தத்தளத்தில் வரும் கடிதங்கள் மிக உதவியானவை. சிலசமயம் தெரியாத செய்திகளை அவை சொல்கின்றன.சிலசமயம் நாம் பார்க்காத கோணங்களைக் காட்டுகின்றன

நீண்டகட்டுரைகளை நிறுத்தி நிறுத்தி வாசிக்கையில் பெரிய திறப்புகள். அவை ஒட்டுமொத்தமாக நாவல்களை வாசித்து மதிப்பிடுவதற்கு உதவுகின்றன. உதாரணமாக நான் நீலம் நாவலை பலமுறை வாசித்திருக்கிறேன்.பல இடங்களை மனப்பாடமாகவே சொல்லமுடியும். ஆனால் ராதையின் பிரியமும் கம்சனின் வெறுப்பும்தான் அதன் இரண்டு சரடுகள் என்று இக்கட்டுரையிலே வாசித்தபோது திகைத்தேன்

அதேபோல சில பொருட்களில் அதன் ஒட்டுமொத்த வடிவமும் ஒவ்வொரு துளியிலும் இருக்கும் என்பதும் வெண்முரசில் அந்த இயல்பு உண்டு என்றும் ஆகவேதான் ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சிறுகதைபோல் இருக்கிறது என்றும் வாசித்தபோது சிலிர்ப்பு ஏற்பட்டது. ஏனென்றால் இதை நானே கொஞ்சம் தெளிவில்லாமல் உணர்ந்திருந்தேன்

நன்றி

மைதிலி ராஜகோபால்