Thursday, January 10, 2019

அகங்காரத்தை எதிர்கொள்வது



  உயிர்களுக்கு  அடிப்படைத் தேவைக்கான உணவு உறைவிடம் போன்றவற்றின்  போதாமைகளுக்காக அவற்றுக்கிடையே பூசல்கள் எழுவது எப்போதும் நிகழ்வது. அடுத்ததாக காமம் சார்ந்த பூசல்கள்.  ஆனால் மனித குலம் அடிப்படைத்தேவைகளை தன் அறிவுக்கூர்மையினால் எளிதில் அடைந்துவிடக்கூடியதாக இருக்கிறது. உலகில் மனிதர்கள் அனைவருக்குமான உணவு எப்போதும் இருந்துகொண்டு இருக்கிறது. போதுமான உறைவிடம் அமைவதில் அதிக சிக்கல்கள் ஏதுமில்லை. காமம் சார்ந்த சிக்கல்கள் வராமால் இருக்க இல்லறம் என்ற ஒன்றை பண்பாடாகக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் மற்ற விலங்குகளைவிட பூசல்கள் அதிகம் கொண்டவர்களாக மனிதர்கள் இருக்கிறார்கள்.  

    
குருவுக்கும் அவர் அடி பணிந்திருந்த  சீடனுக்கும் இடையில், தந்தைக்கும் அவரின் தோன்றலான மகனுக்கும் இடையில், தாயுக்கும் அவள் மறுவடிவென இருக்கும் மகளுக்கும் இடையில்,  நெருங்கிப் பழகும்  நண்பர்களுக்கிடையில்,  ஒன்றென இறுதிநாள் வரை சேர்ந்து வாழ உறுதிபூண்டிருக்கும் கணவன் மனைவிக்கு இடையில் என  எவர் இரண்டு நபர்களுக்கு இடையே வேண்டுமானாலும் பூசல்கள் தோன்றுகின்றன. இந்தப் பூசல்கள் அடிப்படைத் தேவைகளுக்கென மட்டுமே அமைவது அரிதிலும் அரிது.  இந்தப் பூசல்களுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.  ஆய்ந்து பார்க்கும்போது அனத்துக்கும் அடிப்படைக் காரணமாக அமைவது அவரவர்களின் அகங்காரங்களே. நான் என்று தன்னை அறிகையில் தோன்றும் அகங்காரம் ஒருவன் உயிர் உள்ளவரை பீடித்திருக்கிறது. அது அறிவுமுதிரா சிறு குழந்தைகளிடம் வெளிப்படுகிறது. முதிர்ந்து தளர்ந்த வயோதிகர்களையும் பீடித்திருக்கிறது. அதுவே ஒருவர் மனதை இயக்குகிறது. தன்னை உயர்த்திக்கொள்ள செல்வங்களைச் சேர்க்கிறது. பதவிகளை நாடுகிறது. புகழினைத் தேடுகிறது. புலனின்பங்களை பெருக்கிக்கொள்கிறது. இவற்றுக்கு தடையாக இருப்பவர்களை எதிரி எனக்கொண்டு அவர்களிடம்  பூசலிட வைக்கிறது.    சிலசமயம் மனிதர்கள் அகங்காரங்கள் ஒன்றிணைந்து குழுக்களாக மாறுவது உண்டு. நாடு, மதம்,  மொழி,  இனம்,  குலம் போன்றவற்றின் பேரால் மனிதர்களின் அகங்காரம் ஒன்றிணைந்து கூட்டாக ஆகின்றன. பேரழிவைத் தரும் போர்களுக்கு காரணமாகி இருக்கின்றன.
   
 மன்னர்கள், வீரர்கள் பலர் குருஷேத்திரப்போரில் கலந்துகொள்வதற்கு  அறத்தின் பேரைச் சொல்லிக்கொண்டாலும் அவர்கள் அணி பிரிந்து  நிற்பதற்கு காரணமாக இருப்பது அவர்களது அகங்காரம் மட்டுமே என்பதை வெண்முரசில் நாம் கண்டு வருகிறோம். அகங்கார மோதல் எதிரெதிர் அணிகளுக்கிடையில் மட்டுமென இல்லாமல் ஒரே அணி இடமிருப்வர்களுக்கிடையேயும் நிகழ்கிறது. அது போரின் பல நிகழ்வுகளுக்கு காரணமாக அமையலாம் எனத் தோன்றுகிறது. கர்ணனை இதுவரை போரில் சேர்க்காமல் இருந்ததற்கு வெறும் பீஷ்மரை மட்டும் குறை கூற முடியாது. பல மன்னர்களின் அகங்காரம் அதற்கு காரணமாக இருந்தது. பீஷ்மர் அந்த மன்னர்களின் நோக்கத்தை பிரதிபலிப்பவராக தன்னைக் காட்டிக்கொண்டார். அவருக்கென்று இதற்கு வேறு காரணம் இருந்திருக்கலாம். பீஷ்மர் வீழ்ந்துவிட்டார். கர்ணனை போரில்  கலந்துகொள்ளக்கூடாது என்ற சொன்ன பல மன்னர்கள் மாண்டுவிட்டனர். ஆனால் இப்போதும் கர்ணனை சேர்த்துக்கொள்ளுதலுக்கு பெரிய அரசு சூழ்கை தேவைப்படுகிறது. இப்போது அதற்கு தடையாக  துரோணரின் அகங்காரம் இருக்கும் என நினைக்கிறார்கள். 

துச்சாதனன் “ஆசிரியருக்கு மூத்தவர் கர்ணன் மேலுள்ள கசப்பு அனைவரும் அறிந்தது. அவரது கல்விநிலையிலிருந்து துரத்தப்பட்டவர் அங்கர். அங்கிருந்து சென்று மேலும் சிறந்த ஆசிரியரிடம் கற்று, முதன்மை வீரர் என்று ஆகி திரும்பி வந்திருக்கிறார். இந்தப் படைக்களத்தில் அவர் நின்றிருப்பதே ஆசிரியரின் தோல்வி என கருதப்படும். இக்களத்தில் அங்கர் அர்ஜுனனை கொல்வாரென்றால் என்றென்றும் வரலாற்றில் இழிசொல்லாகவே ஆசிரியரின் பெயர் நின்றிருக்கும். அங்கரின் புகழ் வரலாறு பின்னாளில் எழுதப்படுகையில் அதில் ஒரு கறையென அவர் இருப்பார். நம் எவரைவிடவும் அதை அவரே அறிந்திருப்பார்” என்றான்.

“ஒவ்வொருவரையும் ஒரு மையஉணர்வு ஆட்டுவிக்கிறது. சிலரை விழைவு. சிலரை அச்சம். சிலரை விலக்கம். கல்வி மேம்பட்டவர்கள் எளிய ஆணவத்தால் இயக்கப்படுபவர்கள். அவர்களின் கல்வி மிகுந்தோறும் ஆணவம் சிறுமைகொள்கிறது. ஆசிரியர் துரோணரும் அவ்வாறே.”
   
ஒருவன் தன்னுள் பெருக்கிகொள்ளும் அகங்காரத்தை அவர்களின் சில உணர்வுகள் மட்டுப்படுத்தக்கூடும். இயற்கையின் பெரும் சக்தி முன் அவன் மண்டியிட்டே ஆகவேண்டிய சில சந்தர்ப்பங்கள் வரும். உயிராபத்தின்போதும், உயிர் காக்க, பசி தீர உணவின்றி தவிக்கும் போது,  தான் பாசம் கொண்ட ஒருவரின் நலன் பொருட்டு என தன் அகங்காரத்தை குறைத்துக்கொள்வதும் உண்டு. பிள்ளைப்பாசத்தை முன் வைத்து துரோணரின் அகங்காரத்தை எதிர்கொள்ளலாம் என சகுனி தெரிவிக்கிறார். 

“விழைவு கொண்டோர் சினத்தாலும், அச்சம் கொண்டோர் தனிமையாலும் நிகர் செய்யப்பட்டிருப்பார்கள். ஆணவம் கொண்டவரிடம் அதை நிகர் செய்வது பற்று. ஆசிரியர் துரோணரிடம் அது மைந்தன் மீது கொண்ட பேரன்பு.”

  ஒரு மனிதனுடன் மோதும்போது அவனுடைய றிவோடு அல்லது திறனோடு மோதுகிறோம் எனக் கருதாமல் அவன் அகங்காரத்தொட்டு மோதுகிறோம் என்பதைக் கருத்தில் கொண்டால் அவனை வீழ்த்துவது அல்லது அவனை தன் விருப்பத்துக்கு இணங்க வைப்பதற்கான வழி கிடைக்கும். துரோணரின் அகங்காரத்தை சகுனி கருத்தில் கொண்டு அதை பணிய வைக்க உத்தியாக அவரின் பிள்ளைப்பாசத்தை பயன்படுத்துகிறார்.  ஆனால் இதே விஷயத்தை போரில் எதிர் நிற்பவர்களும் பயன்படுத்தக்கூடும் என்பதை சகுனி கவனித்தாரா எனத் தெரியவில்லை.

தண்டபாணி துரைவேல்