Thursday, January 24, 2019

பைரவி



அன்புள்ள ஜெ,

மழைப்பாடலில் குந்தியின் முலைப்பால் ராதையிடம் பைரவி அன்னை வாயிலாகச் சென்று சேரும் ஒரு கவித்துமான அத்தியாயம் உண்டு. அதன் கவித்துவத்தையும் மீறி ஒரு கேள்வி அன்றே தொக்கி நின்றது. காரணம் பைரவம். அதுவரையிலான வெண்முரசு வரிசையில், ஏன் இன்று வரையிலுமே கூட வெண்முரசில் வந்திருக்கும் பல சிறப்பான விலங்குகளில் ஒரு முறை மட்டுமே வந்த ஒரு விலங்கு நாய் மட்டுமே. மிக அதிகமாக கரியும், பரியும் வந்துள்ளன. வராகமும், ஓநாயும், நரியும், சீயமும் வந்துள்ளன. ஆனால் நாய் ஒரே முறை தான் வந்துள்ளது,மழைப்பாடலில். அதுவே என் கேள்வியாக இருந்து, ஏன் பைரவம்? வெண்முரசு கர்ணனை வேழத்துடன் ஒப்பிட்டிருக்கிறது. ஆயினும் அவன் பிறந்த தருணத்தில் மட்டுமே நாயுடன் இணைத்திருக்கிறது. அதன் விடை கார்கடலில் கர்ணனும், குந்தியும் சந்திக்கும் இரு அத்தியாயங்களிலும் கிடைத்தது. அவன் குந்தியிடம், "அன்பை அளவிடுபவர்கள் அன்பை அறிவதில்லை", என்கிறான். அவனை கர்ணனாக ஆக்கிய நெறிகள் என செஞ்சோற்றுக்கடனையும், எதிர்பார்ப்பற்ற பரிபூரண அர்பணிப்புடன் கூடிய அன்பையும் கூறலாம். பைரவத்தை விட வேறு எது இவற்றை குறிக்கவியலும்!!

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்